சீமான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து நேற்று விடுதலை ஆனார்.
சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து கடந்த ஜுலை மாதம் 10ந் தேதி சீமான் தலைமையில் இந்த நாம் தமிழர் இயக்கத்தினர் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இறைமைக்கு எதிராக பேசியதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜுலை 12ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
பிரிவினைவாதத்தை தூண்டுவதாகக் கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பு வகித்த கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றம் மற்றும் தலைமையகம்) ஜுலை 16ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோரைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் 09.12.2010 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. போலீஸ் கமிஷனர் அதிகாரத்தில் உள்ளவர்தான் இதுபோன்ற உத்தரவில் கையெழுத்திட வேண்டும் என்றும், அவருக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பவர்கள் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று ஜேம்ஸ் பீட்டர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், சென்னை போலீஸ் கமிஷனர் பயிற்சிக்காக சென்றிருந்ததால் அந்தப் பொறுப்பை வகிக்க கூடுதல் போலீஸ் கமிஷனர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர் கையெழுத்திட்டது, தடுப்புக் காவல் உத்தரவு என்பதால் அது செல்லத்தக்கது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், போலீஸ் கமிஷனரின் கீழ் நிலை அதிகாரியாகத்தான் கூடுதல் போலீஸ் கமிஷனர் இருக்கிறார். எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் செயல்பட முடியாது. எனவே அந்த சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
சிறையிலிருந்து நாம் தமிழர் இயக்க தலைமை அலுவலகத்திற்கு வந்த தலைவர் சீமான் உரையாற்றினார்.
கருணாநிதியை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு:
முதலமைச்சர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட சீமான், வேலூர் சிறையிலிருந்து நேற்று பிற்பகல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரவேற்க சிறையிலிருந்து வெளியே வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் இதைக் கூறினார்.
அவர் மேலும் கூறியது:
'' தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்ததின் அடிப்படையில் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். நான் அரசின் தவறான உத்தரவினால் 5 மாதங்கள் சிறையில் இருந்துள்ளேன். இதுபோல முன்பு என்னை கைது செய்தபோது 3 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். அதாவது மொத்தம் 8 மாதங்கள் இந்த அரசு என்னை ஜெயிலில் அடைத்துள்ளது.
8 மாதம் சிறையில் இருந்ததால் எனது இயக்க வளர்ச்சிப்பணியை மேற்கொள்ள முடியவில்லை. அதுபோல என்னுடைய தொழிலையும் செய்யமுடியவில்லை. அதனால் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதற்காக அரசு மீது வழக்கு தொடருவேன். காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பது என்பது எங்களது கொள்கை. அந்த கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். தொடர்ந்து காங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்வோம் என்று சீமான் கூறினார்.
பின்னர் சீமான் கார் மீது ஏறி நின்றபடி, கூடியிருந்த இயக்கத்தினர் மத்தியில் பேசியதாவது:
தேர்தல் நேரத்தில் நான் பேசக்கூடாது என்றுதான் என்னை ஜெயிலுக்குள் தள்ளினார்கள். 5 மாதங்கள் ஜெயிலில் இருந்துள்ளேன். இப்போது வெளியே வந்துவிட்டேன். இனிமேல் பேசித்தானே ஆக வேண்டும். நமக்கு இனிமேல்தான் வேலை அதிகம் உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு பீகார் மாநிலத்தில் 4 இடமாவது கிடைத்தது. ஆனால் தமிழ் நாட்டில் அது கூட கிடைக்காது. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். அப்படியானால், வேறு கட்சியுடன் ஏன் கூட்டணி? தனியாக போட்டியிட வேண்டியது தானே? என்றார் சீமான்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.