ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பன்னாட்டு சட்டங்களுக்கு எதிராக, மனித உரிமைகளை அழிக்கின்ற போர்க்குற்றங்கள் இலங்கையில் நடைபெற்றது குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிப்பதற்காக, மூவர் குழுவை, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிவித்து உள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த இலங்கை மந்திரி விமல் வீரவன்ச, 'ஐ.நா.வின் அறிவிப்பை உடனே ரத்து செய்ய வேண்டும்; அதுவரையிலும், கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகை இடுவோம்; ஐ.நா. அதிகாரிகளைக் கொழும்பில் இருந்து அடித்து விரட்டுவோம்' என்று மிரட்டி அறிக்கை விடுத்தார். இதற்கு, உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இந்தியா எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.
உலகில் எந்த மூலையில் மனித உரிமைகள் மீறப்பட்டாலும், 80 கள் வரை கண்டனம் தெரிவித்து வந்த மத்திய காங்கிரஸ் அரசு, ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு முழு காரணமாக திகழ்வதால், அளவற்ற ஆயுதங்களும், பணமும் சிங்களவருக்கு தந்து போர்க்குற்றங்களுக்கு உடந்தையாகச் செயல்பட்டதால், ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைத் தோற்கடித்தது மட்டும் அல்லாமல், சிங்கள அரசுக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்றத் தீவிரமாகப்பாடுபட்டது.
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள குழு, வெறும் ஆய்வு அறிக்கை மட்டுமே தருகின்ற குழுதான். அதனையே சிங்கள அரசு எதிர்க்கிறது, ஐ.நா.வை மிரட்டுகிறது. எனவே, மனித உரிமைகளைப் பாதுகாக்க முனைகின்ற நாடுகளின் அரசுகளும் நேரடியாகத் தலையிட்டு, ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்கக் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஐ.நா. அதிகாரிகள், வெளிநாட்டுச் செய்தியாளர்கள் மட்டும் அன்றி, செஞ்சிலுவைச் சங்கத்தையும்கூட இலங்கை வெளியேற்றியது. அத்தகைய இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் இருந்து, குறிப்பாக சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை அகற்ற வேண்டிய கடமை, தமிழர்களுக்கு இருக்கிறது. அந்த நாளும், வரத்தான் போகிறது.இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.