அமெரிக்காவின் தேசிய ஊடக சபையில் (National Press Club) இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றவிருந்த சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இறுதி நேரத்தில் அங்கு உரையாற்றாமல் வெளியேறியுள்ளார்.
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான புதிய யுகத்தில் இருதரப்பு உறவுகள் என்பது குறித்து இக்கூட்டத்தில் உரையாற்றவிருந்த ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு அங்கு சென்றிருந்தபோதும் திடீரென காரணம் எதுவும் தெரிவிக்காது கூட்டத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.
அமைச்சரின் இவ்வெளியேற்றத்தினை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கொழும்பு ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கான காரணம் எதுவும் தமக்கு உறுதியாகத் தெரியவில்லை எனவும் அமைச்சின் அதிகாரிகள் கூறியதாக அவ்வூடகம் தெரிவித்துள்ளது.
இக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ஒழுங்கமைப்பாளர்களுடன் ஏற்பட்ட முரண்பாடே அமைச்சர் இக்கூட்டத்தில் உரையாற்றாமல் வெளியேறியதற்கான காரணம் என அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக அவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளின்டனுடன் நாளை நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் இராஜதந்திர உறவுகள் குறித்து அமைச்சர் பீரிஸ் இக் கூட்டத்தில் உரையாற்ற இருந்தார்.
இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க தேசிய ஊடகசபை, 2009ஆம் ஆண்டுக்கான சுதந்திர ஊடகத்துக்கான சர்வதேச விருதினை சிறிலங்காவில் படுகொலைக்குள்ளான சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு வழங்கியிருந்தது.
சிறிலங்கா அமைச்சர் இக் கூட்டத்தில் உரையாற்றாமல் வெளியேறியதற்கும் லசந்த விக்கிரமதுங்கவிற்கு விருது வழங்கப்பட்டமைக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன. எனினும் இவ்விருது விவகாரம் அமைச்சருக்கு முன்கூட்டியே தெரிந்த ஒன்றுதான் என்றும் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையுடன் தொடர்புபட்ட சிறிலங்கா அரச உயர்மட்டத்தினரின் இறுதி நேர அழுத்தங்கள் அமைச்சரின் இவ் மனமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனினும், அமெரிக்காவின் பலம் பொருந்தியதும் மதிப்பிற்குரியதுமான இவ் ஊடக அமைப்பின் கூட்டத்திலிருந்து காரணமெதுவும் கூறாது அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியேறியமை அமெரிக்க ஊடக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 100 வருட பாரம்பரியத்தைக் கொண்ட அமெரிக்க ஊடக சபையில் அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகள் உட்பட பல்வேறு உலக அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள், கல்விமான்கள், வர்த்தக பிரமுகர்கள் என பிரபலமான பலர் உரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.