Wednesday, February 10, 2010

"தமிழினப் படுகொலைகள்" புத்தகம் குறித்து தமிழக உளவுத்துறையினர் நேரில் விசாரணை

இலங்கை அரசின் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட ஆண்டுகளில் தமிழர்கள் மீதான படுகொலைகள் குறித்த உலகின் ஓரே நம்பக ஆவணத்தை "தமிழினப் படுகொலைகள்" என்ற பெயரில் மனிதம் வெளியீடு புத்தகமாய் தமிழிலும் ஆங்கிலத்திலும் அண்மையில் வெளியிட்டது.

இலங்கையின் தமிழர் பகுதிகளில் இருந்து செயல்பட்டு வந்த "வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்" மற்றும் "வடகிழக்கு புள்ளிவிபர மையம்" இணைந்து 52 ஆண்டுகளில் இலங்கை அரசின் தமிழர்கள் மீதான படுகொலைகள் குறித்த ஆவணம் பல காலமாய் தொகுக்கப்பட்டு கடந்த 2009 டிசம்பர் மாதம் தமிழகத்தில் இயங்கிவரும் மனித உரிமை அமைப்பான "மனிதம்" அமைப்பின் கீழ் வெளியிடப்பட்டது.

தற்போது, தமிழகத்திலில் பரபரப்பாய் விற்பனையாகி வரும் இந்நூல், சென்னையில் அனைத்து முக்கிய புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நூல் வெளியீடு நடைபெற்ற அன்றே, தமிழக உளவுத்துறையினரும், இந்திய உளவுத்துறையினரும் புத்தங்களை தங்களது பார்வைக்கு வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று (09.02.2010) சென்னை மாநகர பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நுண்ணறிவு பிரிவான உளவுத்துறை அதிகாரிகள் இப்புத்தகத்தின் குறிப்புகள் அடங்கிய கோப்புகளுடன் வந்து, மனிதம் வெளியீட்டாளரை சந்தித்து மேலும் விசாரித்து சென்றனர்.

புத்தகத்தின் உரிமையாளர்கள், புத்தக வெளியீடு மற்றும் அனைத்து விபரங்களையும் ஒரு மணி நேரத்திற்கு மேல் விசாரணை செய்தனர். பொலிஸாரின் அனைத்து விசாரணைக்கும் மனிதம் வெளியீட்டார் அக்னி சுப்ரமணியம் விளக்கமளித்துள்ளார்.

நாகரிக உலகின் உச்ச மனித அவலத்தை ஏற்படுத்திய இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களில் தமிழின அழிப்பு படுகொலை ஆவணமாக தமிழகத்தில் வெளியிடப்பட்டது குறித்து, இந்திய அரசின் உயர்மட்ட அரங்கில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு நாட்டு நட்புறவுக்கு இந்நூலினால் குந்தகம் ஏதேனும் விளையுமா என்ற நிலையில், இப்புத்தகம் குறித்து சென்னை பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. இன அழிப்புக்கு உதவியோர் பயப்படுவதில் நியாயம் இருக்கத்தானே செய்யும்?இதுவே போர்க் குற்ற ஆவணமாகப் பயன்படுத்தக் கூடிய சாத்தியமுண்டா என்று ஆராய்கிறார்களோ,

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.