தமிழ்ஈழக் கோரிக்கையை கைவிட்டதன் ஊடாக த.தே.கூட்டமைப்பு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதா? பல புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் கூறுவது போன்று, த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் ஒரு துரோகியா? இது பற்றித்தான் தொடர்ந்து நாம் ஆராய இருக்கின்றோம். தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டதன் ஊடாக, த.தே.கூட்டமைப்பு ஈழத்தமிழருக்கு மிகப் பொரிய கொடுமையை இழைத்துவிட்டது என்று புலம்பெயர் தேசங்களில் உள்ள பல்வேறு ஊடகங்களும் கருத்து வெளியிட்டு வருகின்றன.
த.தே.கூ. தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டதாகக் கூறுவதும், தாம் தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதாக மற்றவர்களை நம்ப வைப்பதும்- ஒருவகையிலான இராஜதந்திரம் என்று முன்னர் பார்த்திருந்தோம்.
தமிழ் தலைவர்கள் எல்லோருமே தமிழீழக் கோரிக்கைளை மனதளவில் கைவிட்டதாக நான் கூறவில்லை. தாம் தமிழீழத் தனியரசுக் கோரிக்கைளை கைவிட்டதாக மற்றவர்களை நம்பவைத்து, சர்வதேச அரசியல் அரங்கில் தமிழீழத்தைப் பெறுவதற்கான சில காரியங்களை மேற்கொள்ளுவதற்காகவே, இவர்கள் இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தில் கையொப்பம் இட்டிருந்தார்கள். இதுதான் உண்மை. இதனைத்தான் இராஜதந்திர நகர்வு என்று அழைப்பது.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இதுபோன்று பல இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த இராஜதந்திர நடவடிக்கைகளில் பல வெளித்தெரியாமல் மேற்கொள்ளப்பட்டன. பல இராஜதந்திர நடவடிக்கைகளை நாம் மறந்துவிட்டுள்ளோம். அதனால்தான் இந்த இராஜதந்திர நடவடிக்கையை த.தே.கூட்டமைப்பு இன்று வெளிப்படையாக மேற்கொண்ட உடனே, கூட்டமைப்பு துரோகம் இழைத்துவிட்டது என்று நாம் துள்ளிக் குதிக்கின்றோம். கோபம் அடைகின்றோம். இராஜதந்திர நகர்வுகளைச் செய்பவர்களை உடனடியாகவே துரோகியாக்கி விடுகின்றோம்.
ஈழத் தமிழினம் ஒரு மிகப் பெரிய இராஜதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இன்று நின்று கொண்டிருக்கின்றது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இது ஒரு இராஜதந்திரத்தின் காலம். எனவே நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு இராஜதந்திர நகர்வினைச் செய்யவேண்டியது காலத்தின் தேவை. இன்றிருக்கின்ற நிலையில அந்தத் தேவையை தமிழினம்; சந்தித்துத்தான் ஆகவேண்டும். வேறு வழி இல்லை.
இதன் காரணமாகத்தான் கடந்த காலங்களில் ஈழத் தமிழினம் மேற்கொண்ட சில இராஜதந்திர நகர்வுகளை தொடர்ந்து, சற்று விரிவாக ஆராய்வது நல்லது என்று நினைக்கின்றேன்.
அதிலும் குறிப்பாக, தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு அல்லது ஒதுக்கிவைத்துவிட்டு ஈழத் தமிழ் தலைமைகள் அந்த நேரத்திற்கு அவசியம் என்று கருதப்பட்ட வேறு விடயங்களைப் பிரஸ்தாபித்து – மேற்கொண்ட சில இராஜதந்திர நடவடிக்கைகளை தொடர்ந்து நாம் பார்க்க இருக்கின்றோம்.
இன்னும் குறிப்பாகப் பார்ப்பதானால், குறிப்பிட்ட இந்த இராஜதந்திர நடவடிக்கையை விடுதலைப் புலிகள் தமது போராட்ட வரலாற்றில் எவ்வாறு மேற்கொண்டார்கள் என்று நாம் சற்று ஆழமாகப் பார்க்க இருக்கின்றோம்.
ஆம். தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிட்டதாக எதிரியையும், உலகையும் நம்பவைக்கும்படியான இராஜதந்திர நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப்புலிகளும் செய்திருக்கின்றார்கள்.
என்ன விடுதலைப்புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டிருந்தார்களா? யாருக்கு இந்தக் கதையை கூறுகின்றீகள்? என்று உடனடியாகவே என்னில் கோபம் கொண்டு பலர் என்னை திட்டித் தீர்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதுதான் உண்மை.
ஒரிரு சந்தர்ப்பங்களில் மாத்திரம் அல்ல. பல சந்தர்ப்பங்களில் த.வி.புலிகள் தமிழீழத் தனிஅரசுக்கான தமது போராட்டத்தை தாம் நிறுத்தியுள்ளதாக, தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டதாக - மற்றவர்களையும் உலகையும் நம்பவைத்து இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்றார்கள். இதுதான் உண்மை. இதுதான் வரலாறு.
இதுபற்றித்தான் தொடர்ந்து நாம் சற்று விரிவாக ஆராய இருக்கின்றோம்.
வடமாராட்சி ஒப்பரேசன் என்று அழைக்கப்படுகின்ற ஒப்பரரேஷன் லிபரேஷன் (Operation Liberation) இலங்கை இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்திய இராணுவம் ஒப்பரேஷன் பூமாலை என்கின்ற பெயரில் யாழ்குடாவில் உணவுப் பொட்டலங்களைப் போட்டிருந்தது. இலங்கை அதிபர் ஜே.ஆர் ஜெயவர்தனவுடன் ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொள்வதற்கு இந்தியா தயாராகிக்கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் களத்தில் பலமான நிலையில் இருந்த ஒரே போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை, அந்த இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவைக்கவேண்டும் என்று இந்தியா திட்டமிட்டது. அதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியாவிற்கு அழைத்தது இந்தியா.
1987ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் திகதி திரு.பிரபாகரன் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய ஹெலிக்கொப்டரில் திரு.பிரபாகரன் புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்டார்.
இந்தியா அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையிலான குழுவினர், இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள "அஷோகா" ஹோட்டலில், 518ம் இலக்க விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். "தங்கவைக்கப்பட்டிருந்தார்கள்" என்று கூறுவதை விட, "சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்" என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
புலிகளின் தலைவர்கள் இருந்த விடுதியின் வெளியே இந்தியாவின் "கறுப்புப் பூனைகள்" பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டிருந்தார்கள். அறையில் இருந்த தலைவர்கள் வெளியே நடமாட இந்தக் "கறுப்புப் பூனை" பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அனுமதி மறுத்திருந்தார்கள். புலிகளின் தலைவர்கள் வெளியில் எவரையும் தொடர்பு கொள்ளவும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. விடுதியின் உள்ளே இருந்த தொலைபேசியின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. பேச்சுவார்தைக்கு என்று கூறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள், ஒருவகையில் சிறைவைக்கப்பட்டது போன்றே நடத்தப்பட்டார்கள்.
ஜூலை மாதம் 24ம் திகதி முதல் நான்கு நாட்கள் "அஷோகா" ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் தலைவர்களை, 28ம் திகதியே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சந்தித்தார். சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த ராஜீவ் காந்தி, பலவாறான நெருக்குதல்களை பிரயோகித்து புலிகளை அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்தித்தார்.
"அஷோகா ஹோட்டலில்" புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களையும், புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்களையும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி. தமிழ் நாடு அமைச்சர் பண்டிருட்டி ராமச்சந்திரன் மற்றும், இந்திய மத்திய உளவுத்துறைத் தலைவர் எம்.கே.நாராயணன் போன்றோரும் இந்தியப் பிரதமருடன் அங்கு சென்றிருந்தார்கள்.
"சிங்கள அரசுகளை நம்பி பல தடவைகள் நாம் ஏமாந்துவிட்டோம். தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவது தற்கொலைக்கு ஒப்பானது" என்று பிரபாகரன் ராஜீவ் காந்தியிடம் உறுதியாகத் தெரிவித்திருந்தார். "ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள். ஸ்ரீலங்கா அரசு ஒப்பந்தத்திற்கு மாறாக நடந்துகொள்ளாமல் இந்தியா பார்த்துக்கொள்ளும்" என்று கூறி பிரபாகரனின் மனதை மாற்றுவதற்கு ராஜீவ் காந்தி முயன்றார்.
ஆனாலும் பிரபாகரன் தனது பிடியை விட்டுக்கொடுக்க தயாரில்லாதவராகவே நிலைப்பாடு எடுத்தார். ராஜீவ் காந்தயின் எந்தவொரு நெருக்குதலுக்கும் மசியாதவராகவே பிரபாகரன் காணப்பட்டார். இதனால் மிகவும் கோபமடைந்த ராஜீவ்காந்தி, ஒருசந்தர்பத்தில் "உங்களுக்கு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் கிடையாது" என்று மிரட்டியிருந்தார்.
பல வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர், நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர், விடுதலைப் புலிகளின் தலைவர்களது சிறைவைப்பிற்குப் பின்னர், பலத்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னர்.. விடுதலைப் புலிகள் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை பெயரளவிலாவது ஏற்றுக்கொள்வது என்ற நகர்வினை எடுத்தார்கள்.
அதாவது தமிழீழத் தனியரசிற்கு மாற்றீடாக ஜே.ஆர் ஜெயவர்தனாவும் - ராஜீவ் காந்தியும் முன்மொழிந்த இலங்கையின் 13வது திருத்தச் சட்டத்தை விடுதலைப்புலிகளின் தலைமை ஏற்றுக்கொண்டது. அந்த நேரத்தில் வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லை. அந்த நேரத்தில் அந்த இராஜதந்திர நகர்வினை விடுதலைப் புலிகள் செய்தேயாகவேண்டியிருந்தது.
தமிழீழத்திற்கு மாற்றாக இந்திய இலங்கை அரசுகளால் முன்வைக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை விடுதலைப் புலிகளின் தலைமை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து 1987ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02ம் திகதி திரு.பிரபாகரன் மீண்டும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டார்.
தமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தாம் தொடர்ந்து செயற்படப்போவதாக திரு.பிரபாகரன் அவர்கள் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி சுதுமலை அம்மன் ஆலய முன்றலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்திய உரையில் தமது நிலைப்பாட்டை அறிவித்திருந்தார்.
தமிழீழத் தனியரசை நிறுவுவதற்காக விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் சிலவற்றையும் புலிகள் அமைப்பு ஓகஸ்ட் மாதம் 5ம், 6ம் திகதிகளில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தது…
இலங்கையின் 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படவிருந்த வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாக சபைக்கு, அதாவது தமிழீழத் தனியரசுக்கு ஈடாக இலங்கை அரசினால் வழங்கப்பட்ட மாகாணசபையின் இடைக்கால நிர்வாகசபைக்கு விடுதலைப் புலிகள் தமது தரப்பில் இருந்து ஐந்து பேரை பிரேரித்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களையெல்லாம் இந்த இடத்தில் நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
தமிழீழத்தைக் கைவிட்டு இலங்கையின் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட மாகாணசபையை ஏற்றுக்கொள்வது போன்ற ஒரு இராஜதந்திரத்தை அந்தச் சந்தர்பத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொண்டார்கள். வெற்றி கண்டார்கள்.
மிகுந்த நெருக்கடிக்குள் நின்றுகொண்டிருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தில், தமிழீழத் தனியரசுக் கோரிக்கையை பற்றிய கோஷங்களை அடக்கிவாசிப்பதென்பது ஒரு ராஜதந்திரமாக இருந்துள்ளது என்பதற்கு, புலிகளின் தலைமை 80களின் பிற்பகுதியில் மேற்கொண்ட இந்த நடவடிக்கை ஒரு உதாரணம்.
இன்று த.தே.கூட்டமைப்பு மேற்கொள்ளுகின்ற சில நகர்வுகளும், அவர்கள் வெளியிட்டுவருகின்ற சொல்லாடல்களும் இராஜதந்திரத்தின் ஒரு வெளிப்பாடாகவே பார்க்கப்படவேண்டும்.
இதேபோன்று தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டதாகக் கூறுவதும், தாம் தமது தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதாக மற்றவர்களை நம்ப வைப்பதுமான இராஜதந்திர நகர்வுகளை விடுதலைப் புலிகள் தமது போராட்ட வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் மேற்கொண்டிருக்கின்றார்கள்.
அப்படியான மற்றும் சில சந்தர்பங்களை மற்றொரு கட்டுரையில் விரிவாக ஆராய்வோம்.
Nirajdavid (Swiss)
nirajdavid@bluewin.ch






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.