Wednesday, June 22, 2011

அளவெட்டியில் இராணுவத்தினர் அத்துமீறியது உண்மை – கோத்தபாய வாக்குமூலம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அளவெட்டி தேர்தல் பிரசாரக் கூட்டத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டவர்கள் இராணுவத்தினரே என்பதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உறுதிப்படுத்தி உள்ளார்.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். அதிகாரி ஒருவரின் தலைமையில் படையினர் குழுவொன்று சமூக மண்டபத்துக்குச் சென்ற போது அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்ட, கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிலருக்கும் படையினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் போது அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த (நாடாளு மன்ற உறுப்பினர்களின் மெய்க் காவலர்கள்) ஒருவருக்கே அடி விழுந்தது.

நாடாளுமன்ற உறுப்பினரையோ கூட்டத்தில் பங்கேற்றவர்களையோ அவர்கள் தாக்கவில்லை. வாகனங்கள் சேதமாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் பொய்யானவை” என்றும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை யாழ். நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த குடாநாட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, படைகளிலுள்ள சில சக்திகள் அல்லது வெளிச்சக்திகள் இதில் தொடர்புபட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். சம்பவத்துடன் படையினர் தொடர்புபட்டிருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.

தாக்குதலை நடத்திய படையினரைத் தம்மால் அடையாளம் காட்ட முடியும் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையிலேயே அளவெட்டிச் சம்பவத்தில் இராணுவத்தினரே தொடர்புபட்டுள்ளனர் என்று பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்ட படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கட்டளைத் தளபதி கோத்தபாய ஹத்துருசிங்கவுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று அரச சார்பு ஊடகங்கள் தெரிவித்தன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.