Monday, August 01, 2011

கே.பி. குழுவின் தமிழ்த் தேசிய சிதைவு முயற்சியைப் புலம்பெயர் தமிழர்கள் முறியடிப்பார்கள்!

முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த இறுதி யுத்த களத்தில் விடுதலைப் புலிகளது ஆயுதபலம் முற்றாகத் துடைத்தழிக்கப்பட்டது. பல தளபதிகள் உட்பட, ஏராளமான விடுதலைப் புலிகள் கள முனையில் இறுதிவரை போராடிப் பலியானார்கள். தமிழீழ மக்களது அரசியல், இராணுவப் பலம் அழிவுக்குள்ளான நிலையில் உருவான வெற்றிடம் குறி வைக்கப்பட்டது.

இந்தப் பேரழிவுக்கு பின்னரான கதாநாயகனாக கே.பி. உருவாக்கப்பட்டார். அவர் மூலமாக, தேசியத் தலைவருக்கும் முடிவுரை வாசிக்கப்பட்டது. துரோக நாடகம் ஒன்று ஒவ்வொரு அங்கமாக மக்கள் முன் வைக்கப்பட்டாலும், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.

அதனால், மாற்றுப் பாதை குறித்து அவசரமாக ஆராயப்பட்டது. விடுதலைப் புலிகளின் பின்னே அணிவகுத்து, எதற்கும் அசைந்து கொடுக்க மறுத்த புலம்பெயர் தமிழ் மக்களை, அவர்கள் பாதையிலேயே சென்று வீழ்த்துவதற்கான முடிவு தமிழ்த் தேசிய அழிவு சக்திகளால் முன்வைக்கப்பட்டது. அதற்கான அங்கீகாரம் கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதனிடம் வழங்கப்பட்டது.

உடனடியாகப் புலி ஒன்றைப் பெருத்தும் வேலை மலேசியாவில் வைத்து மேற்கொள்ளப்பட்டது. அதற்கு, அமெரிக்காவிலிருந்து காலும், லண்டனிலிருந்து வாலும், நோர்வேயிலிருந்து தோலும், பிரான்சிலிருந்து பல்லும் இறக்குமதி செய்யப்பட்டது. இறுதி யுத்த களத்திலிருந்து தப்பி வெளியேறிய சிலரால் அதன் தலை வடிவமைக்கப்பட்டது.

அவசரம் அவசரமாகப் பொருத்தும் பணியை மேற்கொண்டவர்களுக்கு, எதை எங்கே பொருத்துவது என்று புரியவில்லை. வாலும், காலும், தோலும் தமக்கே முன்னுரிமை வேண்டும் என்று போராடின. பல்வேறு சமரச முயற்சிகளின் பின்னர் புலி ஒன்று வடிவமைக்கப்பட்டது. அவசர கோலத்தில் உருவாக்கப்பட்ட புலிக்கு கொம்பும் பொருத்தப்பட்டது. இந்தப் புலியை வழிநடாத்தும் பொறுப்பினைக் கே.பி. கையேற்றார். அதற்கான சாட்டை ஒன்று கோத்தபாயாவினால் கே.பி.யிடம் வழங்கப்பட்டது.

இப்போது புலம்பெயர் தேசங்களில் உருவாக்கப்படும் தேசியச் சிதைவு முயற்சியின் உருவாக்கம் இப்படித்தான் ஆரம்பிக்கப்பட்டது. குருடர்கள் யானையைப் பார்த்ததுபோல், புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் அதனைத் தடவிப் பார்த்து விளக்கம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தத் தமிழ்த் தேசிய சிதைப்பு முயற்சியின் உச்ச கட்டமாக, தேசியத் தலைவரது கட்டளையுடன், விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களால் நடாத்தப்பட்டுவரும் மாவீரர் தினம் குறி வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்களது உயிர் நாடியாகவும், தமிழீழ விடுதலைக்கான உயிர்ச் சக்தியாகவும், தமிழ் மக்களது நம்பிக்கைக் குறியீடாகவும் உள்ள மாவீரர் தினத்தைக் குறி வைத்து லண்டனில் ஒரு குழுவும், பிரான்சில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதான செய்திகள் வெளிவந்துள்ளன.
தேசியத் தலைவர் அவர்களது பணிப்பின்பேரிலேயே, தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் மாவீரர் தினம் தொடர்ந்து நடாத்தப்பட்டு வருகின்றது. அதனை, தேசியத் தலைவர் அவர்கள் உருவாக்கிய புலம்பெயர் கட்டமைப்புக்களே நடாத்தி வருகின்றன. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் வந்த இரு ஆண்டுகளும் அந்த மரபின்படியேதான் மாவீரர் நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. தமிழர்கள் பேரெழுச்சி கொள்ளும் இந்தப் புனித நாள் நிகழ்வுகள் சிங்கள தேசத்திற்கு எரிச்சலையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது என்பது புரிந்து கொள்ளக் கூடியNது. இதனால், தனது கைத் துருப்புச் சீட்டான கே.பி. மூலமான சிதைவு முயற்சியில் சிங்கள தேசம் இறங்கியுள்ளது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

மாவீரர் தினத்தைச் சிதைப்பதன் மூலம் புலம்பெயர் தமிழர்களது தமக்கு எதிரான அணிதிரள்தலை இல்லாது ஒழித்ததுவிடலாம் என்பதே சிங்கள தேசத்தின் இந்த இலக்காக உள்ளது. இதனையே கே.பி. மூலம் செயல்படுத்தும் முயற்சியில் சிங்கள தேசம் ஈடுபட்டுள்ளது.

இந்தத் தேசிய சிதைவு முயற்சியில் கரம் கோத்துள்ள மூன்று அணிகள் வெளிப்படையானவை. மலேசியாவில் வைத்துப் பொருத்தப்பட்ட கொம்போடு கூடிய புலியின் முக்கிய அங்கங்களாக இந்த மூன்று அணியும் உள்ளன. இந்தப் புலியின் தலையாக கே.பி.யால் உருவாக்கப்பட்ட இராமு சுபன் குழுவும், கால்களாக கே.பி.யால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ருத்திரா அணியும், பல்லாக கே.பி.யின் புலம்பெயர் கட்டமைப்பான மனோகரன் தலைமையிலான கே.பி. குழுவும் செயற்படுகின்றன.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், இந்த மூன்று அணிகளும் தமிழ்த் தேசிய சிதைவு முயற்சி தவிர்ந்த எந்தக் களத்திலும் கால் பதித்ததாக அறிய முடியவில்லை. இராமு சுபன் குழு அவ்வப்போது, மலேசியாவில் பொருத்தப்பட்ட புலியே உண்மையான புலி என்று நிறுவும் முயற்சியில் அறிக்கைகள் விடுவதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டது. ருத்திரா அணி இதுவரை தமிழீழ விடுதலை நோக்கிய உருப்படியான எந்த முயற்சியிலும் ஈடுபட்டதாக அறிய முடியவில்லை.

மாறாக, கருணாநிதி பாணியில், அவரது ‘நெஞ்சுக்கு நீதி’ போன்று தொகுத்து வெளியிடக் கூடிய அறிக்கைகளால் மட்டுமே தனது இருப்பைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. மனோகரன் தலைமையிலான கே.பி. குழு, கே.பி.யின் கட்டளைப்படி தமிழ்த் தேசியச் சிதைவுக்கான களங்களை ஏனைய இரண்டு தளங்களுக்கும் அமைத்துக் கொடுக்கின்றது.

இதில் முக்கியமாகக் கவனிக்கக்கூடிய விடயம், கே.பி.யால் உருவாக்கப்பட்டு, கே.பி.யுடன் நேரடித் தொடர்புகளைப் பேணும் இந்த மூன்று அமைப்புக்களதும் நதி மூலம் சிங்கள அரசுக்குத் தெரியாதது அல்ல. இவற்றின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது சிங்கள அரசுக்குப் பெரிய விடயம் அல்ல. சகல சௌபாக்கிய வசதிகளோடும், கருணாவுக்கு நிகரான நல்வாழ்வு பெற்றுள்ள கே.பி. மூலமாக அதனைச் சாத்தியப்படுத்த முடியும்.


எனவே, மாவீரர் தினத்தைக் குறிவைத்து நகரும் இந்தக் குழுக்களின் நதிமூலம் கொழும்பிலிருந்தே ஆரம்பிக்கின்றது. தமிழ்த் தேசிய உணர்வுள்ள அத்தனை தமிழர்களும், புலம்பெயர் தமிழ்த் தேசியத் தளம் சிதைக்கப்பட்டு விடக் கூடாது என்பதிலேயே குறியாக உள்ளபோது, இவர்கள் மட்டும் சிங்கள தேசத்தின் இலக்கு நோக்கிப் பயணிக்க முற்படுவதன் இரகசியம் யாது?

விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் வழக்கம்போலவே, மாவீரர் தின ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இதற்குப் போட்டியாக, இன்னொரு மாவீரர் தினம் என்பது புலம்பெயர் தமிழர்களால் ஜீரணிக்கக்கூடியது அல்ல. அது நிச்சயமாக, தமிழ்த் தேசிய சிதைவை மட்டுமே நோக்காகக் கொண்ட நகர்வு என்பதில் சந்தேகம் இல்லை. அதை நிச்சயம் புலம்பெயர் தமிழர்கள் முறியடிப்பார்கள்.

- அகத்தியன்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.