Wednesday, July 07, 2010

டெல்லியில் இருந்து துபாய் சென்ற 2 விமானங்களை கடத்த முயற்சி:- வங்கதேசத்தினர் 27 பேர் கைது.

டெல்லியில் இருந்து துபாய்க்கு நேற்று இரவு 7.25 மணிக்கு கிங்பிஷர் தனியார் பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. அதை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஜெட் ஏர் வேஸ் விமானம் ஒன்று துபாய்க்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தது. இரு விமானங்களிலும் பயணம் செய்ய வேண்டியவர்கள் விமான நிலையத்துக்கு வந்தபடி இருந்தனர்.

அப்போது "கிங்பிஷர்" விமான நிறுவனத்துக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசியவர் உங்கள் விமானத்தில் வங்காள தேசத்தை சேர்ந்த சிலர் போலி விசாவுடன் துபாய் செல்ல இருக்கின்றனர். அவர்கள் நடு வானில் செல்லும் போது விமானத்தை கடத்தவும் திட்டமிட்டுள்ளனர் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

அடுத்து அதே நபர் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்கும் போன் செய்து இதே தகவலை சொன்னார். இதை தொடர்ந்து இரு விமான நிறுவன அதிகாரிகளும் உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே இரு விமானத்திலும் ஏற வந்த பயணிகள் அனைவரும் கண்காணிக்கப்பட்டனர்.

கிங்பிஷர் விமானத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 12 பேரும், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் 15 பேரும் துபாய் செல்ல முன்பதிவு செய்திருந்தனர். இந்த 27 பேரும் விமானத்தில் ஏறுவதற்கு வந்தனர். உடனே விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அனைவரிடமும் போலி விசா மற்றும் ஆவணங்கள் இருந்தன. உடனடியாக அவர்கள் 27 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது துபாய்க்கு கூலி வேலை செய்ய செல்வதாகவும் ஏஜெண்டுகளிடம் தலா ரூ.60 ஆயிரம் கொடுத்து விசா பெற்றதாகவும் கூறினார்கள். இது போலி விசா என்று தெரியாது என்றும் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் சொன்ன தகவல் நம்பும் படியாக இல்லை. விமானங்களை கடத்தும் நோக்கத்துடன் தான் அவர்கள் வந்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனவே இது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. எந்த வகையில் விமானத்தை கடத்த திட்ட மிட்டு இருந்தனர்? இவர்களுக்கு பின்னணியில் இருந்தவர்கள் யார்? தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்? என்று விசாரணை நடக்கிறது.

நியூயார்க்கில் நடந்தது போல விமானத்தை ஏதாவது கட்டிடத்தில் மோத திட்டமிட்டு இருந்தார்களா? இவற்றை எங்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தனர் என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

முதலில் அவர்களிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இப்போது டெல்லி போலீசார் மற்றும் மத்திய உளவு துறையின் ஐ.பி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் வங்காள தேசத்திலும் முகாம் அமைத்து செயல்படு கின்றன. அவர்கள் தான் இவர்களை தயார் செய்து அனுப்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.