Sunday, November 27, 2011

யாழ் பல்கலையில் படையினர் சுற்றி வளைத்திருக்க மாவீரர்களுக்கு ஈகச்சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழீழ மண்ணுக்கும், மக்களுமாக உயிர்நீத்த மாவீரர்களுக்கு மாணவர்கள் தமது அஞ்சலிகளை எணர்வெழுச்சியுடன் செலுத்தியுள்ளனர்.


சிறீலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் சுற்றி வளைப்புக்கு மத்தியிலும் இன்று மாலை சரியாக 6.05 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதியின் தொடர் மாடியின் நான்கு பகுதிகளிலும், நீர்த்தாங்கியிலும் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாணவர்களால் ஈகச்சுடரேற்றி ஆராதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அங்காங்கு மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் பிரதான சுடர் யாழ்ப்பாண நகர் பார்க்கும் படியாக 80 அடி உயரத்தில் ஏற்றப்பட்டு இருந்ததுடன், மாணவர்கள் மௌனப்பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

சிறீலங்கா படையினரின் முற்கூட்டிய பாதுகாப்பு கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மத்தியில் நீண்ட நேரம் நின்றெரியும் கற்பூர தீபமேற்றி மாணவர்கள் செய்து கொண்ட ஆராதனை நிச்சயம் ஈழம் விடியும் என்பதங்கான நம்பிக்கை ஒளி எனவும் மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.

பல்கலைக்கழகத்தின் ஆண்கள் விடுதி மட்டுமன்றி பெண்கள் விடுதி என இரு விடுதிகளிலும் திடீரென சுடர் விட்டெரிந்த தீபங்களை கண்டு ஆக்கிரமிப்புப் படையினரும், புலனாய்வாளர்களும் திக்குமுக்காடி அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். மாணவர்கள் தீபமேற்றி வழிபட்டு, தீபம் அணையாது காத்திருக்கையில் பல்கலைக்குள் ஊடுருவியுள்ள சில புல்லுருவிகள் கொடுத்த தகவலால் அங்கு விரைந்த படைப்புலனாய்வாளர்கள் மற்றும் படைத்துணைக்குழு உறுப்பினர்கள் வாயிற் காவலர்களை தாக்கிவிட்டு, பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி உள்நுளைந்திருக்கின்றனர்.

6.05 முதல் சுவாலைவிட்டெரிந்த அக்கிச் சுடர்களை அணைக்க பல நிமிடங்கள் பிடித்ததாகவும், இதனால் சீற்றமுற்ற அவர்கள் மாணவர்களின் விடுதியினுள் தரித்து விடப்பட்டிருந்த ஈருறுளிகள் மற்றும் உந்துருளிகளை சேதப்படுத்த முயற்சித்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் பிறிதொரு இடத்தில் வெறொரு மாணவர் குழு தமது கைகளால் வரையப்பட்ட மாவீரர் படங்களுக்கு தமிழீழ தாயக உருவில் ஈகச்சுடரேற்றி தமது வணக்கங்களையும் வழிபாடுகளையும் செலுத்தியுள்ளனர்.

பல்கலை வளாகத்தினுள் மறைவிடம் ஒன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள் தமக்காகவும், தமது தாய் நாட்டிற்காகவும் உயிரீகம் செய்த வீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் வணக்கம் செலுத்தினர். சிறீலங்கா படையினரின் கவனம் விடுதியினுள் குவிந்திருக்க, தமது பிரார்த்தனைகளை தாம் மாவீரர் துணையோடு நிறைவேற்றியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயகம் எங்கும் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர்களை நாம் என்றும் மறவோம், என்ன இன்னல் வரினும் நினைவில் நிறுத்தி மறவாது காப்போம் என்பதங்கு இது ஒரு எடுத்து காட்டு எனத் தெரிவித்துள்ள மாணவர்கள் தமிழ் மக்களை துப்பாக்கி முனையில் மௌனிகளாக்கலாம் ஆனால் சிந்தனையிலும் செயற்பாட்டிலும் மௌனிகளாக்குவது கடினமான காரியம் என்பதை சிறீலங்கா புரிந்து கொண்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக பல்கலைச் சூழலில் குவிக்கப்பட்டிருந்த படையினரின் அடாவடிகளுக்கு மத்தியிலும், அயலில் உள்ள வீடுகளுக்குள் படையினர் ஒழிந்து இருந்த நிலையிலும், மிகவும் உணர்வெழுச்சியுடன் ஒற்றுமையாக மாணவர்கள் தமது வீரர்களை நினைவேந்திப் பிரார்த்தித்திருக்கின்றனர்.

இந்தச் செயற்பாடு சிறீலங்கா அரசுக்கு பெரும் மனக்கிலேசத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மாணவர்களை பழிவாங்கும் திட்டத்து அடியெடுத்துக் கொடுத்திருக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை எனத் தெரிவித்துள்ள, தாயகப் பற்றுக்கொண்ட யாழ் பல்கலை பேராசிரியர் ஒருவர், மாணவர்கள் எந்தவித வன்முறைப்பிரயோகமும் இன்றி தமது போர் வீரர்களை நினைவு கூருவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

உள்ளத்தில் உறையும் தெய்வங்களுக்கு தமிழர் மானம் காக்க, தமிழ் நிலம் விடிய, ஈழம் பிறக்க, வீழ்ந்து விதையாகிய மாவீரர் பாதங்கள் பின்தொடரும் இளம் சந்ததியாகிய இவர்கள் நிச்சயம் விடிவுப்பயணத்தை தொடர்வார்கள் என்பது இவ் நினைவு கூரல்கள் மூலம் சிறீலங்கா அரசுக்கு மிகப் பெரும் செய்தியாக தமிழ் மக்களால் மறக்கப்படமுடியாத விடுதலை வீரர்களின் நாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தான் உணர்வதாகவும் குறிப்பிட்ட பேராசிரியர் தெரிவித்தார்.

இன்று மாலை 5:00 மணியளவில் பல்கலை ஆண்கள் விடுதி அயலில் உள்ள வலிகாமம் உயர் பாதுகாப்பு வலய ஏதிலிகளை ஆக்கிரமிப்புப் படை உயரதிகாரிகள் சந்திப்புக்கு அல்லது விசாரணைக்கு அழைப்பதாகக்கூறி தொழில்நுட்பக் கல்லூரி வழளாகத்தினுள் சிறைவைத்திருந்தனர்.

இதன் பின்னர் குறிப்பிட்ட மக்களின் குடிசைகளுக்குள் மறைந்திருந்து கண்காணித்தும் கூட, மாணவர்களின் உணர்வெழுச்சியை படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ள விடுதி அயலவர் ஒருவர், தற்போது பல்கலை ஆண்கள் விடுதி வாயிலில் ஆயுதம் தாங்கிய படையினர் கைகளில் இரும்பு கம்பிகள் மற்றும் பொல்லுகள் சகிதம் ஆவேசமாக அலைந்து திரிவதாகவும், மாணவர்கள் பெரும் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்கலை வளாகத்தை சுற்றி ஊர்திகள் திரிவதாகவும், பல்கலை விடுதி முற்றாக சுற்றி வளைக்கப்பட்டுக் காணப்படுவதாகவும் கூறியுள்ள மாணவர்கள், தம்மீது பழிவாங்கும் செயற்பாடுகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக மனித உரிமை அமைப்புக்களுக்கும், புலம்பெயர்ந்த மக்களிற்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுள்ளனர்.

இதேநேரம் இரவு வேளையில் இனம் தெரியாத இருவர் பல்கலை ஆண்கள் விடுதியின் பின்புறமாக உள்ள உடற்பயிற்சி கற்கை நிலையத்தின் ஊடாக உட்புகுந்து எதையோ எடுத்து சென்றதாக, அல்லது எதையாவது வைத்துவிட்டுச் சென்றிருக்கலாம் என நேரில் பார்த்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

படைப்புலனாய்வாளர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்துவதற்காக, எதையாவது சித்தரிக்க முனைகின்றார்களா என்னும் அச்சம் தம்மிடத்தில் காணப்படுவதாக தெரிவித்துள்ள விடுதி மாணவர்கள், விடுதி தற்போது அச்சம் மிகுந்த பிரதேசமாக காணப்படுவதாகவும், எந்த இடர் வரினும் மாவீரர் நினைவேந்தலை தாம் வெற்றிகரமாக மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தின் ஏனைய பல பகுதிகளிலும், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னியிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் மாவீர்களுக்கான வணக்கமும், சுடரேற்றும் நிகழ்வுகளும் மறைமுக இடங்களிலும், மக்களின் வீடுகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளைவிட அதிகமாக நடைபெற்றுள்ளன.


0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.