போர் முடிந்து விட்டதான ஒரு சூழலில் தமது இருப்பையும் வருமானத்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக, ஈபிடிபி மற்றும் கருணாகுழு போன்ற துணைப்படைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை உறுதிப்படுத்துவதற்கான சம்பவங்களையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் போர் நடந்தபோது இந்த துணைப்படைகள் இராணுவத்துக்கும் அப்பால்பட்ட பணிகளை ஆற்றின என்று குறிப்பிடும் அந்த அறிக்கை, படையினரின் உதவியுடனேயே இந்தத் துணைப்படைகளின் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. துணைப் படைக்குழுக்கள் பற்றி அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2010 டிசெம்பர் 31 ஆம் திகதி அடையாளம்தெரியாத ஆயுததாரிகள், யாழ்ப்பாணத்துக்கு அருகே கேதீஸ்வரன் தேவராஜாவின் வீட்டுக்குள் புகுந்து அவரைக் கொன்றார்கள். மணல் திருட்டுத் தொடர்பாக அவர் தனது பேஸ்புக் இணையத்தளத்தில் சில ஒளிப்படங்களைப் பதிவேற்றம் செய்திருந்தார். ஈபிடிபி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அள்ளுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று பெரும்பாலான யாழ். மக்கள் நம்புகிறார்கள். இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும் அஞ்சுகிறார்கள். 2010ஆம் ஆண்டில் மட்டும் 77 பேர் காணாமல் போயுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள். சிலர் கொழும்பைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் பொருளாதார நோக்கங்களுக்காகத் தமது குடும்பங்களுக்குக் கூடச் சொல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள் என்று அரசு கூறும் விளக்கத்தைப் பெரும்பாலான மக்களும் மனித உரிமை அமைகப்புக்களும் நிராகரிக்கின்றன. இந்த ஆண்டு பணத்துக்காக கடத்தல் இடம்பெறுவது அதிகரித்துள்ளது. வடக்கு கிழக்கில் இது அதிகமாகக் காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்களுக்கு அரசின் பங்காளியான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி அமைப்புத்தான் காரணம் என்று உள்ளூர்வாசிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு கிழக்கில் இத்தகைய கடத்தல்களை யார் செய்கிறார்கள் என்பதை உறுதியாக அடையாளப்படுத்த முடியவில்லை. இருப்பினும் துணைப் படைகள் இத்தகைய கடத்தல்களின் பின்னணியில் இருக்கக் கூடும் என்று தமது முன்னைய அனுபவங்களைக் கொண்டு இந்தப் பகுதி மக்கள் கருதுகிறார்கள்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.