ஆறு தசாப்தங்களாக போராடிய தமிழினம் போராடிய காலங்களில் தலை நிமிர்வோடு வாழ்ந்தது நிதர்சனம்.ஆனால் இன்றைய நிலை தமிழர் சொந்த தேசத்தில் சுகமிழந்து முகமிழந்து தலைகுனிந்து அதிகாரவர்க்கத்தின் சேவகராய் தலையாட்டும் பொம்மைகளாக இருக்கின்ற அவலநிலை சரி அப்படியானால் இந்த நிலை எதனால் வந்தது என ஒவ்வொரு தமிழனும் தன்னை நோக்கி சுட்டுவிரலை நீட்டி கேள்வி கேட்டால் விடை தானாக வந்து விடும்.
சரி அப்படி என்ன தவறிளைத்தோம் என உங்கள் இதயம் படபடக்கலாம் எப்படி இருந்தாலும் எங்களின் அழுக்கை கழுவாமல் விடுதலை இலக்கை எட்டுவது முயல்க்கொம்பாகவே மாறிவிடும்.
ஆகவே முதலில் எங்களின் அழுக்கையும் அதை எவ்வாறு கழுவலாம் என்பதையும் அலசிப்பார்ப்போம். முதல் மூன்று தசாப்தங்களும் தந்தை செல்வாவின் அறவளிப்போராட்டம் அன்றைய ஆதிக்கவர்கத்தினால் ஆயுதவளியில் முடக்கப்பட்ட போதுதான் இளைஞர்களே தமிழீழ தனியரசிற்கான போராட்டத்தினை முன்னெடுத்து செல்லவேண்டுமென்ற தந்தை செல்வாவின் ஆசீர்வாத அறைகூவல் தமிழீழ தேசத்தின் அடுத்த கட்ட ஆயுதவளி போராட்டத்திற்கு போர் முரசாக முழங்கியது.
இதன் வெளிப்பாடே பிற்கால மூன்று தசாப்தங்களின் தமிழீழ தேசியத்தலைவரின் ஆயதவளியிலானபோராட்டம்.
இந்த போராட்டமே தமிழினத்தை தரணியில் தலை நிமிரவைத்ததோடு சிறீலங்கா பேரினவாதிகளின் கொடுங்கோலாட்சியை அம்பலப்படுத்தியது. ஆனாலும் உலகத்தின் அரசியல் அபிலாசையின் காரணமாக தனியரசாக பிரிந்து போக உடந்தை இல்லாத இவ்வுலகம் எம்மை பந்தாடியது அதனால் ஜநாவின் மனிதநேய சாசனமும் மரணப்படுக்கையில் மாண்டது.
சரி இந்த அநியாயம் ஒருபுறமிருக்க தமிழினம் விடுதலை பெறவேண்டும் எமது குழந்தைகளாவது அடிமைநிலை அகன்று இனிதான வாழ்வு வாழவேண்டுமென்பதற்காக தமிழீழம் என்ற ஒரே கனவோடு எங்கள் சகோதர சகோதரிகள் வீரசாதனைகளை நிலைநாட்டி யாருமே நினைத்து பார்க்கமுடியாத தியாகங்களை புரிந்து தாய்மண்ணின் மடியில் கண்மூடித்தூங்குகின்றனர்.
காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த தன் இனத்தை மானசீகமாக நேசித்தவர்கள் தலைவர் வழியில் நின்று தங்கள் உயிரை கொடையாக தந்து மனித வாழ்வின் மகத்தான மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
சரி இப்போது நாம் சிந்திக்க வேண்டிய விடயத்துக்கு வருவோம் தமிழ் இனத்துக்கா இவர்கள் எல்லாவற்றையும் துறந்து மறத்தமிழர்களாக வீறுநடைபோடுகின்ற காலத்தில் எத்தனைபேர் அவர்களுக்கு ஆதரவாக நின்றோம் எத்தனைபேர் ஆத்மாத்தமாக தேசியத்தை காதலித்தோம்.
எல்லோருக்கும் சுதந்திரம் வேண்டும் போராட்டம் வேண்டும் ஆனால் எந்த தியாகமும் செய்யாமல் வேண்டுமென்றால் வானத்தில் இருந்து விடுதலை பிறக்குமா?
நாம் சிறிய இனம் அதனால் பலமானவர்களா இருந்தால்த்தான் எம் இனத்தை மீட்கலாம் என எத்தனை பேர் தங்களின் ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்கள் மாறாக என்ன செய்தோம்?
காட்டிக்கொடுத்தோம் எச்சில் எலும்புத்துண்டுகளுக்காக எதிரிகளே எசமானர்களென கூசாமல் சொந்த தேசத்துக்கும் மக்களுக்கும் இரண்டகம் செய்தோம்.
நேசக்கரம் நீட்டாமல் பார்வையாளர்களாக மட்டும் முடங்கிக்கிடந்தோம். தேசவிடுதலைக்கான எல்லாவிதமான முன்னெடுப்புக்களையும் சந்தேகக்கண்ணோட்டத்துடன் விமர்சித்து முட்டுக்கட்டையாக நின்றோம்.
புலம்பெயர்ந்த நாடுகளில் பல லட்ச்சம் தமிழர்கள் வாழ்கின்றோம் என்று மார்தட்டுகின்ற அளவிற்கு எத்தனை லட்ச்சம் பேர் விடுதலைத்தேரை நகர்த்த கரம் கொடுத்தம். தயவுசெய்து நாம் ஒவ்வொருவரும் இழைத்த குற்றத்தினை மனச்சாட்சி என்ற சட்டத்தின் முன் நிறுத்தி விசாரித்துப்பார்ப்போம். நிச்சயம் விடுதலையை பலப்படுத்தாது வீணடித்த குற்றத்திற்காக நாம் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படவேண்டியவர்கள்.
அதுமட்டுமல்ல முள்ளிவாய்க்காலுக்கு பின்பும் எங்களின் தவறை புரிந்து கொள்ளாது மண்ணிற்காக போராடியவர்கள் மீது குற்றத்தை சுமத்த முற்படுவதும் தமிழீழத்தேசியத்தலைவர் அவர்களால் கட்டுக்கோப்பாக அமைக்கப்பட்ட சர்வதேசக்கட்டமைப்பை சிதைக்கமுனைவதும் மே 18 இற்க்கு முன் வந்த போராளி பின் வந்த போராளி என்று பொய்யான பெயர்களில் கட்டுரை எழுதி தமிழர்களின் மனோ பலத்தை உடைத்து விடுதலை கனலை அணைக்க முயல்வதும் இன்னும் தொடர்கின்ற வேதனையாக இருக்கிறது.
இறுதியாக ஒரு விடயத்தை ஆணித்தரமாக கூறலாம் என நினைக்கின்றேன் அதாவது முள்ளிவாய்க்காலில் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாக எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதை ஊடங்களில் வெளிவந்த காணொளிகள் மூலம் பார்த்து இதயம் படபடத்து அடங்காத ஆத்திரத்தில் இருக்கின்றோம் இந்த ஆத்திரமும் கோபமும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டும் இதைவிட்டு இன்னும் சிங்களவனை கொன்றோம் முஸ்லீமை விரட்டினோம் விடுதலைப்புலிகள் விடுதலைக்காக போராடவில்லை தலைக்கனத்தோடு போராடினார்கள் வன்முறை நேசித்தார்கள் என முள்ளம்தண்டில்லாமல் உளறும் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களை ஊடகம் என்ற புனித தளத்தில் இருத்தி தமிழர் மனங்களை காயப்படுத்தாமல் கொண்ட கொள்கையில் உறுதியாய் இன்றும் இருப்பவர்களோடு கைகோர்த்து நடந்தால் தமிழன் தமிழனாக தரணியில் தலை நிமிரலாம்.
- தூயவன்







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.