Saturday, May 07, 2011

நோர்வேயில் இலங்கை தலைவர்கள் 20பேருக்கு எதிராக வழக்கு !

நோர்வே நாட்டில் இலங்கைத் தலைவர்களுக்கு எதிராக பாரிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, அந் நாட்டு முன்னணிப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த, கோத்தபாய உற்பட இலங்கையில் உள்ள உயர்மட்ட தலைவர்கள் 20 பேருக்கு எதிராக போர்குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கில் மகிந்தர் போன்ற இலங்கையின் உயர்மட்ட தலைவர்களும் அடங்குகின்றனர், அவர்கள் வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கு பாதுகாப்பு உண்டு. அந் நாடுகளில் அவர்கள் கைதுசெய்ய முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. ஆனால் அரசு முறைப் பயணத்தைத் தவிர, தனிப்பட்ட ரீதியாக அவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்லும் போது கைதாகும் வாய்பு இருப்பதாக நோர்வே பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக நோர்வேயில் தொடரப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதிகளாக 20 பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது. இவர்கள் மீது பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. போர் நடைபெற்ற காலத்தில், மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் என பல்வகையான சான்றுகள் நோர்வே நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இனி நோர்வே நாட்டினுள் இலங்கை உயர் அதிகாரிகள் எவரும் வரமுடியாதவாறு தற்போது போடப்பட்டுள்ள வழக்கு கடுமையாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சமாதான காலத்தில் அதன் ஏற்பாட்டாளராக இருந்த நோர்வே அரசாங்கம் தாம் நடு நிலை வகிப்பதாகக் கூறிவந்தாலும், புலிகளின் விழ்ச்சிக்குப் பின்னர் இலங்கை அரசோடு தனது உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது. அதற்கும் ஒரு படி மேலேபோய், புலம்பெயர் தமிழர்களையும், இலங்கை அரசையும் தான் சேர்த்துவைக்கப் போவதாகவும் அது கூறிவருகிறது. இந் நிலையில் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் நோர்வே தமிழர் அவையால் இந்த வழக்கு வெற்றிகரமாக நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நோர்வே அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே பெரும் சிக்கல் நிலை தோண்றும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

எது எவ்வாறு இருப்பினும், தமிழர்கள் பரந்து வாழும் நாடுகள் பலவற்றில், இலங்கை அரசுத் தலைவர்களுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றது. இதே நிலை நீடித்தால், இன்னும் சிறிது காலத்தில் இலங்கைத் தலைவர்கள் எந்த ஒரு வெளிநாட்டிற்கும் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைதோன்றும் என்பதில் சந்தேகமில்லை எனலாம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.