இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் சாவு தமிழினத்தைக் கவலைக் கடலில் தள்ளியுள்ளது.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை பனாகொட படை முகாமில் காலமானார் என்ற செய்தி கேட்டு கவலை அடைந்தோம்.
மே மாதத்தில் சிங்கள பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வேலுப்பிள்ளையும் பக்கவாதத்தால் அவதிப்படும் அவரது துணைவியார் பார்வதியும் இந்நாள் வரை சட்டத்துக்கு முரணாக பனாகொட இராணுவ முகாமில் கொடிய ராஜபக்ச அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
தேசியத் தலைவரின் தந்தை, தாய் என்ற ஒரே குற்றத்துக்காகவே அவர்கள் அவ்வாறு கைது செய்யப்பட்டார்கள்.
மானிட நேயமோ குறைந்தளவு நாகரிகமோ இல்லாத ஒரு கொடுங்கோல் அரசு, எண்பது அகவையைக் கடந்த வேலுப்பிள்ளை இணையர்களை சாதாரண 'கிரிமினல்' குற்றவாளிகள் போல் பனாகொட இராணுவ முகாமில் அடைத்து வைத்த கொடுமையை யார் மன்னித்தாலும் தமிழினம் மன்னிக்காது என்பதை கூறி வைக்க விரும்புகிறோம்.
நாங்கள் மேற்கொண்டது இராணுவ நடவடிக்கை அல்ல, தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்க மேற்கொண்ட மனிதநேய நடவடிக்கை என்ற இலங்கை அரசின் பரப்புரை எவ்வளவு பொய்யுரை என்பதை இனிமேலாவது உலகநாடுகள் புரிந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். சிங்கள ஆட்சியாளரின் அகரமுதலியில் விடுதலை என்பது அடுத்த உலகம் என்பது பொருள் ஆகும்.
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை சாவு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சாவிற்கான காரணங்களை இலங்கை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
திருவேங்கடம் வேலுப்பிள்ளை இணையர் சட்டத்துக்கு முரணாகக் கைது செய்து படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டிக்காத உலக நாடுகளையும் மனிதவுரிமை அமைப்புக்களையும் நாம் பலமாகக் கண்டிக்கிறோம்.
இப்போதாவது பார்வதி அம்மையார் அவர்களை உடனடியாக விடுவிக்க உலகநாடுகளும் மனிதவுரிமை அமைப்புக்களும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழினத்தின் நீண்ட வரலாற்றில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு வீர மகனைப் பெற்றெடுத்த அமரர் திருவேங்கடம் அவர்களது பெயர் என்றும் மக்கள் மனதில் கொலு வீற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களது மறைவு உலகளாவிய தமிழ்மக்களை ஆறாத்துயரில் தள்ளியுள்ளது. அவரது மறைவால் வாடும் அவரது இணையர், பிள்ளைகள், மருமக்கள், உற்றார் உறவினர் எல்லோருக்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.