Wednesday, September 21, 2011

முஸ்லிம் காங்கிரஸை கூட்டமைப்பு ஊறுகாய் போன்று பயன்படுத்தக் கூடாதாம்: ஹக்கிம் கூறுகிறார்.

இனப் பிரச்சினைத் தீர்வில் மு.காவையும், முஸ்லிம்களையும் தமது தேவைக்கேற்றால் போல் ஊறு காயைப் போன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் பாவிக்கக் கூடாது. அவ்வாறாதொரு செயற்பாட்டை மு.கா ஒரு போதும் அனுமதிக்கமாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார். அரசாங்கத்துடன் த.தே.கூ அமைப்பினர் மேற்கொள்ளும் பேச்சுக்களில் முஸ்லிம்களும் ஒரு தரப்பாக பேசுதல் வேண்டும். எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்துடன் இடம் பெறும் பேச்சுக்களுக்கு முஸ்லிம்களும் ஆதரவு வழங்க வேண்டும் என த.தே.கூவின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி தெரிவித்த கருத்துத் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தனது கருத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்து தெரிவித்ததாவது:

"த.தே.கூ அமைப்பினர் அரசாங்கத்துடன் இடம் பெறும் பேச்சுக்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவை வெறுமனே கோருவது அர்த்தமற்றது. இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் த.தே.கூ அமைப்பினர் முஸ்லிம்களுடன் குறிப்பாக மு.காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களில் உத்தியோக பூர்வமாக ஈடுபட வேண்டும். அதில் இரு தரப்பினரும் உடன்பாடு காண வேண்டும்.

அது மட்டுமல்லாது அரசாங்கத்துடன் த.தே.கூ அமைப்பினர் மேற்கொள்ளும் பேச்சுக்களில் முஸ்லிம்களும் ஒரு தரப்பாக பேசுதல் வேண்டும். இவை இல்லாமல் அரசாங்கத்துடன் இடம் பெறும் பேச்சுக்களுக்கு முஸ்லிமகளின் ஆதரவை வேண்டுவது முஸ்லிம்களையும் மு.காவையும் தமது தேவைக்கேற்ப ஊறுகாயை தொட்டுக் கொள்வது போன்றதாகும்.

இனப் பிரச்சினைக்கான தீர்வினை பலமாக்குவதற்கு முஸ்லிம்களும் ஒரு தரப்பாக பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். முஸ்லிம்களை பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு தீர்வினை பலமுள்ளதாக்க முடியாது.

சர்வதேச சமூகத்தின் ஆதரவு தமக்கு இருக்கின்றதென்ற எண்ணத்தில் முஸ்லிம்களை புறக்கணிக்க முடியாது. தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்று மு.கா எல்லா மட்டங்களிலும் எடுத்துக் கூறியுள்ளது. இவற்றை எல்லாம் மறந்தவர்களாக த.தே.கூ அமைப்பினர் இருக்க முடியாது.

முஸ்லிம்களின் விருப்பத்தோடுதான் இனப் பிரச்சினைக்கான தீர்வினைக் கொண்டு வரமுடியும். முஸ்லிமகளை புறக்கணித்த நிலையில் எந்தத் தீர்வினையும் அடைந்து விட முடியாது. த.தே.கூ அமைப்பு அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுக்களுக்கு ஆதரவு வழங்குவதன் மூலமாக முஸ்லிம்களுக்கு ஆட்சியுரிமை, அரசியல் உரிமைகள் கிடைத்துவிடும் என்று கூற முடியாது. பேச்சுக்களில் முஸ்லிம்களும் உத்தியோக பூர்வமாக ஒரு தரப்பாக பங்கு பற்றுதல் வேண்டும்.

மு.கா நேர்மையாகச் சிந்திக்கின்றது. முஸ்லிம்களுக்கு ஆட்சி உரிமை என்போர், முஸ்லிம்களை ஒரு தரப்பாக பேச்சுக்களில் இடம் பெறுவதற்கு தயக்கம் காட்டுவதேன்? த.தே.கூ அமைப்பினர் தங்களின் நேர்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு பேச்சுக்களில் முஸ்லிம்களும் ஒரு தரப்பாக பங்கு பற்றுதல் வேண்டும் என்றார்."

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.