ஈழத்தை, போரினால் நலிந்த மண் என்று எவர் ஈவிரக்கம் கொண்டார்? தமிழர்களின் அரசியல் காயத்தை அபிவிருத்திக் களிம்பு தடவி ஆற்றலாம் என்ற நப்பாசையிலும், தடுப்பார் இல்லாத நேரம் பார்த்து இருப்பைப் பங்குபோடும் அவசரத்திலும் இயற்கை வளங்கள் வேக வேகமாகச் சுரண்டப்படுகின்றன என்று சூழலியலாளரும் இயற்கை, பண்பாட்டு மரபுவளப் பேணுகை மையத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கடற்கோள் நினைவாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு..
உலக முதல் உயிரினத்தின் தாய்மடி கடல். உயிர்ப் பரிணாமத்தில் முதற் கருவை சுமந்தவள் என்ற வகையில் மனுக்குலத்தின் அன்னையும் அவளே. எமது நாடி, நாளங்களில் சுற்றோடிக் கொண்டிருக்கும் இரத்தத்தில் இன்றளவும் அவளின் உப்புக் கரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், எமக்கு வாழ்வளித்த அவளே சாவும் அளித்தாள்.
2004ஆம் ஆண்டு மார்கழி 26ஆம் திகதி நத்தார் குதூகலமும் கார்குளிரும் கலையாத காலைப்பொழுதில், கடல்மாதா பெரும் கோபம் கொண்டெழுந்தாள். அலைக் கரங்களில் கொடுவாள் ஏந்தி உக்கிர தாண்டவமாடினாள். சங்க இலக்கியங்களில் படித்த கடற்கோளை, ஈழத்தமிழர்கள் தம் வாழ்நாளில் அன்றுதான் அனுபவித்து உணர்ந்தனர். ஆனால், என்ன, ஏது என்று அறிந்து கொள்ளத் தலைப்பட முன்பாகவே, நெய்தல் நிலம் போர்க்களம் ஆகிவிட்டிருந்தது.
கடற்தாய் காளிவேடம் பூண்டு கரையெங்கும் உயிரெடுத்துப் புதைத்துத் திரும்பியதில், இலங்கையின் அழகான கரையோரம் எங்கும் பிணக்காடாகி இருந்தது. தோராயமாக, முப்பத்தி ஐயாயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர். இலட்;சக்கணக்கான வீடுகள் உடைத்துத் தீக்குச்சிகள் போல வீசப்பட்டிருந்தன. இலங்கையின் வரலாற்றில் சொல்லில் வடிக்கமுடியாத, இன்னமும் ஆறாத பெரும் தேசியத் துயரம் இது.
இந்தோனேசியாவுக்கு அருகே, இந்துமா கடலின் அடித்தளத்தில் நிகழ்ந்த நிலநடுக்கமே கடற்கோளைப் பிரசவித்தது. நிலநடுக்க அதிர்வுகள் கடல் நீரில் ஏறி மேன்மேலும் வேகம் பெற்றதால், அலைகள் கரையை நெருங்கும்போது அசுரப்பலம் பெற்றன. ஆழிப்பேரலைகளாக மேலெழுந்து வந்தன. இந்த இயற்கை அநர்த்தத்தினால் அன்று, இந்து சமுத்திரக் கரையோர நாடுகளில் ஏறத்தாழ இரண்டரை இலட்சம் பேர் பலியாகினர். மில்லியன் கணக்கானோர் ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர்.
மானுட சமூகத்துக்குச் சொல்லொணா வலியைத் தந்த கடற்கோள், கூடவே, எமக்கு வலிமையான பாடம் ஒன்றையும் போதித்துவிட்டுச் சென்றிருக்கிறது. இலங்கையில் அம்பாந்தோட்டையில் கண்டற் காடுகள் செழித்திருந்த கப்புஹென்வுல கரையில் ஆழிப்பேரலை அடங்கிப்போனது. அங்கு, இரண்டே இரண்டு உயிர்களை மட்டுமே பறிக்க முடிந்திருக்கிறது. ஆனால், அம்பாந்தோட்டையில் கண்டல்கள் அழிக்கப்பட்ட வாண்டுறுப்பா கிராமத்தில் ஆறாயிரம் பேர் வரை பலியாகினார்கள்.
கண்டல் மரங்களைத் தறித்து, கடற்புற்களைக் களைந்து, முருகைக் கற்களை அகழ்ந்து, மணல் மேடுகளை அகற்றி, இறால் பண்ணைகளை அமைத்து சூழல் ஆரோக்கியம் சீர்குலைக்கப்பட்ட ஆசியக் கரையெங்கும் ஆழிப்பேரலை ஊழித்தாண்டவம் ஆடியது. ‘இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்’ என்று உரக்கப் போதித்துத் திரும்பியது.
ஆனால், கடல்மாதா உலகு அதிரக் கூவி எச்சரித்த பின்பும், அவளின் தறுதலைப் பிள்ளைகள் நாம் கேட்பதாக இல்லை. பட்டும் திருந்தாத பாவிகளாகத் தொடர்ந்தும் இயற்கையைச் சூறையாடி வருகிறோம்.
ஈழத்தை, போரினால் நலிந்த மண் என்று எவர் ஈவிரக்கம் கொண்டார்? தமிழர்களின் அரசியல் காயத்தை அபிவிருத்திக் களிம்பு தடவி ஆற்றலாம் என்ற நப்பாசையிலும், தடுப்பார் இல்லாத நேரம் பார்த்து இருப்பைப் பங்குபோடும் அவசரத்திலும் இயற்கை வளங்கள் வேக வேகமாகச் சுரண்டப்படுகின்றன.
காங்கேசன்கடல் அருகே சுண்ணாம்புக் கற்பாறை அதலபாதாளத்துக்குத் தோண்டப்படுகிறது. நாகைக்கடல் அருகே மணல் கொள்ளை போகிறது. குருநகர்க்கடல் அருகே, கடலடி வளங்களை ரணகளமாக்கும் இழுவைப்படகுகளுக்குக் கொடியசைத்து அனுமதி வழங்கப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் சிந்திய இரத்தமும் கண்ணீரும் இன்னமும் காயவில்லை. அதற்குள்ளாக, முல்லைக் கடல் அருகே இறால் பண்ணைகளுக்கு இடம் தேடப்படுகிறது. நந்திக்கடலில், சீனர்களுக்கு விருந்து படைக்க, கொடுவா மீன் வளர்ப்புத்திட்டம் பரிசீலனையில் உள்ளது. இவை சில உதாரணங்கள்தாம்.
கடல் மாதாவின் முலைச்சுரப்பு மட்டுமே அவள்தம் புதல்வர்களான எங்களுக்கானது. ஆனால், தலைமுறை தலைமுறையாக வளமூட்டவேண்டிய முலைகளை நுகர்வு வெறி தலைக்கேறி, அறுத்துக் குடிக்கும் முயற்சிகளிலல்லவா நாம் இறங்கியிருக்கிறோம். கோபம் தணிந்த சாந்தசொரூபியாக உறங்கிக் கிடக்கும் அவள், வேதனை பொறுக்காது மீண்டும் பொங்கிச் சீறமாட்டாள் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.
கடற்கோள் நினைவு நாளான இன்று கடற்தாயின் போதனையை ஏற்று, இயற்கை வளங்களைப் பாதுகாத்து, அளவோடு நுகர்ந்து வளமோடு வாழ்வோம் என்று உறுதியேற்போம். இதுவே மாண்ட உறவுகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும். எமது எதிர்கால இருப்புக்கான உத்தரவாதமும் இதுவே.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.