சனல் 4 விவகாரம் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் சுயாதீனமானதும் சர்வதேச தரத்திற்கமைவானதுமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சனல் 4 வீடியோ காட்சிகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுரேஷ் எம்.பி மேலும் கூறுகையில், பிரித்தானிய தொலைக் காட்சியான சனல் 4 இலங்கையின் இறுதிக் கட்டப் போரோடு தொடர்புடைய சில தகவல்களை இதற்கு முன்னரும் வீடியோவாக வெளியிட்டிருந்தது. ஆனாலும் அப்போது அதனை மறுத்த அரசாங்கம் அந்த வீடியோக் காட்சிகள் பொய்யானவை எனக் கூறி நிராகரித்தது.
அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இவ்வாறு சனல் 4 தொலைக்காட்சி நீண்டதொரு வீடியோ காட்சியை ஒளிபரப்பியிருந்தது.
இதனையும் அரசாங்கம் முன்னரைப் போலவே நிராகத்து அது தொடர்பில் பல்வேறு கதைகளை கூறி வருகின்றது. இதனை ஆராய்ந்து பாராமலேயே அரசாங்கம் வெற்றுக் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றது.
நடந்து முடிந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். வைத்தியசாலைகள் தகர்க்கப்பட்டுள்ளமை உட்பட ஆண்கள், பெண்கள் என சகலரும் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுதல் போன்ற காட்சிகள் மிகக் கொடூரமானவையாகும்.
கைது செய்யப்பட்ட போராளிகள், இளைஞர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமே தவிர வீடியோ காட்சியில் காட்டப்படுவது போன்று மிருகத்தனமாக கொலை செய்வதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.
இந்த வீடியோ காட்சிகளை உலகமே பார்த்திருக்கின்றது. பல அரசுகள், முக்கியஸ்தர்கள் இவ்விடயம் தொடர்பில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பதும் அறிந்த விடயமாகும். மேற்படி காட்சிகள் தொடர்பில் அரசாங்கம் என்னதான் வெறுமையான கதைகளையும் காரணங்களையும் கூறினாலும் கூட சர்வதேச நாடுகள் அதனை நம்புவதற்கு தயாரில்லை. இலங்கை அரசின் கூற்றுக்களை இனியும் உலகம் ஏற்றுக் கொள்ளாது.
சனல் 4 வீடியோ காட்சிகள் உண்மையானவை என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நம்புகின்றது. எனவே அரசாங்கம் இது தொடர்பில் தனது கரிசனையைக் காட்ட வேண்டும்.
வீடியோ காட்சிகளின் பிரகாரம் இழைக்கப்பட்டுள்ள குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும். அதுவும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் சர்வதேச தராதரத்துக்கு அமைவானதாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையாகும்.
மாறாக வீடியோ காட்சிகள் பொய்யானவை என சடுதியாக கூறி அதனை நிராகரித்து விடுவதற்கோ சர்வதேசத்துக்கு முன்னால் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கோ அரசாங்கம் முற்படாதிருப்பது நல்லது என்றார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.