யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது இலங்கை இராணுவம் ஒரு போதும் இனவாதமாக செயற்படவில்லை. சர்வதேச நாடுகளில் இருந்து கொண்டு போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களுக்கு உண்மைகளை நினைவுபடுத்திக் கொடுக்க வேண்டும் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை நிலையானவைகளாக மாற்றி படையினரின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இனி தேசத்திற்கு துரோகம் ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு பயங்கரவாத சக்தியினையும் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை இராணுவத்தின் 62 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேற்று திங்கட்கிழமை சி.ஆர்.எப்.சி.மைதானத்தில் நடைபெற்ற விசேட இராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இலங்கையின் கடந்த கால வரலாற்றில் மிகவும் கொடூரமான சவால் மிக்க காலகட்டத்தை கடந்து இராணுவம் நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்துள்ளது. இந்த வெற்றிக்காக உயிர் மற்றும் உடல் உறுப்புக்களை தியாகம் செய்த படையினரை மறந்து விட முடியாது. எந்தவொரு சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு இடமளிக்காது நாட்டிற்கான பணியை சரிவர செய்தமையால் கௌரவமான நிலையில் எமது இராணுவம் உள்ளது.
உலக இராணுவங்களால் தோற்கடிக்க முடியாது என்று கருதப்பட்ட பயங்கரவாதத்தை இலங்கையிலிருந்து அடியோடு இல்லாதொழித்தோம். இதற்கான சிறந்த தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமக்கு வழங்கினார். தற்போது இலங்கை சுதந்திரமான நாடு. அனைத்து இன மக்களும் சந்தோஷமாக வாழக் கூடிய சூழல் பிறந்துள்ளது. இதனை சிதைக்கும் வகையில் சர்வதேச நாடுகளில் வாழும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் படையினர் இறுதி யுத்த நேரத்தின் போது இனவாதமாக செயற்படவில்லை. மனிதாபிமான நடவடிக்கையானது புலிகளுக்கு எதிரானதே தவிர தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக அமைந்திருக்கவில்லை. தற்போது நாடு பொருளாதார இலக்குகளை குறி வைத்து நகர்ந்துள்ளது. இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் படையினரும் தமது பங்களிப்புக்களை நாட்டிற்காக தொடர்ந்தும் மேற்கொள்வார்கள்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளில் முழு ஈடுபாட்டுடன் படையினர் செயற்படுவார்கள். அதே போன்று இராணுவத்தை பல துறைகளிலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.