பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த 2 வெட்டுத் தீர்மானங்களும் தோல்வியடைந்தன. இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்துக்கு ஆதரவாக 201 வாக்குகளும், எதிராக 289 வாக்குகளும் பதிவாகின. 88 வாக்குகள் வித்தியாசத்தில் வெட்டுத் தீர்மானம் முறியடிக்கப்பட்டது. இதில் அதிமுக, வெட்டுத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.
இதுபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்துக்கு ஆதரவாக 162 வாக்குகளும் எதிராக 246 வாக்குகளும் பதிவாகின. இந்தத் தீர்மானம் 84 வாக்குகள் வித்தியாசத்தில் முறியடிக்கப்பட்டது.
மத்திய அரசை ஆதரித்தும் வெட்டுத் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களிக்கப் போவதாக வாக்கெடுப்புக்கு முன்பே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துவிட்டதால் மத்திய அரசு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மேலும் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாகவே முலாயம் தலைமையிலான சமாஜவாதி, லாலு தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டன. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கான ஆபத்து முற்றிலும் நீங்கிவிட்டது.
மதவாத சக்திகள் மீண்டும் தலைதூக்க அனுமதிக்க கூடாது என்பதற்காகவே வெட்டுத் தீர்மான வாக்கெடுப்பில் அரசை ஆதரிக்க முடிவு எடுத்ததாக மாயாவதி கூறினார். அதுபோல் சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளும் இதே காரணத்தைத்தான் கூறியுள்ளன. வகுப்பு வாத கட்சியுடன் கைகோர்க்க நாங்கள் விரும்பவில்லை என்று வாக்கெடுப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங், லாலு பிரசாத் ஆகியோர் தெரிவித்தனர். அரசுக்கு எதிராக வாக்களிக்காமல் இருக்க காங்கிரஸ�டன் என்ன ஒப்பந்தம் ஏற்பட்டது என்று கேட்டபோது, நாங்கள் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. ஐபிஎல் விவகாரத்தில் காங்கிரஸ�ம் பாஜகவும்தான் ஒப்பந்தம் செய்துள்ளன என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
சிபிஐ அமைப்பை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்கள் பணிய வைப்பதாக பாஜக குற்றம்சாட்டி உள்ளது. பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு எதிராக சிபிஐ விசாரணை என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதாக பாஜகவினர் மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளனர்.
பாஜக மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்களின் மொத்த பலம் 222. ஆனால் அவர்களுக்கு கிடைத்த வாக்குகளோ 201. வெட்டுத் தீர்மானத்தைக் கொண்டு வந்து அவர்கள் என்ன சாதித்துவிட்டார்கள் எனத் தெரியவில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே. பன்சால் கூறினார்.
வாக்கெடுப்பின் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியும் அவையில் இருந்தார். வாக்கெடுப்பு 90 நிமிஷங்கள் நடைபெற்றன. விவாதம் இல்லாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட மானிய கோரிக்கைகள் மீதும் வெட்டுத் தீர்மானம் கொண்டு வர அனுமதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
வெட்டுத் தீர்மானம் தோல்வியடைந்த பின்னர் துறை வாரியாக மானிய கோரிக்கைகளுக்கான செலவு அனுமதி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் 60 அமைச்சகங்களுக்கான மானிய கோரிக்கைகளுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. நிதி மசோதா மீது புதன்கிழமை பொது விவாதம் நடைபெறும். வியாழக்கிழமை நிதி மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறும்.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.