Sunday, November 28, 2010

எஸ்.எம்.கிருஷ்ணாவின் இலங்கை பயணத்தின் நோக்கம் அம்பலமாகி விட்டது: நெடுமாறன்

இலங்கைக்கு பல்வேறு பொருளாதார உதவிகளைக் கொடுத்து அதன் மூலம் சீனாவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்டுவிட முடியும் என இந்தியா நம்புகிறது. இதற்காகவே எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்துவதும், இனப் பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதுமே இப்போது முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.

அவற்றை இலங்கை அரசு நிச்சயம் செய்யும் என நம்புகிறோம் என இந்திய - இலங்கை கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார்.

மேலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளை மீண்டும் சொந்த இடங்களுக்கு குடியமர்த்துவது விரைவாக நடைபெறவில்லை என தமிழக முதல்வரின் குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, முதல்வரின் கவலை நியாயமானதுதான். ஆனால் இலங்கை அரசுக்கு உள்ள சிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என கிருஷ்ணா கூறியுள்ளார்.

ஆனால், இவருடைய கூற்றை மறுக்கும் வகையில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதையும், மனிதாபிமான பிரச்சனைகளைத் தீர்ப்பதையுமே இலங்கை அரசு முக்கியமாகக் கருதுகிறது என கூட்டுக் குழு கூட்டத்துக்குப் பின் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பேட்டி அளித்துள்ளார்.

இதன் மூலம் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகிவரும் பல லட்சம் தமிழர்கள் குறித்து எஸ்.எம். கிருஷ்ணா சிறிதும் கவலைப்படவில்லை என்பது தெரிகிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பொருளாதாரப் பங்களிப்பு உடன்பாடு செய்வது குறித்து மட்டுமே அவர் பேசியுள்ளார்.

காவிரி படுகையிலும் மன்னார் கடல் பகுதியிலும் எண்ணெய் எடுப்பதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைத்துக் கொடுக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்தாக உள்ளன.

மேலும் வட இலங்கையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு 2 ஆயிரம் கோடி வரை நிதியுதவி அளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

இதுபோன்ற பொருளாதார உதவிகள் மூலம் சீனா பிடியிலிருந்து இலங்கையை மீட்டுவிட முடியும் என இந்தியா நம்புகிறது. இதற்காகவே எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் அம்பலமாகியுள்ளது என்று கூறியுள்ளார் கிருஷ்ணா.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.