Monday, November 07, 2011

இன்றைய சர்வதேச அரசியல் சூழ் நிலையில் தமிழ் மக்களின் அரசியற் பலம் எவ்வாறானது?

தமிழ் மக்களுக்கு சர்வதேச அங்கீகாரம் எந்தளவுக்குத் தேவையானதோ அந்தளவுக்கு இலங்கையில் நகர்வுகளை செய்ய முயலும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தேவையாகவுள்ளது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட போராட்டம் மிகப் பலமான தளத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது என்ற கவலை இலங்கைத்தீவிலும், புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் தொடர்கின்றது.

சர்வதேச சமூகம் தனது பூகோள அரசியல் நலன்களை பேணுவதற்காக புலிகளை அழிக்க வேண்டும் என்ற தேவை அதற்கு இருந்த நிலையில், இந்தப் போராட்டத்தினை சர்வதேசத்தின் துணைகொண்டு அழிப்பதற்கான சந்தர்ப்பமானது இலங்கை அரசாங்கத்துக்குக் கிட்டியது.

இதனையே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை அழிப்பதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டது.

இச் சம்பவங்களை ஏன் தற்போது நினைவுகொள்கின்றோமெனின் அன்று எவ்வாறு தமிழ் மக்களது போராட்டத்தை அழிப்பதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பங்கள் கனிந்திருந்ததோ, அதேபோன்று இன்றைய பூகோள அரசியல் சூழலானது ஒருவகையில் தமிழர்களுக்கு வாய்ப்பான அரசியல் சூழலாக கனிந்துள்ளது என்பதனை எமது மக்களுக்கு வெளிப்படுத்தும், அதன் முக்கியத்துவத்தினை தெரியப்படுத்துவதுமே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

இந்த வகையில் நோக்கினால், சர்வதேசம் பயங்கரவாதத்தை அழிப்பதாக கூறிக் கொண்டாலும் அவர்களைப் பொறுத்தவரையில் உண்மையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமைக்கான காரணம் பூகோள அரசியல் இலாப நட்டக்கணக்கில் அன்றைய சூழ்நிலையில் அதுவே தமது நலன்களுக்கு உகந்தது என அவர்கள் கணக்கிட்டமையே ஆகும். அதுவே போராட்டம் அழிக்கப்படக் காரணமாயிற்று.

புலிகள் அமைப்பானது தேர்தல் அரசியலில் ஈடுபடாததன் காரணமாகவும் வேறு தரப்புக்கள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தமையினாலும் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது ஜனநாயகத்திற்கு மாறானது என சர்வதேசம் வியாக்கியானப்படுத்திய அதேவேளை மக்கள் இப் போராட்டத்தின் பின்னால் நிற்கின்றனர் என்ற யதார்த்தத்தினையும் சர்வதேசம் நிராகரித்தே தனது முடிவுகளை எடுத்திருந்தது.

இதனை வேறுவிதமாக கூறுவதாயின்இ நாங்கள் தனித்தேசம் எனவும் எங்களுக்கு என்று தனித்துவமான இறைமை இருக்கின்றது எனவும் நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் முன்வைக்கப்பட்ட நியாயபூர்வமான விடயங்களுக்குப் பின் மக்கள் உள்ளனர் என்பதற்கான நியாயங்களை புலிகள் முன்வைத்தபோது, விடுதலைப் புலிகள் நேரடியாகத் தேர்தல்களில் பங்கெடுக்காத அமைப்பு என்பதனை சாட்டாகக் கூறி அவர்களது நியாயங்களை சர்வதேசம் நிராகரித்து விட்டது.

இந்த இடத்தில் கவனிக்கத்தக்க விடயம் யாதெனில் போராட்டத்தின் கொள்கையினை சர்வதேசம் நிராகரிக்கவில்லை. எனினும் போராட்டத்தின் இலக்காக முன்வைக்கப்பட்ட கொள்கைகளுக்கு மக்கள் அங்கீகாரம் இல்லை என்று கூறியே போராட்டத்தினை நசுக்க சர்வதேசம் துணை நின்றது.

அடிப்படையில் சர்வதேச நியமங்களின் படி கருத்துச் சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் ஒரு கூறாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஓர் அமைப்பின் கொள்கையினை தவறென வெளியுலகு ஓரங்கட்டிவிட முடியாது. எனினும் ஓரு அமைப்பின் கொள்கைக்கு மக்கள் அங்கீகாரம் இல்லை என்று கூறி அமைப்பின் செயற்பாடுகளை சர்வதேசம் கொச்சைப்படுத்தலாம்.

இதுவே எங்களது போராட்டத்திற்கும் நடந்தது. இது இவ்வாறிருக்க இன்றைய நிலையில் பல கேள்விகள் எம்முன் உள்ளன.

அதில் மிகப் பலமாக இருந்த போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் இப்போராட்டம் தாங்கி நின்ற கொள்கையினை தற்போதைய ஜனநாயக அரசியலுக்குள்ளாக நாம் முன்கொண்டு செல்ல முடியுமா என்ற நம்பிக்கையீனம் பலதரப்புக்களிடத்தில் உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

ஆகவே இது பற்றி கவனத்தினைச் செலுத்தவேண்டியுள்ளது. இச் சந்தர்ப்பத்தில் நாம் தெளிவுறவேண்டிய விடயங்கள் உள்ளன.

அதாவது ஆயுதப் போராட்டத்தின் பின்னர் தமிழ் அரசியலானது முழுக்க முழுக்க ஜனநாயக அரசியலாகவே இருக்கப் போகின்றது.

எனவே தேர்தல் வாயிலாக கொள்கைக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பொன்றை பயங்கரவாதம் எனக்கூறி சர்வதேசம் நிராகரிக்கமுடியாது.

எனவேதான் சொல்லிலும் செயலிலும் தமிழ்த்தேசியக் கொள்கையினை முன்வைக்கின்ற ஒரு தரப்பிற்கு மக்கள் முழுமையாக வாக்களித்தால் அந்தக் கொள்கை எதுவாக இருந்தாலும் எந்தவொரு தரப்பும் அதனை கொச்சைப்படுத்த முடியாது.

காரணம் தேர்தல் வழியாக மக்கள் அங்கீகாரம் இருக்கின்றது குறிப்பிட்ட கொள்கைக்கு ஆதாரமாக இருக்கின்றது என்பதனாலாகும்.

போர் நடைபெற்ற போது நிலவிய அரசியல் சூழல்களைக் காட்டிலும் தமிழ்த் தரப்பு நிலைமைகளை சாதகமாகப் பயன்படுத்தத் தக்க சூழ்நிலை இன்று உலக அரங்கில் காணப்படுகின்றது.

எனவே எம் முன் உள்ள சர்வதேச அரசியல் சூழலை என்னவென நாம் விளங்கிக்கொண்டு பார்ப்போமானால் போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமிழர் தரப்பினை பயங்கரவாதிகள் எனவும் சிங்களத் தரப்பினரை பயங்கரவாதத்தினால் பாதிக்கப்படுபவர்கள் எனவும் சர்வதேசம் காட்டிக்கொண்டது.

ஆனால் இன்றைய சூழலில் நிலைமைகள் மாற்றமடைந்து தமிழ்த் தரப்பானது பாதிக்கப்பட்ட தரப்பாகவும் சிங்களத்தரப்பானது போர்க்குற்றங்களை இழைத்து தமிழர்களின் உரிமைகளை மறுத்துச் செயற்படுகின்ற தரப்பாகவும் சர்வதேசம் ஆராயத்தொடங்கியுள்ளது.

இப்படியாக சர்வதேசத்தில் ஓர் அரசியற் சூழல் மாற்றம் ஏற்பட்டது தமிழ்த் தரப்பிற்கு முதலாவது சாதகமான நிலைமையாகும்.

அடுத்து இலங்கை விவகாரங்களில் அக்கறை கொண்டுள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்கு பிராந்திய வல்லரசான இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் நகர்வுகளை நாம் கூர்ந்துகொள்ள வேண்டியுள்ளது.

இதேவேளை இந்த மூன்று தரப்பு நாடுகளினதும் நகர்வுகளையும் நாம் அவதானிக்கையில் அந் நாடுகள் அவர்கள் சார்ந்த அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவேயுள்ளன.

இவ்வாறாக தமது நலன்களை சாதித்துக்கொள்வதில் மூன்று தரப்பு சர்வதேச நாடுகளிடையேயும் போட்டியுள்ள நிலையில் சில விடயங்களில் இம் மூன்று தரப்பினரிடையேயும் ஒருமித்த கருத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன.

எனினும் இவற்றை சீர்தூக்கிப் பார்க்கையில் போட்டித் தன்மைக்கு உரிய விடயங்களே அதிகமாகவுள்ளன. இப் போட்டியில் ஒவ்வொரு தரப்பும் தமது நலன்களை இலக்காகக் கொண்டே இலங்கை அரசினை வழிநடத்துவதில் கண்ணும் கருத்துமாகவுள்ளன.

அதேவேளை இம் மூன்று சர்வதேசத் தரப்புக்களும் இலங்கையை சரியாகக் கையாள்வதற்கு பல்வேறு உபாயங்களையும் கருவிகளையும் கையாள்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.

இதில் ஒவ்வொரு நாடும் கையாளும் கருவிகளை நோக்குகையில் அதில் வர்த்தகம் மற்றும் நிதி மற்றும் நிதி சாராத உதவிகளை உதாரணப்படுத்திக் கூறமுடியும்.

எனினும் இவ் இடத்தில் தமது நலன்களை சிறந்த முறையில் நிறைவேற்றிக்கொள்வதில் இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டும் நாடுகள் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி, ஊடகச் சுதந்திரம், ஊழல் அற்ற நிர்வாகம் என்பற்றை ஏற்படுத்துதல், என்ற நீண்ட பட்டியலுக்கு உரிய விடயங்களையே அடுக்கிவிடலாம்.

இதே போன்று இலங்கை விவகாரங்களில் அக்கறை செலுத்தும் நாடுகள் இனப்பிரச்சினை என்பதனையும் அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக தாம் முன்வைக்கும் முக்கியமான விடயமாக பயன்படுத்துகின்றன.

மேற்கூறப்பட்ட பட்டியலில் இருக்கத்தக்க விடயங்களில் இலங்கை விவகாரத்தில் அக்கறை செலுத்தும் மேற்குலகானது இலங்கை மீது மிகுந்த அதிருப்தியுடனேயே தனது அரசியல் நகர்வினை முன்னெடுத்து வருகின்றது.

கட்டுரையில் முன்னர் குறிப்பிட்டது போன்று இனப்பிரச்சினைத் தீர்வை மிக முக்கிய விடயமாக இலங்கையில் தலையீட்டைக் கொண்டுள்ள நாடுகள் முன்வைக்கையில், இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி சகல தரப்புக்களும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வு என்று வரும்போது தமிழ்த் தரப்புக்களுக்கு இதில் ஓர் முக்கிய வகிபாகம் கிடைக்கின்றது. மேலும் இனப் பிரச்சினைத் தீர்வு என்பது தலையீடுகளுக்கு உரிய நாடுகளின் விடயத்தில் நின்று பார்க்கையில் எவ்வாறாகப் பெறுமானம் உடையது என்பது கூட மதிப்பிடத்தக்கது.

இலங்கை விவகாரத்தில் தலையிடும் ஒரு சர்வதேசதரப்பு நாடுகள் ஏதாவது ஒருவகையில் தமது நலன்களை நோக்காகக் கொண்டேனும் சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றினை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த விளைவதை சர்வதேச அரங்கில் நாம் காணமுடிகின்றது.

இப்படியாக சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பானது இலங்கை மீது அழுத்தங்களைப் பிரயோகித்து நெருக்கடிகளை ஏற்படுத்த முயல்கையில், அந்த சர்வதேச தரப்புக்குப் போட்டியாக இலங்கையில் தலையிட விரும்பும் சர்வதேச சமூகத்தின் மறு தரப்பொன்று, நெருக்கடியினால் இலங்கைக்கு ஏற்பட்ட அல்லது ஏற்படப்போகும் பாதிப்புக்களை இலகுவாக்கி நெருக்கடிக்குள் தள்ளிய விடயத்தினை தாம் நிவர்த்தி செய்துவிடலாம்.

குறிப்பாக பொருளாதார ரீதியாக ஒரு தரப்பு நாடுகள் கட்டுப்பாட்டை இலங்கை மீது விதிக்க முற்பட்டால், அதிலிருந்து மற்றொரு நாடு(சர்வதேசதரப்பு) தனது இலங்கை மீதான தலையீட்டுப் போட்டிக்காக பொருளாதார உதவிகளை வழங்கி காப்பாற்றி விடமுடியும்.

ஆனால் இலங்கை விவகாரங்கள் மீது அக்கறை கொண்டுள்ள சர்வதேச சமூகத்தின் ஏதாவதொரு தரப்பு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இனப்பிரச்சினை என்ற விடயத்தினை முன்வைக்கின்ற நிலை ஏற்பட்டால் போட்டியடிப்படையில் தலையிடுகின்ற நாடுகள் இவ்விடயத்தை பதில் செயற்பாடு ஒன்றின் மூலம் நிவர்த்திக்கமுடியாத விடயமாகவே அமையும்.

ஒரு தரப்பினால் இனப்பிரச்சினை தீர்வு விடயம் அங்கீகரிக்கப்படுமாயின் மற்றத்தரப்பினால் அதனைத் தமது உதவிகளை வழங்கித் தகர்க்க முடியாது.

எனவே தான் இனப்பிரச்சினை சார்ந்த விடயம் இலங்கையில் விவகாரத்தில் அக்கறை செலுத்தும் நாடுகள், அதனை தமக்குரிய சிறந்த வாய்ப்பாக பயன்படுத்த முயல்கின்ற செயற்பாடானது தமிழ் மக்களுக்கு தமது உரிமைகளை அடைந்து கொள்ளுவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பமாக உருவாகி வருகின்றது.

எனினும் தமிழ் தரப்பு தமக்கென உறுதியான அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்காவிடின் இனப்பிரச்சினை என்கின்ற விடயத்தை கையில் எடுக்க விரும்பும் ஒரு சர்வதேசத்தரப்பு தமது தேவைக்கு ஏற்ப குறைந்தபட்ச தீர்வை வலியுறுத்த முற்பட்டால் அதனை ஆதரிக்க வேண்டிய நிலை இன்னுமொரு சர்வதேச தரப்புக்கு ஏற்படுமாயின் தமிழ் தரப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

அதனால் தான் தமிழ் மக்கள் சார்பாக பேச்சுக்களில் ஈடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்னும் விடயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி உறுதியாக இருக்க வேண்டும் என நாம் வற்புறுத்துவதற்கான காரணமாகும்.

தமிழ் மக்கள் சர்வதேசத்துக்கும் முக்கியத்துவமுடைய தரப்பினராக இன்று உள்ளனர். இவ்வாறான முக்கியத்துவத்திற்குரிய தமிழ் மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் கிட்டியுள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே கூட்டமைப்பின் அமெரிக்க விஜயம் கூட அமைந்திருந்தது.

தமிழர்களுக்கு எவ்வகையில் சர்வதேச அங்கீகாரம் முக்கியத்துவமுடையதாக உள்ளதோ அதற்குச் சமமான அளவு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத் தரப்புக்களுக்கும் தமிழர் தரப்பு தவிர்க்க முடியாத தேவையாகவுள்ளது.

இவ்வாறான மதிப்பீடுகளை சீர்தூக்கிப் பார்க்கையில் தமிழ் மக்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் அரசியல் ரீதியாக மிகப் பலமான நிலையில் உள்ளோம் என்பதனை நாம் அனைவரும் மனதில் கொண்டு தாயகம், தேசம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை விடயங்களில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி எமது அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்த வேண்டும். எமது மக்கள் நம்பிக்கையிழந்து துவண்டுவிட வேண்டியதில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.