Wednesday, May 25, 2011

பான் கி-மூன் நிபுணர் அறிக்கையை படித்துக்கொண்டு இருக்கின்றாராம் - ஐ.நா பேச்சாளர்

ஐக்கிய நாடுகள் செயலர் பான் கி-மூனால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு, இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர் பற்றி சமர்ப்பித்துள்ள அறிக்கையை அவர் தொடர்ந்தும் படித்து வருவதாக, பான் கி-மூனின் பேச்சாளர் மார்டின் நெசேர்க்கி (Martin Nesirky) தெரிவித்துள்ளார்.

நேற்று (24-05-2001) நண்பகல் இடம்பெற்ற ஐ.நா ஊடகச் சந்திப்பில் இந்த அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டதா எனக் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த அறிக்கை ஏற்கனவே பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளதாக மழுப்பலான பதில் வழங்கிய நெசேர்க்கி, தனது செயலர் தொடர்ந்தும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விடயங்கள் பற்றி படித்து வருவதாகவும், சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து உத்தியோகபூர்வ பதிலை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கூறினார்.

இருப்பினும், நியூயோர்க்கில் இருந்து ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் சபைக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டதா என மீண்டும் கேட்டதற்கு, முன்னர் கூறிய அதே பதிலையே மூனின் பேச்சாளர் பகரிந்திருக்கின்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பிக்க இருக்கின்றது. இந்த நிலையில் சிறீலங்கா அரசாங்கம் மீது பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெறுவதற்கு ஓர சில மாதங்களுக்கு முன்னர் இவ்வாறு ஐ.நா மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையை தோற்கடிக்கப்பட்டமை ஐ.நா நிபுணர் குழு தனது அறிககையில் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, இந்தப் பிரேரணை ஏன் தோற்கடிக்கப்பட்டது என ஆராய்ந்து, மீண்டும் அதனைக் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை ஈழம் டெய்லி சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

2009ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை இந்தியா உட்பட அனைத்து ஆசிய நாடுகளும், விடுதலைக்காகப் போராடிய கியூபா போன்ற நாடுகளும் எதிர்த்து வாக்களித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.