Sunday, November 28, 2010

நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற தேசியமாவீரர் நாள் நிகழ்வு

 நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள Valle Hovin உள்ளரங்க விளையாட்டு மண்டபத்தில் கார்த்திகை மாதம் 27ம் நாள் சனிக்கிழமை மதியம் 12.45 மணிக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் மக்களின் பேராதரவோடு உணர்வுபர்வமாக கொண்டாடப்பட்டது.

இன்னும் சில ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டிய் நிலைவரினும்,எத்தனை வெங்கொடுமைகளை எதிரி எம்மீது வலிந்து திணித்தாலும்,விலைபோகும் பிறப்புக்களை விலைபேசித் தன்வசப்படுத்தினாலும், எம்தலைவன் எமக்குத்தந்த இலட்சிய இலக்காம் தமிழீழத்தனயரசின் இலட்சிய வேட்கையை மானமுள்ள தமிழனிடம் இருந்து எவரும் விலைபேசிட முடியாது என்பதனை நோர்வே வாழ் தமிழ் மக்கள் புரிந்தும் புரியாதவர்போல், அறிந்தும் அறியாதவர்போல்,தெரிந்தும் தெரியாதவர்போல் நடப்போர்க்கும் ,புலத்துத் தமிழனின் இலட்சிய இலக்கை புரியாது நடக்க,நடத்த முற்படுவோர்க்கும், இவ்வுலகிற்கும் மீண்டும் ஒருதடவை உறுதிபட உறைக்க வெளிக்காட்டியுள்ளார்கள்.

12.45 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த சர்வோதயன். சத்தியானந்தன் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த திரு.நடராசா.நவரத்தினராசா அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதன்பின் அனைத்துலகச் செயலகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. இவ் அறிக்கையின் முக்கிய சில கருத்துக்கள் ஆங்கிலத்தில் பிறமொழி பேசுவோரும் வருகை தந்திருந்த காரணத்திற்காக வாசிக்கப்பட்டது. தொடர்ந்து மணிஒலி ஒலிக்கப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டது. திரு பெரியசாமி மணியரசன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேளைகளே பாடல் மாவீரர்களை நினைவு கூரும் காட்சிப் படிமங்களோடு வெண்திரையில் விரிந்தது.
பாடல் நிறைவடையும் வரை மக்கள் எழுந்து நின்று மனமுருகித் தலை வணங்கினார்கள்.தொடர்ந்து மாவீரர் குடும்பங்கள் எம் மாவீரச் செல்வங்களுக்கு முதல் வணக்கம் செலுத்த, பொதுமக்ககளும் மலர்தூவி,சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தினர்.தொடர்ந்து தமிழீழத் தாய் நாட்டிற்காகத் தமது இன்னுயிரை ஈந்த மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி எமது இலட்சிய இலக்கை அடையும் வரை அற்பணிப்புடன் செயற்படுவேன் என்று உறுதி மொழி எடுக்கப்பட்டது.

திரு.பெரியசாமி.மணியரசன் அவர்கள் உரையாற்றும் போது புலம்பெயர் மக்களின் ஒருங்கிணைந்த சக்திதான் இன்று பலமாகவும் இறுக்கமாகவும் இருக்கவேண்டும் காரணம் எதிரி முதற்கொண்டு,ஏமாற்று வலை வீசுபவன்வரை இன்று புலத்து மக்களைச் சிதைக்கும் வழிமுறைகளில்ததான் அதி தீவிர முனைப்புக் காட்டி நிற்கின்றான், ஆகவே அவர்களுடைய தேவைக்கும் நோக்கத்திற்கும் பலிக்கடாக்கள் ஆகாது உறுதியோடும்,நம்பிக்கையோடும் தமிழீழத் தனியரசிற்கான இலட்சியப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதனை,அசைகின்ற தேரின் வடத்துக்குக் கரம்கொடுப்பதிலும் நிற்கின்ற தேரை இழுப்பதற்கு வடத்துக்குக் கரம் கொடுப்பதே மேலான பணி என்ற உதாரணத்தோடு எடுத்துக் கூறினார்.

தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டின் கடந்தகால செயற் திட்டங்களையும்,வருங்காலத்தில் செய்யப்படவேண்டிய முக்கிய பணிகள் சார்ந்தும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து தமிழர் கலை பண்பாட்டுக்கழக இசைக் குழுவினரின் விடுதலை கானங்கள் இசை நிகழ்வும், அன்னை பூபதி திழ்க்கலைக் கூட மாணவிகள் வழங்கிய நிமிர்வு எனும் நாட்டிய நாடகமும் கலைநிகழ்வுகளாக இடம்பெற்றன.

தேசியக்கொடி இறக்கி வைக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலை அனைவரும் எழுந்து நின்று கரகோசம் எழுப்பி பாடி நிகழ்வினை 17.35 மணிக்கு நிறைவுக்குக் கொண்டுவந்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.