Wednesday, May 25, 2011

ஜெயலலிதாவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்

முதலமை‌ச்சர் ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்” எ‌ன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக்கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் எ‌ன்பது அனைவரு‌ம் அ‌றி‌ந்த உ‌ண்மையாகு‌ம்.

ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட உடனே, புலிகளின் சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த தளபதி கிட்டு இக்கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும், இக்கொலை சம்பந்தமான சில உண்மைகள் தங்களுக்குத் தெரியும் என்றும் இந்திய புலனாய்வுத் துறை அணுகினால் அவற்றைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இந்திய புலனாய்வுத் துறை இறுதிவரை அவரைச் சந்தித்து அந்த உண்மைகளைப் பெற முயற்சி செய்யவில்லை.

இத்தனை ஆண்டு காலம் கழித்து குமரன் பத்மநாபன் மூலமாக இத்தகையப் பிரசாரம் செய்யப்படுவது தமிழக மக்களைக் குழப்புவதற்கான பொய்ப் பிரசாரம் ஆகும். ஈழத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும் தி.மு.க.வும் செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் தேர்தலில் சரியான பாடம் கற்பித்துள்ளனர். எனவே மக்களைக் திசைத் திருப்பத் திட்டமிட்டு குமரன் பத்மநாபன் மூலம் பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது.

த‌மிழக முதலமை‌ச்சர் ஜெயலலிதா ஈழ‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யி‌ல் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் மத்திய அரசைக் கலக்கமடைய வைத்துள்ளன. மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலையை தமிழக முதலமை‌ச்சர் எடுப்பது பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் மத்திய அரசின் உளவுத்துறை, குமரன் பத்மநாபன் மூலமாக ஜெயலலிதாவை படுகொலை செய்ய புலிகள் திட்டம் தீட்டியதாக செய்தியைப் பரப்பியுள்ளது.

எம்.ஜி.ஆர். செய்த பேருதவிகளை புலிகள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவுக்கும் அல்லது வேறு யாருக்கும் ஒருபோதும் எவ்வித தீங்கும் இழைக்க மாட்டார்கள்” எ‌ன்று பழ. நெடுமாறன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.