Thursday, November 17, 2011

பெரியமுதலாளி கோத்தபாயவின் உத்தரவில் கடத்தப்பட்ட ஊடகவியலாளரை கடலில் புதைத்தோம்: பாதாள உலகக்குழுத் தலைவர் சாட்சியம்..

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் புதைத்ததாக பாதாள உலகக்குழுவின் தலைவரான தெமட்டகொட சமிந்த தகவல் வெளியிட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தெமட்டகொட சமிந்த குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணையின் போதே தமது தலைமையிலான குழுவே எக்னெலிகொடவின் சடலத்தை புதைத்ததாக கூறியதாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலைகள் தொடர்பாக தெமட்டகொட சமிந்த கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நம்பிக்கைக்குரிய ஒருவராவார்.

தான் புதைத்த சடலம் யாருடையதென்று தனக்குத் தெரியாது என்றும், அன்று மாலையில் ஜய்க் ஹில்டன் விடுதியில் ஒரு விருந்தின் போதே, அது ஒரு இணைய ஊடகவியலாளரினது சடலம் என்று தனது முதலாளி (துமிந்த சில்வா) கூறியதாகவும், அதன்பின்னரே அது பிரகீத்தினுடையது என்று தெரிந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

துமிந்த சில்வாவின் பணிப்பின் பேரில் பல சடலங்களை தான் இவ்வாறு கடலில் புதைத்தாகவும் தெமட்டகொட சமிந்த கூறியுள்ளார். சடலங்களை சாக்குப் பைகளில் சுற்றி கனமான கிரனைட் கற்களை கட்டி கடலில் வீசி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறை சடலங்களை புதைக்கும் போதும், பெரியமுதலாளியின் (கோத்தபாய ராஜபக்ச) உத்தரவின் பேரிலேயே இதைச் செய்வதாக தனது முதலாளி (துமிந்த) கூறுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

"இவர்கள் என்னை எப்படியாவது கொல்லப் போகிறார்கள். நாம் கொலைகளைச் செய்தோம், போதைப்பொருட்களைக் கடத்தினோம்- இது உண்மை. இவை ஒன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. முதலாளி எம்மைக் கேட்டுக் கொண்டதால் செய்தோம்.

இந்த விபரங்களை வெளிப்படுத்துங்கள். சிலநாட்களில் என்னை கொன்று விட்டால், இந்த விபரங்கள் புதைக்கப்பட்டு விடும்." என்றும் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளிடம் தெமட்டகொட சமிந்த கூறியுள்ளதாகவும் 'லங்கா நியூஸ் வெப்' தகவல் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, ஜெனிவாவில் சித்திவதைகளுக்கு எதிரான மாநாட்டில், சிறிலங்காவின் பிரதிநிதியாகப் பங்கேற்ற முன்னாள் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ், பிரகீத் எக்னெலிகொட வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படுவதும், அவரது விடுதலைக்காக நடைபெற்று வரும் பரப்புரைகளும் மோசடியான ஒரு செயற்பாடு என்றும் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும், எக்னெலிகொட எங்கு தப்பிச் சென்றார் என்பது குறித்து எந்த விரிவான தகவல்களையும் மொகான் பீரிஸ் வெளியிடவில்லை.

இந்தநிலையில், மொகான் பீரிஸ் கூறுவது போல, தனது கணவர் வெளிநாடு ஒன்றில் ஒளிந்து கொண்டிருப்பாரேயானால், தங்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கமாட்டார் என்று அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மொகான் பீரிசின் அறிக்கை தம்மைக் கவலையடையச் செய்துள்ளதாகவும், சில தூதரகங்கள் இது குறித்து சிறிலங்கா காவல்துறை மற்றும் சிறிலங்கா அதிபரின் செயலகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

செய்தி-புதினப்பலகை இணையம்....>

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.