Sunday, December 26, 2010

உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பலையை சமாளிக்கும் நோக்கில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிபுணர்கள் குழுவினை சிங்கப்பூரில் சந்திப்பதற்கு திட்டம்:

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவிற்கும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பை சிங்கப்பூரில் நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிபுணர்கள் குழுவின் இலங்கை விஜயத்திற்கு உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பலையை சமாளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் சிங்கப்பூரில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினரும், ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவினரும் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.என்.பி, தேசப்பற்றுடைய தேசிய இயக்கம் உள்ளிட்ட தேசியவாத கட்சிகளும் அமைப்புக்களும் நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதனை கடுமையாக எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சர்வதேச ராஜதந்திர உறவுகளை பேணிக் கொள்வதற்கும், தேசிவாத சக்திகளின் எதிர்ப்பை சமாளிப்பதற்காகவும் இவ்வாறு வெளிநாடொன்றில் நிபுணர்கள் குழுவை சந்திப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு பணிகளை முடிவுறுத்தும் வரையில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நிபுணர்கள் குழு, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினை வெளிநாடொன்றில் சந்திக்கும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினைத் தவிர்ந்த வேறும் தரப்பினர்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை சந்திப்பதனை விடவும் தமது பணிகள் பரந்தளவிலானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.