Friday, November 27, 2009

இன்று 27-11-2009 மாவீரர் நாள். உலகெங்கும் வாழும் தமிழர்களின் பலத்த எதிர்பார்ப்புகளோடு எழுச்சி கொள்கிறது.

இன்றைய தினத்தை மாவீரர் நாளாக, தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் பெருநாளாக நாம் கொண்டாடிவருகிறோம். இன்று தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ( கூடுதலான நாடுகளில் ) இந்த நாளை மிகவும் எளிச்சிகரமாகவும் எதிர்பார்ப்புக்களுடனும் நடைபெறுகிறது.

எமது மண்ணுக்காய், எமது மக்களுக்காய் தமது இன்னுயிரை அர்ப்பணித்த தியாகிகளை இன்று நாம் எமது இதயத்து ஆலயத்தில் நினைவுகூர்ந்து அவர்களை கெளரவிக்கும் நாளாகும். ஒரு புனித இலட்சியத்துக்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்துக்காக போராடி, அதற்காகவே தமது வாழ்வை தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்.

தமிழீழ விடுதலைப் போரட்டத்திற்கும், அதை வழிநடத்தி போராடிவந்த விடுதலைப் புலிகளுக்கும் எதிராகப் பல்வேறு விரோத சக்திகளும், துரோக சக்திகளும் இணைந்து செயற்பட்டன. இதற்கு துணையாக எமது வரலாற்று எதிரியான சிங்கள இனவாத அரசுடன் வலிமை மிகுந்த வல்லரசுகளும் எமக்கு எதிராக அணிசேர்ந்து கொண்டன. அலை அலையாக வந்த எதிரியின் படைநகர்வுகளைக் கட்டுப்படுத்தி கடும் சமர் புரிந்து களமாடி வந்தனர் விடுதலைப்புலிகள். ஆனால் சதிகளாக, நாசச்செயல்களாக, நம்பிக்கைத் துரோகங்களாக, ஏமாற்றுப் படலங்களாக, அத்தனையும் ஒன்று சேர்ந்து ஒற்நேரத்தில் எமது விடுதலைக்காக போராடிவந்த தமிழீழ விடுதலைப் புலிகளை சூழ்ந்துகொண்டது.

இவை அனைத்தையும் தனித்து நின்று எதிர் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று அழிந்தது போன்ற ஒரு தோற்றப்பாட்டை கொண்டிருக்கிறது. இறுதிக்கட்ட போரில் பல ஆயிரக்கணக்கான போராளிகள் மாவீரர்களாகியிருந்தாலும் விடுதலைப்போர் வீழ்ந்துவிடவில்லை என்பதே உண்மை. என்னினும் பாரிய அழிவையும், பின்னடைவையும், கட்டுமான சிதைவையும் விடுதலைப்புலிகள் கண்டுள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை. அதற்காக வீழ்த்தப்பட்டதாக கொக்கரிக்கும் வீணர்களின் கதைகளை காதில் போட்டு குழப்பமடையாது காலத்தின் கட்டாயத்தால் சிலசமயங்களில் இல்லாமை போன்று ஒரு வெறுமை இருப்பதுவும் நல்லதுக்கே. அதற்காக அது உண்மையாகவே வெறுமையாகிவிட்டது என்று கணிப்பிட முடியாது. போரில் பின்னகர்வதுவும், இல்லாதது போல் மறைவதும் போரியல் வரலாற்றின் தந்திரங்கள்.

தலை இல்லை என்று வால் ஆடுவதையே அண்மைக்காலங்களில் அதிகம் பார்த்து வருகிறோம். தலை வெளியில் வரும் போது வால்கள் எங்கே போய் ஒளிந்து கொள்ளப்போகின்றது என்று காலம் பதிலளிக்கும்....

எமது தேசத்தின் விடுதலைக்காக நாம் கொடுத்த விலை ஒப்பற்றது. உலக விடுதலை வரலாற்றில் நிகரற்றது. இந்த மாவீரர்களின் சுதந்திர தாகம் அவர்களின் வீரச்சாவுடன் முடிந்துவிடாது அவர்களை தொடர்ந்து தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த விடுதலையை வென்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே ஒவ்வொரு மாவீரரும் விடுதலைக்கு வித்தாகி வீழ்ந்தனர். அவர்களின் அந்த கனவை நனவாக்க நாம் ஒரு சத்திய இலட்சியத்தில் பற்றுக்கொண்டு உறுதி கொண்ட மக்களாக ஒன்று திரண்டு நின்றால் எந்தவொரு சக்தியாலும் எம்மை அசைக்கவே முடியாது. வீர சுதந்திரம் வேண்டிநிற்கும் மக்களுக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.