Tuesday, December 08, 2009

ஒரு பொது வேட்பாளரை இனவாதக் கொண்டாடத் தேர்தலுக்கு எதிராக நிறுத்த முடியாத அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் கையாலாகதவர்களாய் உள்ளோமா?


தற்போதைய ஜனாதிபதித் தேர்தலின் உள்ளடக்கம் என்ன?

தமிழ் பேசும் மக்களை தோற்கடித்துவிட்டதான இனவாதத்தின் வெற்றிவிழாக் கொண்டாட்டமாய் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது. இதுவே இதனது உள்ளடக்கமும், சாரம்சமுமாகும்.

சிந்திய அப்பாவித் தமிழ் மக்களின் இரத்தத்தை செங்கம்பளம் ஆக்கி, அவர்களது மண்டை ஓடுகளை மேடையாக்கி, அவற்றின் மீது முடிசூட்டு விழா நடாத்துவதே இதன் சாரம்சமாகும்.

“விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை” தோற்கடித்தமை என்ற பெயரில் 80,000 அப்பாவி தமிழ் மக்களின் மண்டை ஓடுகளின் மேல் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள் போட்டி போட்டு நடாத்தும் இனவாத வெற்றிக் கொண்டாட்டமாகவே இத்தேர்தலை ஜனாதிபதி இரண்டு ஆண்டுகளால் முன்போட்டு பிரகடனப்படுத்தி உள்ளார்.

வெற்றி விழாவில் முடிமகுடம் யாருக்கு என்ற போட்டியில் சிறிலங்கா ஜனாதிபதிக்கும், படைத் தளபதிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட போது ஜனாதிபதி தேர்தலை பிரகடனப்படுத்த ஜனாதிபதி தயங்கினார். ஆனால் தமிழ் மக்களின் மண்டை ஓட்டை முடி மகுடமாக்க நினைத்த தளபதியும், ஐ.தே.க.வும், ஜே.வி.பி.யும், மங்கள சமரவீர அணியும் வெற்றி விழாக் கொண்டாடத்திற்கான ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நாடாத்துமாறு ஜனாதிபதிக்கு சவால் விட்டனர். தமிழரின் இரத்தமும் மண்டை ஓடுகளுமே சவாலுக்கான கருப் பொருளாகின. சவாலை ஏற்ற ஜனாதிபதி மண்டை ஓடுகளில் பலப்பரீட்சை நடாத்த தயாரானார். அதுவே இத்தேர்தல் ஆகும்.

இந்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் இரு இனவாதப் போட்டியாளர்களையும் ஒரு தடவையாவது தோற்கடிப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் தரப்பில் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தினால் அது சாத்தியமாகும். குறைந்தது முதலாவது சுற்று வாக்கெடுப்பில் வெற்றிவிழாக் கதாநாயகர்கள் இருவரையும் ஒரு தடவை தோற்கடிக்கும் வரலாற்றைப் படைக்க முடியும். இரண்டாவது வாக்கை எப்படி பிரயோகிப்பது என்பதை அடுத்து யோசிக்கலாம். ஆனால் முதலாவது வாக்கால் “வெற்றி வீரர்களை” ஒரு தடவை தோற்கடிப்பதன் மூலம் பேரினவாதத் தலைவர்களை தமிழ் பேசும் மக்கள் முதற்கண் நிராகரித்தனர் என்ற வரலாற்றை உருவாக்க ஏன் நாம் தயங்க வேண்டும்.

தத்துவத்தை நடைமுறையுடன் இணைக்க முடியாது விட்டால் தத்துவமும் தோல்வி அடையும் நடைமுறையும் தோல்வி அடையும். எனவே தத்துவத்தை கற்பனாவாதமாய்த் தூக்கிப் பிடிப்பதை விடவும் நடைமுறையால் தத்துவத்தை நோக்கி முன்னேறிச் செல்வதே மிகவும் சரியானதாகும்.

நெருக்கடிகள் வரும் பொழுது, இடர்பாடுகள் ஏற்படும் பொழுது அதற்கு ஈடுகொடுத்து நிமிர்வதிலேயே ஒரு வளர்ச்சி அடைந்த தேசிய இனத்தின் ஆளுமை தங்கியுள்ளது. இன்றைய நெருக்கடி நிறைந்த இக் காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் ஒருங்கிணைந்து ஒரு தலைவரின் கீழ் தேர்தலை எதிர்கொள்ளும் ஆளுமை அற்று இருக்கின்றோமா? ஒரு பொது வேட்பாளரை இனவாதக் கொண்டாடத் தேர்தலுக்கு எதிராக நிறுத்த முடியாத அளவிற்கு தமிழ் பேசும் மக்கள் கையாலாகதவர்களாய் உள்ளோமா? தலைவருக்கு பஞ்சப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாக நாம் இருக்கலாமா? இத் தேர்தல் அந்த வகையில் எமக்கு ஒரு சவாலை விடுகிறது.

எங்களால் முடியும் என்பதை குறைந்த பட்சம் முன்னெடுக்கவாவது வேண்டும். அதில் தோல்வி அடைவது இரண்டாம் பட்சம். தோல்விகளையும் நெருக்கடிகளையும் சந்திக்க தயாரில்லை என்றால் அடுத்த கட்டத்திற்கான பயணத்தை தொடர முடியாது.

சிங்களத் தேர்தலை பகிஸ்கரிப்பதென்ற ஒரு சித்தாந்தத்தை முன்வைத்தால் நாடாளுமன்ற தேர்தலில் ஏன் பங்கெடுத்தோம்? ஏன் பங்கெடுக்கப் போகிறோம்? என்ற கேள்விக்கு விடைகாண வேண்டியது அவசியம். சிங்கள அரசியல் யாப்பை பகிஸ்கரிக்கிறோம் என்று கூறுவதானால் அந்த யாப்பின் கீழான பிறப்பு, இறப்பு பதிவுகளையும் நாம் செய்ய கூடாது. அடையாள அட்டை எடுக்கக் கூடாது, வெறும் தூய்மை வாதங்களுக்கு அப்பால் நடைமுறை சார்ந்து அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டிய யதார்த்த பூர்வ சிந்தனை அவசியம்.

இறுதி இலட்சியத்தை நோக்கி காணப்டும் ஒவ்வொரு சாத்தியக் கூறுகளையும் சரிவரப் பயன்படுத்தி முன்னேற வேண்டியதே யதார்த்தபூர்வ அணுகு முறையாகும். இப்போது இனவாதக் கொண்டாட்ட தேர்தலில் இரு இனவாதத் தலைவர்களையும் முதற்கண் தோற்கடிப்பதற்கான வரலாற்று உதாரணத்திற்கு முதன்மை கொடுக்க வேண்டும். அதில் தமிழ் பேசும் மக்கள் தமது இயலுமையை நெருக்கடிமிக்க இக் கட்டத்தில் நிருபிப்பதன் மூலம் தமது நிமிர்வுக்கான அங்கிகாரத்தை உருவாக்க முடியும். வெட்ட வெட்ட தளைப்போம், சாம்பல் மேட்டில் பூர்ப்போம் என்பதன் அர்த்தம் நிமிர்ந்து காட்டுவதில்தான் உள்ளதே தவிர விலகி ஓடுவதில் அல்ல.

- இராமநாதன் பூலோகசிங்கம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.