இன்று தமிழர்களுக்கு அடுத்து வரும் பத்தாண்டுகளுக்கான ஒரு பொன்னாளாகும். ஏனெனில் மிகமுக்கியமானதொரு காலக்கட்டத்தில் தமிழர் இனம் பயணித்துக் கொண்டிருக்கையில் தமிழ்நாட்டில் ஒரளவான மாற்றம் ஏற்பட்டிருப்பதானது, உலகளவில் ஒரு சில தாக்கங்களை ஏற்படுத்தும். முதலில் தமிழக மக்கள் ஏன் கருணாநிதி கூட்டணையை வீழ்த்தினர் என்று பார்க்கலாம்.
தேர்தல் பொது நிலமைகள்
காங்கிரசின் களவாணித்தனத்துக்கு எதிராக தமிழகம் மட்டுமின்றி இன்னும் பல மாநிலங்களில் மக்கள் வாக்களித்திருக்கின்றனர். புதுச்சேரியிலும் காங்கிரசுக் கட்சி மண்ணைக் கவ்வி விட்டது. மேற்கு வங்காளத்தில் ஆளும் இடது சாரி காங்கிரசின் தேசியமயக் கொள்கைகளையே பின்பற்றி வந்தது. எனவே இந்த முறை ஆட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணியான மம்தா பானர்ஜியின் கூட்டணிக்கு கொடுக்க வேண்டியதாகி விட்டது. கேரளாவிலும், அஸ்ஸாமிலும் பார்த்தால் ஆளும் கட்சிகள் தூக்கியெறியப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது. இது ஒரு தெளிவான பார்வையை நமக்கு வழங்கும். அதாவது எந்த மாநிலத்திலும் ஆளும் கூட்டணி வெற்றி பெற வில்லை. மாறாக எதிர் கூட்டணியே வெற்றி பெற்றிருக்கிறது. ஆளும் கூட்டணியின் ஏகாதிபத்திய சார்பு, களவாணி ஆட்சியை எல்லா மாநிலங்களிலும் மக்கள் வெறுத்திருக்கின்றனர்.
தமிழகத்தின் தனி நிலைமைகள்
தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஜெயலலிதா ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில்லை என்பது அவர்கள் கருணாநிதியைத் தோற்கடித்ததிலிருந்தே தெரிகிறது. ஏனெனில் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலங்களை விட கருணாநிதியின் ஆட்சிக்காலங்களே தமிழ்நாட்டை முன்னிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளாதவர்களில்லை தமிழக மக்கள். பின்னரும் ஏன் அவர்கள் கருணாநிதி கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும்? இது முன்னேற்றம் என்ற பெயரில் தொடர்ந்த ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்கு கருணாநிதி தமிழகத்தை இட்டுச்சென்றதும், அண்மித்த தொலைவில் தங்கள் சொந்த இனமக்கள் கருவருக்கப்படுகையில் தங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கியதில் கருணாநிதியே குற்றவாளி என்று தமிழக மக்கள் கருதியதாலுமே.
ஒருபக்கம் முன்னேற்றம் என்று சொல்லப்படுவது ஒருசிறு வர்கத்துக்கே – ஆளும் வர்க்கம் மற்றும் உயர்தர வர்க்கம் ஆகியவற்றுக்கே கிடைத்தது. மற்றையோருக்கு ரேஷன் கடையில் இலவச அரிசி கிடைத்தது. அந்த அரிசியும் உண்ண முடியாத நிலையில் புழுத்துப் போயிருப்பதால் பெரும்பாலும் திருட்டு வழியில் குழந்தைக் காப்பகம், அனாதை இல்லங்கள், அரசு நடத்தும் பாலர் பள்ளிகள் ஆகியவற்றுக்கு திசை திருப்பி விடப்பட்டது. மேலும் பல இலவசங்கள் – தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு, இன்னும் பல – வழங்கப்பட்டாலும் அதனால் நடுத்தர வர்க்கமோ, புதிதாக ஓட்டளிக்க வந்த இளைய தலைமுறையோ பயன்பெற வில்லை.
மறு புறம் கருணாநிதியின் கள்ள-கபட நாடகங்கள், சோனியாவின் ஏமாற்று வேலைகளால் தமிழக மக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தங்கள் சொந்தங்களை பரிதவித்து சாகும் நிலையில் பார்த்துக் கொண்டிருந்தது. இது மக்கள் மனங்களில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருந்ததை ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் அங்கீகரிக்க வில்லை. இன்னொருபுறமோ இதுவரை கேள்விப்படாத அளவுக்கு ஊழல். பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்த ஊழல்களில் கருணாநிதியின் பிள்ளைகளும், துணைவியரும் ஈடுபட்டமை.
இது தவிர ராஜ ராஜ சோழனின் பாணியில் கருணாநிதி நடத்திய குடும்ப ஆட்சி. தன் பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டையே மூன்று பாகங்களாக பிரித்துக் கொடுத்து அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார் கருணாநிதி. கிழக்குத் தமிழகம் கனிமொழிக்கும், தெற்கு அழகிரிக்கும், வடக்கு ஸ்டாலினுக்கும் என்று அவர் ஆடிய ஆட்டத்தை தமிழக மக்கள் ரசிக்க வில்லை. கிழக்கின் சொந்தக் காரி ஊழல் ராணியானாள். தெற்குப் புதல்வன் ரவுடி ராஜ்ஜியம் நடத்தினான். வடக்குப் பிள்ளை மொள்ளமாரியானான். தமிழக மக்கள் முட்டாள்களானார்கள்.
இதற்கா நாம் இவருடைய தமிழ், தமிழர், தமிழ்நாடு முழக்கங்களை இதுவரையிலும் கேட்டு ரசித்தோம், உணர்சி வசப்பட்டோம், ஓட்டுப் போட்டோம் என்றாகி விட்டது மக்களுக்கு. மேலும் தங்கள் சொந்தங்கள் லட்சம் பேர் ஈழத்தில் கொல்லப்பட்டபோது, கருணாநிதி நடத்திய கள்ள நாடகங்கள் மக்களின் புண்பட்ட மனத்திரையில் மாறாக் காட்சிகளாக நிறைந்து விட்டிருந்தன. அந்த மாறாத வலியோடு உள்நாட்டு ஊழல்கள், குடும்ப ஆட்சியின் அருவருப்புகள், விலைவாசியேற்றம் என்று எல்லாமும் சேர்ந்து மக்களின் தீர்ப்பை உருவாக்கியிருக்கிறது.
ஆகவே கருணாநிதியின் தோல்விக்கு காரணங்கள்:
* ஈழச் சொந்தங்களை காப்பாற்ற தமிழக மக்களை செயல்பட விடாமல் கருணாநிதியும் சோனியாவும் செய்த அட்டூழியங்கள்.
* தொடர்ந்த ஏகாதிபத்தியக் கொள்ளைக்கூட்டணிக்கு தமிழகத்தை தாரை வார்த்து கொண்டிருந்தது
* குடும்ப ஆட்சியின் அருவருப்புகள்
* தாங்க முடியாத விலைவாசியேற்றம்
* இலவசங்களால் இளைய தலைமுறை மயங்காமல் வாக்களித்தது
* ஆளுங்கட்சிக்கு எதிரான பொதுவான மக்களின் எதிர்ப்பு மனப்பான்மை
இவை யாவுமே கருணாநிதி கூட்டணியை மண்ணை கவ்வ வைத்திருக்கின்றன.
இனிவருங்காலம்
ஆனால் மேற்கண்ட தோல்விக்கான காரணங்கள் ஜெயலலிதாவை பாராட்டி மக்கள் கொடுத்த நற்சான்று அல்ல. ஏனெனில் ஜெயலலிதா கருணாநிதியை விட மிக மோசமாக கடந்த கால ஆட்சிகளில் தீங்கு விளைவித்தார் என்பதை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். இருப்பினும் தற்போது அவருடைய மாறி வரும் தொனி குறிப்பானது. ஊழல் விடயத்திலும் சரி, ஈழவிடுதலை தொடர்பான விடயத்திலும் சரி, அவர் மக்களுக்குச் சாதகமாகவே பேசி வருகிறார்.
ஜெலலிதாவிடம் ஒரு குணம் உண்டு. பக்கத்து ஊரில் யார் பெரிய தலைவரோ அவரை எதிர்த்து முழக்கமிடத் தொடங்கி விடுவார். அன்று பக்கத்து ஊரில் தலைவர் பிரபாகரன் பெரிய தலைவராயிருந்தார். எனவே அவரை எதிர்த்து முழக்கமிட்டார். இன்று பக்கத்து ஊரில் ராஜபக்சே பெரிய தலைவராயிருக்கிறார். எனவே அவரை எதிர்த்து முழக்கமிடுகிறார். இது ஜெயலலிதாவின் ஆளுமைச் சிக்கலாகும். ஆனல் இந்த முறை அவரது ஆளுமைச் சிக்கல் தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதால் அதனைத் தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றி பெற்றதும் முதல் செவ்வியிலேயே ராஜ பக்சேவை அனைத்துலக நீதி மன்றத்தில் ஏற்றவேண்டும் என்று அவர் கூறியிருப்பதை கட்டிக்காத்து பேண வேண்டிய பொறுப்பு தமிழர்களுக்கு உள்ளது.
ஆக மொத்தத்தில் தமிழர்களுக்கு இன்றைய வாய்ப்பு ஒரு பொன்னான வாய்ப்பாக வந்துள்ளது. ஏனெனில் இனி கருணாநிதி மிச்சமிருக்கும் தன் குறுகிய வாழ்நாளில் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது. காங்கிரசும் வேரோடு வீழ்த்தப்பட்டு விட்டது. எனவே அடுத்த ஆட்சி மாற்றம் இப்போதை விட மிக வியப்பு மிக்கதாக இருக்கும். விஜயகாந்த், ராமதாஸ் போன்றவர்கள் எதிர்வரிசையில் இருப்பதைக் காணலாம். அதை ஜெயலலிதா எதிர்ப்பார்க்காமல் இருக்கமாட்டார். அதற்கேற்பவே அவரும் தமிழர்கள் விடயத்தில் காய் நகர்த்துவார். எனவே தமிழர் நலனில் மென்மையை அவரிடம் எதிர்பார்க்கலாம். எனவேதான் இன்று கருணாநிதியின் தோல்வியானது தமிழக மக்களையும், உலகத் தமிழர்களையும் ஒரு முக்கிய சந்திப்பில் கொண்டு வந்து விட்டிருக்கிறது. அடுத்த காலகட்டத்திற்கான முடிவு இன்றை விட மிக வேறுபட்டதாக இருக்கும் என்பதை இந்த நிலை காடுகிறது.
இன்றைய இந்தச் சந்திப்பிலிருந்து தமிழகத் தமிழர்களும் உலகத்தமிழர்களும் சேர்ந்து போவோமா, இல்லை பிரிந்து போவோமா என்பதை அடுத்து ஐ.நா. அறிக்கை மீதான அணுகல்களில் தெரிந்து கொள்ளலாம்.
-------------------
ஈழதேசம்.கொம்முக்காக நிலவரசு கண்ணன்
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.