Tuesday, May 25, 2010

கைது செய்யப்பட்டோரின் விடுதலைக்காக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! புலத்தில் மௌனம் நீடிக்கிறது!!

படைத்தரப்பினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை சிறிலங்கா அரசு வெளியிட வேண்டுமென காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற காணாமல் போதல், கடத்தல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தலைமையிலான காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் குழு வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.

காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பெண்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

வன்னிப்போரின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளும் ஆதரவாளர்களும் மற்றும் பொதுமக்கள் பலரும் படையினராலும் ஒட்டுக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டு காணாமல் போய் உள்ளனர்.

இது குறித்து மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச முன்னணி ஊடகங்களும் சுட்டிக்காட்டியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12,000 பேர் சிறிலங்கா படைத்தரப்பின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந் நிலையில், இவ்வாறு காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை சிறிலங்கா அரசு வெளியிட வேண்டுமென போரில் காணமல் போனவர்கள் பற்றிய விசாரணையை மேற்கொண்டு வரும் குழுவின் தலைவர் Chamil Jayanetti வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

போரின் போது கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் காவலில் வைக்கப்பட்டிருக்கலாம், கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நிரந்தரமாகவே காணாமலும் போயிருக்கலாம்.

இந் நிலையில், சிறிலங்கா படைத்தரப்பின் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை அரசு வெளியிட்டால் காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பது குறித்து அவர்களின் உறவினர்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது பெயர் விபரங்களை வெளியிட வேண்டிய முக்கிய பொறுப்பு சிறிலங்கா அதிகாரிகளுக்கு உள்ளது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி குறிப்பிடுகையில், கடைக்கு சென்றிருந்தபோது தன்னுடைய கணவர் கடத்தப்பட்டதாகவும், கடத்தியவர்கள் யாரென கடைக்காரர்களுக்கு தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதேபோல், கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது தன்னுடைய கணவர் கடத்தப்பட்டதாகவும், இதுவரை அவர் குறித்த தகவல்கள் தங்களுக்குத் தெரியவில்லை என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு பெண்மணி தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுலோக அட்டைகளையும், கடத்தப்பட்டவர்களின் புகைப்படங்களையும் கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் தென்னிலங்கையிலிருந்து சென்றிருந்த சிலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இடதுசாரி விடுதலை முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இடதுசாரி விடுதலை முன்னணி முக்கியஸ்தர்கள் பலரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

வன்னிப் போர் நிறைவு பெற்று ஒரு வருட காலமாகியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12,000 இளைஞர்கள் விசாரணைகள் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து இவ் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகூடிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிடுவதற்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களுக்கோ, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கோ அல்லது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ சிறிலங்கா அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை.

இவ்வாறு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு சிறிலங்கா அரசை சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் கோரிய போதும், இதுகுறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடாது சிறிலங்கா அரசு மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வன்னி மண்ணுக்கு விஜயம் செய்தபோது காணமல் போனவர்களையும் படையினரால் கைது செய்யப்பட்டிருப்பவர்களையும் மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தம் உறவுகள் பற்றிய எவ்வித தகவல்களும் இன்றி எமது மக்கள் பெரும் மனவேதனைகளுக்கு மத்தியில் காண்போரிடமெல்லாம் தம் உறவுகளின் படங்களைக் காட்டி உதவி கேட்டுவரும் ஒரு அவல சூழலில், போராளிகளதும் மக்களதும் விடுதலைக்காக எவ்வித தொடர் போராட்டங்களையும் நடத்தாது புலம்பெயர் சமூகம் நீண்ட மௌனம் காத்து வருகிறது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளதும் ஆதரவாளர்களதும் விடுதலைக்காக இராணுவ அடக்குமுறைக்கு மத்தியில் வவுனியாவில்கூட மக்கள் போராட முன்வந்துள்ளபோதும் புலம்பெயர் சமூகம் மௌனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுந்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.