Monday, June 13, 2011

கபட நாடகம் ஆடவில்லையாம்! பீதியூட்டுகிறார் கருணாநிதி

இலங்கைத் தமிழர்களுக்காக நான் எதைச் செய்தாலும் அதை "கபட நாடகம்'' என அறிக்கை விடுகிறார் ஜெயலலிதா என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் வருமாறு,

தி.மு.க ஆட்சியில் இருந்தபோது இலங்கைத் தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது, இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என்றெல்லாம் நடத்தியதாகவும், ஆனால் அவைகள் எல்லாம் என்னால் நடத்தப்பட்ட நாடகங்கள் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையிலே முழங்கியிருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்காக நான் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தன்னந்தனியாக அண்ணா நினைவிடத்திற்கு காலை 6 மணிக்கெல்லாம் என் வீட்டாரிடம் கூடச் சொல்லாமல் அங்கே சென்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினேன்.

1956ஆம் ஆண்டிலேயே சிதம்பரம் தி.மு.க பொதுக்குழுவிலே அண்ணா முன்னிலையில் இலங்கை தமிழர்களுக்கான தீர்மானத்தை முன்மொழிந்தவனே நான்தான்.

1981ஆம் ஆண்டு இலங்கையிலே தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி ஏடுகளில் வந்ததும், 13.8.1981 அன்று இந்தியப் பிரதமருக்கு இந்தப் பிரச்சனையை தீர்க்க மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்று கேட்டு தந்தி அனுப்பியவன் நான்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்காக 1981ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15ஆம் நாள் அன்று தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த அ.தி.மு.க. அரசினால் கைது செய்யப்பட்டவன் நான்.

மத்திய மாநில அரசுகள் இலங்கை தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டிட வேண்டும் என்பதற்காக 10.8.1983 அன்று நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் எங்களுடைய சட்டப் பேரவை உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தோம்.

1997 ல் திமுக ஆட்சியில் இருந்தபோது, ""சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கருணாநிதி முயலுகிறார், விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கிவிட்டார்கள்'' என ஜெயலலிதா கண்டன அறிக்கை வெளியிட்டார்.

இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டும் என தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், ""விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை'' என தெரிவித்தார்.

அப்போது அப்படிக் கூறிவிட்டு இப்போது நடத்துவதுதான் கேலிக்கூத்தே தவிர, நான் எந்தக் காலத்திலும் கேலிக் கூத்தாடியவன் இல்லை. இதை இலங்கைத் தமிழர்களும், உலகம் முழுதும் இருக்கிற தமிழர்களும் நன்கு உணர்வார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் மறைந்தபோது நான் எழுதிய இரங்கல் கவிதை பற்றிக் குறிப்பிட்ட ஜெயலலிதா, புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று, அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

2009 ல் இலங்கைத் தமிழர்களுக்காக சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக்கூட தயார் என்று அறிவித்தவன் என்பதை உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபடுபவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

மனசாட்சி உள்ள சிலராவது இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டால், அதுவே எனக்கு ஓர் ஆறுதல்தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஈழத்தமிழர்களுக்காக நடாத்திய நரித்தந்திரமான கபட நாடகங்களை முதன் முறையாக தானே பட்டியலிட்டுள்ளார் கருணாநிதி...

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.