Sunday, November 27, 2011

2012 மாவீரர் தினம், சில்லறைச் சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறாமைகளையும் தவிர்த்து நடக்க இதய சுத்தியுடன் முயற்சியுங்கள்- இம்மானுவேல்!

ஈழத் தமிழர் அனைவரினாலும் மதிப்புடன் நினைவுகூரப்படும் மாவீரர் தினத்தை எமது தேசிய எழுச்சி நாளாக அனுட்டிக்கிறோம்.

2011 மாவீரர் தினம் தேசிய எழுச்சி நாள்

அன்புக்கும் மதிப்பிற்குமுரிய எனது தமிழ் ஈழ சகோதரங்களே

தேசிய வழிபாடு. உயிரை அர்ப்பணித்தவர்களை நினைவுகூருதல் எப்படி எழுச்சி நாளாகும். எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் சாவிலும் வாழ்வோம். வீழ்ந்தாலும் எழுவோம் எனத் திடம் கொண்டிருக்கின்றோம் என்பதுதான். ஆகையினால் தான் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் உயிர் நீர்த்தவர்களை நன்றியுணர்வுடனும், வணக்கத்துடனும் நினைவு கூர்வதுடன் அந் நிகழ்வை ஊற்றாகக் கொண்டு மாவீரரின் வீரத் தியாகத்தின் உணர்வை உள்வாங்கி நாமும் வீரத் தியாகத்துடன் எழுச்சி பெற்று போராட எம்மைத் தயார் செய்கின்றோம். இத் தினத்திற்குரிய புனித தத்துவத்தை மாசுபடுத்தாது, அதை எமது இனத்தின் தேசிய வழிபாடு போல மதித்து நடந்து கொள்ளுமாறு எல்லோரையும் ஒழுங்குபடுத்தும் பணியாளர்களையும் பங்குபற்றும் பொது மக்களையும் பணிவுடன் வேண்டுகின்றேன்.

இப் புனித நிகழ்வை மாசுபடுத்தும் அல்லது கொச்சைப்படுத்தும் சில்லறைச் சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறாமைகளையும் தவிர்த்து நடக்க இதய சுத்தியுடன் முயற்சியுங்கள். இந்த ஆண்டு எம்மை எட்டும் தகவல்கள் மிக மிக மன வருத்தத்தைக் கொடுக்கின்றன..

முடிந்த முள்ளிவாய்க்காலும் தொடரும் போராட்டமும்

இந்த நாளின் நிகழ்வுகளை முள்ளிவாய்க்காலுக்கு முன்பு செய்தது போல எல்லாம் செய்ய முடியாததையிட்டு நாமும் எல்லோரும் வருந்துகின்றோம். ஆனால் இன்றைய சூழலுக்கும் தேவைக்கும் தற்போதைய சவால்களுக்கும் உகந்ததாக இந்நாளை அனுட்டிப்பதே நீதியும் பொருத்தமுமானது. அதாவது மக்களுக்கு தாயகம் மீட்க தன்னுயிர் நீர்த்த மாவீரரின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை நினைவுபடுத்தி இன்றைய சூழலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களையும், துன்பங்களையும் எதிர்த்து போராட தேவையான மக்கள் சக்தியைப் பெருக்க அவர்களுடைய ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள்

எமது போராட்டத்தின் புதிய மரிமாணத்தையும் சூழலையும் அதன் வெவ்வேறு சவால்களையும் தேவைகளையும் இன்னும் நாங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. முள்ளிவாய்க்கால் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் போராட்டத்தின் புதிய கட்டத்தை நடத்த வேண்டிய புலம்பெயர் மக்கள் அதிகமானோர் இன்னும் சரியாக தம்முடைய பங்கையும் பணிகளையும் விளங்கவில்லை. இத் தெளிவற்ற நிலையே இன்று எம் மத்தியில் இருக்கும் பிரச்சினைகள் பிரிவினை பலவற்றிற்கு காரணமாயிருக்கிறது.

முள்ளிவாய்க்காலினான் முன் போரும் போராட்டமும் வன்னித் தலைமைத்துவத்தின் கீழ் ஈழத்தில் நடந்தது. புலம்பெயர்ந்த மக்கள் உணர்விலும் உதவியிலும் ஒன்றித்திருந்தனர். ஆனால் இன்று வன்னித் தலைமைத்துவமும் இல்லை. அங்கு ஆயுதப் போருமில்லை. அங்கு எஞ்சி இருக்கும் எழுந்து நின்று உரியமுறையில் போராட சக்தியுமில்லை. வசதியுமில்லை. இந் நிலையில் புலம்பெயர்ந்த மக்கள் போர் முடிந்தாலும் போராட்டம் தொடரும், வீழ்ந்தாலும் எழுவோம் சாவிலும் வாழ்வோம் என்பதற்கு ஒப்ப போராட்டத்தை தொடருகின்றோம்.

போராட்டத்தின் கட்டமைப்புக்கள்

இப் புதிய கட்டத்திற்கு இலட்சியத் தெளிவு ஏற்படுத்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளவும் உறுதிப்படுத்தினோம். இவ்விலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல ஏதுவாக ஒரு புதிய முயற்சியை நாடு கடந்த அரசாங்கம் என்ற கட்டமைப்பில் முயலுகின்றோம். எமது போராட்டத்தின் சர்வதேச சவால்களை சந்திக்கவும் செயல்படவும் ஏற்கனவே நாடுகளின் மட்டத்தில் செயற்பட்டு வந்த அமைப்புக்களை இணைத்து உலகத் தமிழர் பேரவையை ஆரம்பித்தோம். ஈழத்தில் எஞ்சியிருக்கும் எமது உறவுகளையும் அவர்களின் தேவைகள் உரிமைகளை பிரதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனும் பொருத்தமான உறவையும் தொடர்புகளையும் பேணி வருகின்றோம். இப்படி போராட்டத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்துன் அமைப்புக்கள் மக்களை வரும் புதிய சவால்களையும் பிரச்சினைகளையும் சந்தித்து செயற்படுவதில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளையில் அந்தந்த நாடுகளில் இயங்கும் அமைப்புக்கள் மக்களை விசேடமாக இழையரை ஒன்றிணைத்து அவர்கள் சார்பில் அந்தந்த அரசாங்கங்களுடனும் அங்கேயுள்ள அரசுசார்பற்ற நிறுவனங்களுடனும், எமக்கு சார்பான பரப்புரைகளையும் பரிந்துரைகளையும் செய்ய முயலுகின்றோம். இது போராட்டத்தின் ஒரு முக்கிய இன்றியமையாத பகுதி

நிகழ்ச்சிகள் எமக்குள், போராட்டம் வெளி சக்திகள் அமைப்புக்களுடன்.

மக்கள் மத்தியில் நடக்கும் நிகழ்ச்சிகள் மக்கள் சக்தியை பெருக்குவதற்கு இன்றியமையாதவை. ஆனால் அவைகளைப் போராட்டமென்றாற் போல அவைகளிலே முழுக் கவனத்தையும் செலுத்தக் கூடாது. மனிதனுக்கு சாப்பிடுவது அல்லது சக்தி திரட்டுவது முக்கியம். ஆனால் அது வாழ்வாக அமைய முடியாது. செய்ய வேண்டிய பணியாக அமைய முடியாது. சக்தி திரட்டும் நிகழ்வுகளையும் போராடவேண்டிய சக்தி அமைப்புகளையும் சரியாக இனங்கண்டு கொள்ளவேண்டும்.

துரதிஸ்டவிதமாக இன்று சிலர் நினவுநாள் நிகழ்ச்சிகளையும் அமைப்புகளையும் மாத்திரம் மையப்படுத்தி நடக்கின்றர். நாம் இலட்சியத்தை மையப்படுத்தி அமைப்புகளையும் தனிநபர்களையும் இலட்சியத்தின் பணியாளர்களாக நடந்து கொள்வோமாயிருந்தால் நமது போராட்டம் வேகத்திலும் வீரத்திலும் முன்னேறும்.

எமது விடுதலைப் போராட்டத்தின் புதிய கட்டத்தின் தன்மையையும் சவால்களையும் உண்மையாக உணர்ந்து மும்முரமாகவும் முழுவீச்சுடனும் செயற்படவேண்டிய நேரமிது. ஈழத்தில் சிங்கள அரசாங்கம் இரவு பகலாக எம் மண்ணையும் மக்களையும் அழித்துக் கொண்டு வெளி நாடுகளில் பொய்ப்பிரச்சாரத்துடன் எமக்கெதிரான போரை மும்முரமாக விஸ்தரிக்கும் தருணத்தில் புலம்பெயர்ந்த மக்கள் முபொருபொழுதும் இல்லாத வகையில் போராட வேண்டிய நேரம் இது. தனித்தனி நாடுகள் ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் போராட நாம் எல்லோரும் அழைக்கப்படுகின்றோம்.

ஆகையினால் அன்பானவர்களே தளராத இலட்சிய உறுதியுடனும் தெளிவான பார்வையுடனும் ஆழமாக அர்ப்பணிப்புடனும் பொருத்தமான பங்களிப்பைச் செய்ய உங்களை பணிவுடன் அழைக்கின்றோம்.

பணியாளன் – எஸ்.யே. இம்மானுவேல்
ஜேர்மனி

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.