Sunday, May 16, 2010

குச்சவெளி பிரதேசம் பறிபோகும் ஆபத்து – பிள்ளையானும் உடந்தை?

திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி பிரதேசத்திலுள்ள தமிழர்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணியினைச் சுவீகரிக்கும் முயற்சியில் சிங்களவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்தக் காணிக்குரிய பத்திரங்கள் தம்மிடம் இருக்கின்றது எனக் கூறிக் கொள்ளும் பெரும்பான்மை சமூகத்தினர் இந்தக் காணிகளுக்கு உரிமை கோருவதாகவும் எனினும் இவற்றிற்குரிய பத்திரங்கள் தம்மிடம் இருக்கின்றன என தமிழ் மக்கள் கூறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந்தப் பத்திரங்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தக் காணிகள் தொடர்பாக ஏராளமான முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாக குச்சவெளிப் பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன் தெரிவித்திருக்கிறதார்.

இதனிடையே இந்தக் காணி அபகரிப்புத் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது எனப் பதிலளித்துள்ள முதலமைச்சர் பிள்ளையான் இது குறித்து தனக்கு எவரும் முறையிடவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

பிள்ளையானின் இந்த மழுப்பலான பதில் இந்த நில அபகரிப்பு விடயத்தில் இவரும் உடந்தையாகச் செயற்படுகின்றாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளதாக திருகோணமலை மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே மொரவெவ பிரதேச சபைக்குட்பட்ட பன்குளம் பகுதியிலும் தமிழர்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் பெரும்பான்மையினத்தவரால் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து பிரதேச செயலகமும் கிழக்கு மாகாண சபையும் மௌனம் சாதித்து வருவதாகவும் மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

இதே போல திருகோணமலை இக்பால் நகரில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மீன் வாடிகளையும் சிங்கள இனத்தவர்கள் அபகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.