விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு மேற்குலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் போதிய ஒத்துழைப்பை வழங்கு வதில்லை எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றஞ் சாட்டியுள்ளார்.விடுதலைப் புலிகள் தமது நாட்டில் செயற்படும் விடயம் வெளியில் தெரிய வருவதைக்கூட இந்த நாடுகள் விரும்புவதில்லை என்றும் தெரிவித்துள்ள அவர், எரித்திரியாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி அங்குள்ள விடுதலைப்புலிகளின் சொத்துகளைக் கண்டறிவதற்கு இலங்கை மேற்கொண்ட முயற்சியில் அது படுதோல்வி அடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள கோத்தபாய, குமரன் பத்மநாதனை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது குறித்து இன்னமும் சிந்திக்க வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
எரித்திரியாவுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் காரணமாகத் தோல்வி கண்டுள்ளன.
இந்த விடயம் பத்திரிகைகளில் வெளிவந்தது. இதனால் தற்போது எரித்திரியா அனைத்து தொடர்புகளையும் துண்டித்துள்ளது.
அவர்கள் எங்களுடன் தற்போது பேச்சுகளில் ஈடுபடுவதும் இல்லை. எங்களுடனான தொடர்புகளை அந்த நாடு முற்றாகத் துண்டித்துள்ளது. எரித்திரியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக அந்த நாட்டில் தூதரகமொன்றை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அந்த நாடு அதற்கு அனுமதியளிக்க மறுத்துள்ளது.
பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளதால் விடுதலைப்புலிகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் முயற்சிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எரித்திரியாவைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் எமக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் சொத்துகள் சில அங்குள்ளமை எமக்குத் தெரியும். இது பத்திரிகைகளில் வெளிவந்தமையால் தற்போது அந்த நாடு எம்முடன் ஒத்துழைக்க மறுத்துள்ளது.
இதன் காரணமாக எரித்திரியாவுடன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து உறவுகளைக் கட்டியெழுப்ப முயல்கிறோம்.
விடுதலைப்புலிகளின் நலன்களுக்கு உதவக்கூடிய பல நடவடிக்கைகள் தமது நாட்டு எல்லைக்குள் இடம்பெறுகின்றமை பல நாடுகளுக்குத் தெரியாது. விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் பலவகையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அந்த நாடுகளைப் பொறுத்தவரை இவை சட்டரீதியான வர்த்தக நடவடிக்கைகளாகும்.
நாங்கள் இது குறித்த தகவல்களை வழங்கியிருக்காவிட்டால் இது விடுதலைப் புலிகளின் வர்த்தக நடவடிக்கைகள் என்பது அந்த நாடுகளுக்குத் தெரியவந்திராது. இலங்கை அரசு இவ்வாறான சக்திகள் உலக நாடுகளில் செயற்படுவதைச் சுட் டிக்காட்டினால் மேற்குலக நாடுகள் தம்மை அவமானப்படுத்தும் செயலாக அதனைக் கருதுகின்றன.
விடுதலைப்புலிகள் இயக்கம் செயற்படும் நாடுகளின் பெயர்களை வெளியிடுவதால் எமக்கு எந்தவித நன்மையும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட நாடுகள் தமது பெயர்களை நாங்கள் பகிரங்கப்படுத்துவதை விரும்புவதில்லை. விடுதலைப்புலிகள் தமது எல்லைகளுக்குள் செயற்படுகின்றனர் என்ற விவரம் வெளியாவதை இந்த நாடுகள் வரவேற்பதில்லை.
எரித்திரியாவைப் பொறுத்தவரை இந்த விடயத்தில் எமக்கு மிகக் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் விடுதலைப்புலிகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைக்கு மேற்குலகம் எப்போதும் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை. ஏனைய நாடுகள் இதற்கு சுலபமாக ஒத்துழைப்பை வழங்கும் அதேவேளை, மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை இது மிகவும் கடினமாகவுள்ளது.
இந்த நாடுகளில் பெருமளவு புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ளமையே இதற்குக் காரணம். இந்த நாடுகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எமக்கு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை. அவர்களுடைய ஒத்துழைப்பு இன்றி இவர்களைப் பிடிக்க முடியாது.
சில நாடுகளை ஏமாற்றி அவர்களது ஆதரவைப் பெறுவதற்காக விடுதலைப்புலிகள் தங்களைச் சட்டபூர்வமான அமைப்பாக மாற்ற முயல்கின்றனர். இராணுவ ரீதியில் தங்களால் செய்ய முடியாது போனதை இந்த அரசுகளின் துணையுடன் வேறு வழிகளில் செய்வதற்கு அவர்கள் முயலக்கூடும். இதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசை ஏற்படுத்த அவர்கள் முயல்கின்றனர்.
எனினும், புலம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய இலங்கைக்குள் தேசிய நல்லிணக்கத்தையே விரும்புகின்றனர். மிகப் பெரும் எண்ணிக்கையான புலம் பெயர்ந்த தமிழர்கள் உள்ள போதிலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் மிதவாதிகள். ஈழக் கோரிக்கையை அவர்கள் ஆதரிப்பதில்லை. அநேகமானவர்கள் இலங்கைக்குத் திரும்பி வந்து அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புகின்றனர்.
விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரான கே.பியை நீதிமன்றத்தில் நிறுத்தும் எண்ணம் எதுவுமில்லை. எனினும், அவர் வழங்கும் தகவல்கள் அரசின் புலனாய்வுத் துறையினருக்கு மிகப் பெறுமதியானவையாகக் காணப்படுகின்றன. அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. விடுதலைப்புலிகளின் சர்வதேச நட வடிக்கைக்குப் பொறுப்பாக செயற்பட்டவர் என்ற வகையில் அவரிடமிருந்து இன்னமும் தகவல்களைப் பெற முயல்கிறோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.