Wednesday, November 23, 2011

மாவீரர் நாள்… எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி!

தேசியத் தலைவர் அவர்களால், எங்கள் காவிய நாயகர்களுக்காகப் பிரகடனப்படுத்தப்பட்ட புனித நாள். எங்கள் தேசம் மீண்டும் சிங்கள ஆட்சியாளர்களிடம் வீழும்வரை, மாவீரர் நாள் தமிழீழத்தின் தேசிய எழுச்சி நாளாகக் கோலம் கொண்டது. தமிழீழம் மட்டுமல்ல, தமிழர் வாழு நாடுகளை அது பற்றிப் படர்ந்து பரணி பாட வைத்தது.

இந்த நாள் எமக்கான மகத்துவமான புனித நாளாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றாய் எழுந்து, எழுச்சியுடன் வீர வணக்கம் செய்தார்கள். புலம்பெயர் தேசங்களில் அந்தக் காவிய நாயகர்களது நினைவு வணக்க நாளை எழுச்சியுடன் நடாத்தும் செயற்பாடுகள் தேசியத் தலைவரால் விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களிடம் விடுக்கப்பட்டது.

காலப் பெரு வெள்ளத்தாலும் அழியாத காவிய நாயகர்களை மீள எழுப்பி உறவாடும் நாளை முள்ளிவாய்க்கால் பேரவலம் தாண்டியும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் எழுச்சியுடன் நடாத்தியது வரலாறு.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடி சூடும் தமிழுக்காய், புலிக் கொடியேந்திப் போரில் களமாடி வீழ்ந்த எம் தேசத்தின் வேங்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் மலர்கொண்டு அர்ச்சிக்கும் நிகழ்வு இன்று வரலாற்றுப் பேரவலத்தை எதிர்கொண்டுள்ளது. தமிழ்த் தேசியத் தளங்களைக் குறி வைக்கும் சிங்கள ஆட்சியாளர்கள், இந்த மாவீரர் தினத்தைப் பிளப்பதனூடாக அந்த வீர மறவர்களின் தாயகக் கனவைச் சிதைத்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் எங்கள் மத்தியில் புதிய போர்க் களம் ஒன்றைத் திறந்துள்ளான்.

புரியப்படாத சில காரணங்களுடன் மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்கு எம்மவாகளே எதிரிக்கு உதவுவது போன்று, இதுவரை காலமும் விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களால் நிகழ்த்தப்படுவந்த மாவீரர் தினத்திற்குப் போட்டியாக, புலம்பெயர் நாடெங்கும் போட்டி மாவீரர் தினத்தை நடாத்துவதற்கு முயற்சி செய்கின்றனர்.

தேசியத் தலைவரது கட்டளைகளை மீறுபவன், அவரது சிந்தனைகளை உதாசீனம் செய்பவன், அவரது தமிழீழ விடுதலை இலட்சியத்தை எதிரியுடன் சமரசம் செய்து கொள்பவன் யாராகவிருந்தாலும் அவனைத் தமிழீழம் மன்னிக்காது, வரலாறு மன்னிக்காது, மாவீரர்களும் மன்னிக்கமாட்டார்கள். விடுதலைப் புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட புலம்பெயர் தேசியத் தளத்தைச் சிதைத்துவிட்டு, மறுபடியும் ஒரு மண் குடிசையைத்தானும் கட்டுவதற்கு எவராலும் முடியப் போவதில்லை. அதனால்தான், எதிரி திட்டமிட்ட வகையில் மாவீரர் தினத்தைக் குறிவைத்து நகர்கின்றான்.

எனவே, புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடாமல், மாவீரர் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க, புலம்பெயர் தேசங்கள் தோறும் தொடர்ந்து பணியாற்றும் தமிழ்த் தேசிய தளங்களுடன் இணைந்து நின்று, இன்று நடைபெறும் வரலாற்றுச் சதியினை முறியடிக்க வேண்டும்.

கார்த்திகை மாதம், எங்கள் வல்லமைக்காக எங்கள் மாவீரர்களுக்கு கார்த்திகைப் பூ வைத்து வணங்கும் நாளுக்கான மாதமும் அதுதான். எங்கள் தேசத்தின் அடிமை விலங்ககற்றி, எம்மைச் சுதந்திர வாழ்வுக்குரிய மனிதர்களாக மாற்றம் கொள்ள வைத்து, தேசிய விடுதலைக்காக எம்மைக் களமிறக்கிய வீரத் தமிழன் பிரபாகரன் அவர்களை எமக்குத் தந்த மாதமும் கார்த்திகைக்கான சிறப்பாக உள்ளது.

தமிழினத்தைத் தலை நிமிர வைத்து, அவனியெங்கும் முகவரிகள் பெற்றுத்தந்துவிட்டு, விடுதலைக்கு வித்தான வேங்கைகளைத் தொழுவதற்காகவே, அந்த மாதத்தில் கார்த்திகைப் பூக்களும் சிலிர்த்துப் பூச் சொரியும் அதிசயமும் அந்த மாதத்தின் தனியழகு. தமிழீ மண்ணில் சிங்கள தேசம் நடாத்தி முடித்த இன அழிப்பின் பின்னரும், இந்தக் காந்தள் மலர்கள் கல்லறைப் பூக்களுக்கு அஞ்சலி செலுத்துவதை சிங்களத்தால் இன்றும் தடுக்க முடியாததாக காட்சியாக உள்ளது.

தமிழீழம் தலை சாய்த்து வணங்கிய மாவீரர்களது கல்லறைகளும் சிங்களத்தால் சிதைக்கப்பட்டு, உலகத் தமிழினத்தின் உணர்வுகளுக்குச் சவாலாகிப் போன காலங்களில், நாம் இன்னமும் ஒன்றாகிப் பலமாகி ஒரே தளத்தில் நின்று எங்கள் மாவீரர்களை வணங்குவோம்!

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.