சிறீலங்காவில் இடம்பெற்ற போரின் இறுதி நாட்களில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்து காணாமல்போன விடுதலைப்புலிகள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என வாசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த 7 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக முன்னர் பணியாற்றிய யோகரத்தினம் யோகி உட்பட 20 ற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சரணடைந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. ஆனால் அவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் இல்லை.2009 ம் ஆண்டு மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த யோகி, பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதை மக்கள் கண்டுள்ளனர். ஆனால் அந்த தினத்தை சரியாக தெரிவிக்கமுடியவில்லை.
பெரும்பாலானோர் இறுதிக்கட்டச் சமர் நடைபெற்ற இடத்தின் தென்கிழக்கு பகுதியான வட்டுவாகல் பகுதியிலேயே சரணடைந்திருந்தனர். அந்த பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் 59 வது படையணி நிலைகொண்டிருந்தது.
கேணல் ரமேஸ் போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால் அவர் சிறீலங்கா இராணுவத்தின் தடுப்புக்காவலில் இருந்தது தொடர்பில் எம்மிடம் பல காணொளி ஆதாரங்கள் உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு ஒன்று சிறீலங்காவில் அமைக்கப்பட வேண்டும்.
விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் ஒருவருடன் அவரின் மனைவியும் பிள்ளைகள் இருவரும் ஒரே பேரூந்தில் ஏற்றிச் செல்லபட்டிருந்தனர். ஆனால் அதன் பின்னர் அவருக்கு என்ன நடைபெற்றது என்பது தெரியாது.
ஐ.நாவின் சரத்துக்களின் அடிப்படையில் தீர்க்கப்படாத காணாமல் போனோர் தொடர்பான விடயங்களில் ஐ.நா விசாரணைகளை மேற்கொள்ள முடியும்.
எனவே சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் சிறீலங்கா அரசு அதனை காத்திரமாக மேற்கொள்வதாக தெரியவில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.