Wednesday, October 12, 2011

பிரதி மேயர் பதவி கேட்டு அலையும் அளவுக்கு நாம் தரம் தாழ்ந்து விடவில்லை – மனோ!

கொழும்பு, மாநகர சபையின் பிரதி மேயர் பதவி கேட்டு நாம் அலையவும் இல்லை. அவ்வாறானதொரு தேவையும் எமக்கு இல்லை. அத்துடன் எமது கட்சியானது பிரதி மேயர் பதவி கேட்குமளவுக்குத் தரம் தாழ்ந்து போன கட்சியுமல்ல என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிபந்தனையுடனேயே எமது கட்சி ஆதரவு வழங்கும் என நாம் தெரிவித்ததனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட எமது அரசியல் எதிராளிகள், எமது கட்சி கொழும்பு மாநகர சபையில் பிரதி மாநகர மேயர் பதவி கேட்பதாகவும் அவ்வாறு பதவி வழங்கினால் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்க முடியும் என்றும் நாம் ஐ.தே.க தலைமையை வேண்டியுள்ளதாகவும் தவறான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் இந்த விடயம் குறித்து எமது இணையத்துக்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முஸ்ஸமிலுக்கோ மிலிந்த மொரகொடவுக்கோ இரண்டாம் பட்சமாக நாம் இருக்க வேண்டிய அவசியமில்லை. எமது கட்சி அந்தளவுக்குத் தரம் தாழ்ந்து போன கட்சியும் அல்ல.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும் இன்று தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு தமிழ்க் கட்சியாக நாம் உருவெடுத்துள்ளதனை இறுதியாக நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. இந்த நிலையில் நாங்கள் பிரதி மேயர் பதவி கேட்க வேண்டிய தேவை இல்லை. இவ்வாறானதொரு பிரசாரம் எம்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் இன்று முன்னெடுக்கப்படுகிறது.

கொழும்பு மாநகர சபை நிர்வாகத்தைச் செம்மனே நடத்திச் செல்ல ஐக்கிய தேசியக் கட்சி இன்று எமது ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறது. அவ்வாறு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமாயின் நிபந்தனைகளுடனேயே எமது ஆதரவை வழங்க முடியும். எமது நிபந்தனைகள் என்ன என்பது இன்று அல்லது நாளை பகிரங்கப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.