Sunday, June 12, 2011

காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்படமாட்டாது: இந்தியக் குழுவிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திட்டவட்டம்

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அரசியல்தீர்வு ஒன்றை காணுமாறு இந்தியா வலியுறுத்தியுள்ள நிலையில், மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான இந்திய உயர்மட்டக் குழுவிடமே சிறிலங்கா அதிபர் இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பு வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்தே, சிறிலங்கா அதிபர் இந்த முடிவை இந்தியாவிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போது மாகாணங்களுக்கு காவல்துறை, காணி அதிகாரங்களை வழங்க கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இதையடுத்தே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது திட்டவட்டமான முடிவை இந்தியக் குழுவிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஆனால் இந்தியக் குழுவின் கொழும்பு வருகையின் முக்கிய நோக்கம் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதேயாகும்.

சிறிலங்கா அதிபர் மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என்று இறுக்கமாகக் கூறியுள்ளதால், இந்திய-சிறிலங்கா இராஜதந்திர உறவுகளில் இடைவெளியும்- மோதல் போக்கும் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.