Saturday, February 13, 2010

இலங்கையில் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்போவதாக நவநீதம்பிள்ளை அறிவிப்பு

கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த போரின் இறுதி கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்று கருதப்படக்கூடிய விடயங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்பதை தாம் தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கூறியிருக்கிறார்.

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடைபெறும் உலகின் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர்களுக்கான ஐந்தாவது மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே இலங்கை விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் நவநீதம்பிள்ளை இதனைத் தெரிவித்துளார். இந்தவிடயத்தில் தேசிய ரீதியான விசாரணைகள் சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை அங்கு போர்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்று தான் சந்தேகிப்பதாகவும், நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என்றும் அது சுதந்திரமானதாகவும், நம்பகத்தன்மையுடனும் அமையவேண்டும் என்றும் தான் வலியுறுத்தி வருவதாகவும் நவநீதம்பிள்ளை கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தனது அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை உறுதிப்பாட்டை பெறும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் தீவிரமாக செயற்பட்டு வருவதாக நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக போரின் போதும், அதற்குப் பிறகுமான காலகட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமல்லாமல், தேர்தலுக்குப் பிறகு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று இலங்கை அமைச்சரிடம் தாம் கூறியதாகவும் அவர் கூறினார்.

ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் அவையில் இந்த விவகாரம் கையாளப்பட்ட விதம் குறித்து தமது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ள்ளார்.

எனினும் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக எந்த ஒரு சர்வதேச விசாரணைகளுக்கும் இடம்தரப்போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.