இலங்கை அரசாங்கம் தமது யுத்த வெற்றியின் ஒரு வருட நிறைவை கொண்டாடும் முகமாக, யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் நேற்றைய தினம் அனைவரையும் தமது இல்லத்தில் இலங்கை தேசிய கொடிகளை பறக்கவிடுமாறு கோரியுள்ளனர்.இது தொடர்பில் அனைத்து அரசாங்க அலுவலகங்கள், பாடசாலைகள், பொது இடங்கள், கடைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் அனைத்து தரப்பினருக்கும் படையினர் வலியுறுத்தியுள்ளதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இராணுவ வெற்றியின் ஒராண்டு பூர்த்தியை முன்னிட்டு, தெல்லிப்பளை மற்றும் கைதடி தடுப்பு முகாம்களில் உள்ள சுமார் 600 பேர்களை விடுதலை செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அவர்களது பெற்றோர்களிடம் கையளிக்கும் நிகழ்வு முற்பகல் 10மணிக்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ்.சிவில் நிர்வாக பொதுமக்கள் உறவுகள் அலுவலகம் நேற்றிரவு இத்தகவலைத் தெரிவித்ருந்தது,
தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியும் புத்தரின் போதனைக்கு அமைய சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் விடுதலையாகும் விடுதலைப்புலிகளின் ஆண், பெண் உறுப்பினர்கள் தேசியக் கொடியை தமது வீடுகளில் ஏற்றவேண்டும் என்று சிவில் நிர்வாக பொதுமக்கள் உறவுகள் அலுவலக அதிகாரி வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர்களை விடுவிக்கப்படுவதற்கான எவ்வித உத்தியோக பூர்வ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.





