“இந்த நாட்டை அதிசிறந்ததொரு நாடாக உருவாக்கும் மாபெரும் பொறுப்பை இலங்கை ஜனநாயக குடியரசின் மக்களான நீங்கள் என்னிடம் கையளித்துள்ளீர்கள். நீங்கள் எதிர்ப்பார்ப்பதை விட நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு எனக்குள்ளது. முதலாவது முறை நான் பதவியேற்கும் போது நாடு இரண்டு பட்டிருந்தது. ஆனால் கடந்த வருடம் நாம் இந்த நாட்டை ஐக்கியப்படுத்தினோம்.
இந்நிலையில் நமது நாட்டை அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்ல வேண்டிய வேலைத் திட்டங்களையே நாம் முன்னெடுக்க வேண்டும். அபிவிருத்தி இல்லாத இடத்தில் சமாதானம் இல்லை.
அந்த வகையில் இன்று முதல் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை முன்னெடுத்து இந்த நாட்டை சிறந்த நாடாக கட்டியெழுப்புவோம். மன உறுதியுடன் நாம் இந்த நாட்டை இன்று பொறுப்பேற்கிறோம்.
சிறிலங்காவின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்று இரண்டாவது தடவையாகப் பதவியேற்றுக் கொண்டுள்ள மகிந்த ராஜபக்ச, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இவ்வாறு தெரிவித்தார். அவரது உரையில் அபிவிருத்தி தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை கொடுத்தார். இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பாக அவர் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
போரின் மூலமாகப் பெறப்பட்ட வெற்றியின் அடுத்த இலக்காக அபிவிருத்தியே உள்ளது அதனை நோக்கிய பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி இன்று நிகழ்த்திய உரையின் முக்கிய சாரமாக அமைந்திருந்தது.
பதவிப் பிரமாணத்தின் உரையாற்றிய ஜனாதிபதி முக்கியமாகக் கூறியதாவது:
கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தம் காரணமாக இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடியது. ஆனால் இனி அவ்வாறானதொரு நிலைமை உருவாகாது. அப்படி உருவாகவும் நாம் இடமளியோம்.
இன்று கிராமங்களில் புதிய ஒளி பிறந்துள்ளது. பல கிராமங்கள் அபிவிருத்தியடைந்துள்ளன. இந்நிலையில் மேலும் பல கிராமங்களை அபிவிருத்தியடைந்த வலயங்களாக உருவாக்குவோம். தாய் நாட்டின் அபிவிருத்திக்கான தேசிய கதவு திறக்கப்பட்டுள்ளது. ஒரு துளி இரத்தம் கூட கடலில் கலக்க விடாது நாட்டை அபிவிருத்திக்கு உட்படுத்துவோம். நாட்டுக்காக தியாகத்துடன் வேலை செய்யும், அனைவருக்கும் கௌரவமானதொரு சூழலை உருவாக்குவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
எமது இளைஞர்கள் நாட்டின் எதிர்கால சொத்துக்களாவர். அவர்களின் பலம் தொடர்பில் எனக்கு நம்பிக்கை உண்டு. இந்நிலையில் 3 மொழிகளையும் அறிந்த எதிர்கால பிரஜைகளாக அவர்களை உருவாக்க வேண்டும். இலங்கையின் எதிர்கால பிரஜைகள் சர்வதேசத்தில் முதலிடம் பெறவேண்டும்.
பஞ்சமகா கேந்திர நிலையமாக இலங்கையை உருவாக்க வேண்டும். அதன் மூலம் ஜாதி மத பேதங்கள் மட்டுமன்றி அரசியல் பேதங்களும் மறைந்து விட வேண்டும். நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக பல்வேறு நாடுகளும் எமக்கு உதவி வழங்கின. அதேபோன்று அபிவிருத்திக்காகவும் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளன. அதனால் சர்வதேச நாடுகளும் முன்னெடுத்த ஒப்பந்தங்களை அபிவிருத்தி நோக்கிக் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள், யுத்தம், போதைப்பொருள், ஆயுதங்கள், ஊழல் மோசடிகள் அற்ற நாடே எமக்கு வேண்டும்.
நான் ஓய்வு பெற்றதன் பின்னர் இந்த நாட்டின் பிரஜையொருவர் ‘நீங்கள் இந்த நாட்டுக்காக செய்ய வெண்டிய பொறுப்பக்களை ஒழுங்காக செய்துள்ளீர்கள்’ என்று கூறினால் அதுவே எனது வெற்றியும் நான் செய்த வேலைகளுக்குமான திருப்தியுமாகும்.
இந்நிலையில் நாம் அபிவிருத்தியை நோக்கி மனிதாபிமான உணர்வுடனேயே பயணிக்க வேண்டும். எமது தாய் நாடு இலங்கை. அதனை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. நாம் எல்லோரும் இலங்கையர்கள். இங்கு எல்லோருக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும். அதுதான் எமது தேவை.
பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டிருந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று விடுவிக்கப்பட்டு அங்கு வரலாற்றில் இல்லாத பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றது. இன்று வடக்கில் மக்கள் சுதந்திரமாக வாக்களித்துள்ளனர். அதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டில் அனைத்து வளங்களும் காணப்படுகின்றன. மேலும் பல வளங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எமது இலங்கை ஒரு சிறிய நாடு என்று எவ்வாறு கூறமுடியும்?
முயற்சியுடையான் இகழ்ச்சியடையான். இந்தக் கூற்றுக்கமைய தாய் நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்ல எதிர்காலத்துக்காக அனைவரும் எம்முடன் எழுந்து வர வேண்டும் என்று அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் நல்லதொரு எதிர்காலம் உருவாக பிரார்த்திக்கின்றேன் என அவர் தனதுரையில் தெரிவித்துள்ளார்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.