இன்று மாவீரர் நாள்! தமிழ்த் தேசியத்தைப் பேணவும், தமிழர் தாயகத்தை பாதுகாக்கவும், தமிழத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயல் உருவம் கொடுக்கவும், தமிழ்த் தேசிய இனத்தின் இறையாண்மையை பிரயோகிக்கவும் களமாடி, தமிழத் தேசிய இனத்தின் சுதந்திர வேள்விக்கு தம் உயிர்களை ஈந்த மாவீரர்களை பூசித்து வணங்கும் புனித நாள் இன்று.
பேரினவாத சிங்கள ஆக்கிரமிப்பை உடைத்தெறிந்து, சுதந்திரத் தமிழ் ஈழம் அமைக்க புதிய புறநானூறு படைத்த மாவீரர்களை உலகெங்கும் வாழும் தமிழினம் பெருமிதத்துடன் நினைவுகூரும் தேசிய நாள் இன்று.
மாவீரர்கள் நமது தழிழீழ தேசத்தின் வீரப்புதல்வர்கள். எமது மகள்கள், எமது மகன்கள், எமது சகோதரிகள், எமது சகோதரர்கள். தமிழீழத்தின் மண்ணோடு மண்ணாக, காற்றோடு காற்றாக, தமிழ் இனத்தின் உணர்வுடன், உயிரத் துடிப்புடன் ஒன்றாகக் கலந்தவர்கள். இவர்களது தியாகமும் வீரமும் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிறைந்து நிற்கும்..
நமது தேசத்தினுள் நிமிர்ந்தெழுந்த தேசிய அடையாளத்தினையும் ஆற்றல்களினையும் அவற்றினைக் காத்து நின்ற மக்கள் படையினையும் சிதைத்து விட்டதாக சிங்கள ஆட்சியாளர்கள் இறுமாப்படைந்துள்ள இன்றைய நாளில் இவ்வருட மாவீரர் நாள் மிக முக்கியம் பெறுகின்றது. நமது விடுதலை வேட்கையை உலகிற்கு மிக உறுதியாக எடுத்தியம்பும் நாளாகவும் அமைகிறது.
நமது தமிழீழ தேசத்தினையும், நமது மக்களது வாழ்வினையும் வாழ்விடங்களையும் துவம்சம் செய்தமை மட்டுமின்றி, தமிழ் ஈழத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களையும் சிங்கள பேரினவாதம் சிதைத்து அழித்துள்ளமை மனித நாகரீகத்துக்கும், மனித நேயத்திற்கும் முரணானது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான, வெட்கக்கேடான செயல் அனைத்துலக சமுதாயத்தால் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
மனித நாகரீகத்தைப் பேணும் எந்த ஒரு நாடும் கல்லறைகளைச் சிதைக்கவோ அழிக்கவோ முற்படாது. சிங்களப் பேரினவாதத்தின் இச்செயல் மனித நாகரீக படிமங்களில் அதனுடைய இழிநிலையையும் தமிழினத்திற்கு எதிரான இன வெறியையும் தான் காட்டுகின்றது. தமிழீழ மண்ணிலிருந்து இன்று எமது மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தாலும், தமிழர் நெஞ்சங்களில் இருந்து அதனை என்றுமே அழித்துவிட முடியாது. மேலும் சுதந்திரத் தமிழீழ மண்ணில் அவ் நினைவாலயங்கள் மீண்டும் கட்டி எழுப்பப்படும்வரை தமிழினம்
ஓயவும் மாட்டாது.
தமிழீழத் தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கடந்த மாவீரர் உரையில், எமது சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்கான போராட்டம் கடந்த 60
ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து செல்லுகின்றது எனவும், இந்த நீண்ட படிநிலை வரலாற்றில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.
அறுபதுகளிலும் எழுபதுகளிலும் பாரளுமன்ற அரசியல் மூலமும், சாத்வீகப் போராட்டங்கள் மூலமும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இலங்கைத் தீவினுள் அரசியல் வெளி அற்றுப்போனதாலும், சிங்கள பேரினவாதத்தின் மிலேச்சத்தனத்தாலும, தேசியப்பிரச்சனையை தீர்ப்பதற்கான அனைத்துலகப் பொறிமுறை இல்லாமை காரணமாகவும் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டமாக – அனைத்துலக சட்டஙகளுக்கு அமைய பரிணாமம் பெற்றது.
தமிழத் தேசிய இனத்தின் இராணுவ பலமும் அதன் விளைவாக உருவாக்கம் கண்ட நிகழ்வு பூர்வமான தமிழீழ அரசுக் கட்டுமானங்களும் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதற்கும், தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்கும் தமிழனத்தின் இறையாண்மையை பிரயோகிப்பதற்குமான ஒரு அரசியல் வெளியை ஏற்படுத்தியது. இதற்கான சுதந்திர சிற்பிகளாக திகழ்ந்த மாவீரர்களை தமிழினம் என்றும் நன்றியுடன் நினைவு கூரும்.
இன்று பன்னாடுகள் பல்வேறு காரணங்களிற்காக சிங்கள இனவாத அரசுக்குத் துணையாய் நின்று, நிகழ்வுபூர்வமான தமிழீழ அரசை அழித்தும் தமிழ் தேசிய இனத்தின் இராணுவ பலத்தை பலவீனமாக்கியும் உள்ளன.
இந் நிலையில் தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை வாழ்வுரிமையை பேணுவதற்கும், சுயநிர்ணய உரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்கும் இறைமையை பிரயோகிப்பதற்குமான அரசியல் வெளி இலங்கைத் தீவிற்கு அப்பாலே உருவாக்கப்பட வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டம் இந்த யதார்த்தங்களை உள்வாங்கி மேற்கொள்ளப்படும் அரசியல் முன்னெடுப்பாகும்.
இவ் அரசியல் முன்னெடுப்பு சாத்வீக முறையில், அரசியல் ரீதியாக, சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் சர்வதேச நியதிகளுக்கு அமைவாகவும் எடுத்துச்செல்லப்படும். தேசியத் தலைவர் அவர்கள் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதுமலை கூட்டத்தில் கூறியபடி போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறிக்கோள் ஒன்றுதான்.
நமது மாவீரர் தியாகங்கள் வீண்போகப்போவதில்லை தொடர்ந்து செல்லும் எமது விடுதலை பயணத்திற்கு மாவீரர்களது தியாகங்கள் உந்து சக்திகளாக அமையுமென்பது திண்ணம்.
நாடுகடந்த தமிழீழ அரசினை நெருங்கி வரும் புதிய ஆண்டில் உருவாக்கி, அவ் அரசின் ஊடாக எமது மாவீரர்களின் இலட்சியங்களை நிறைவேற்ற – அவர்களது கனவுகளை நனவாக்க நாம் அனைவரும் உழைப்போமென இம் மாவீரர் நாளில் நாம் உறுதி பூணுவோமாக.
ஒப்பம் வி.ருத்ரகுமாரன்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.