Thursday, May 19, 2011

இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோற்கடித்தோம் – வாசுதேவ!

இந்தியாவின் உதவியுடனேயே பிரபாகரனை தோல்வியடையச் செய்தோம். அதேபோன்று ஐ.நா.வின் பக்கச் சார்பான அறிக்கையையும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தோல்வியடையச் செய்வோம் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை இந்திய கூட்டறிக்கை இன்றைய காலத்தின் தேவையாகுமென்றும் அமைச்சர் கூறினார். இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெளிவுபடுத்துகையில்,

இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி 13 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை முன்னெடுப்பதை உறுதி செய்து கூட்டறிக்கை விடப்பட்டுள்ளமை இன்றைய காலத்தின் தேவையாகும். ஐ.நா. அறிக்கை எமது நாட்டுக்கு எதிராக பக்கச் சார்பாக தயாரிக்கப்பட்டது.

உலகில் எமது நாட்டை தனிமைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது. எனவே இதற்கு பலம் மிக்க எமது அயல்நாடான இந்தியாவின் உதவியை நாடுவதில் எதுவிதமான தவறும் இல்லை. அத்தோடு அவசர காலச் சட்டம் நீக்கம் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளமை போன்றவை தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் இந்தியாவிற்கு அடிபணிவதாக கருதப்படாது. ஏனெனில் பிரபாகரனை தோல்வியடையச் செய்வதற்கு இந்தியாவே எமக்கு உதவியது. எமது எந்தப் பிரச்சினைக்கும் வேறெந்த நாடுகளைவிட எமது அயல் நாடான இந்தியாவின் உதவியே அவசியமானதாகும். இலங்கையும் இந்தியாவும் இணக்கப்பாட்டு ரீதியில் பிரிக்க முடியாத உறவுகளைக் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளால் 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதை தடுக்க முடியாது. 18 ஆவது திருத்தத்திற்கு எனக்குள் விருப்பமில்லை. ஆனால் அரசாங்கத்திற்குள் உள்ளேன். எனவே ஆதரவாக வாக்களித்தேன் என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.