ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நிலைப்பாடு குறித்த அறிவிப்பினை நாட்டின் பிரதான கட்சிகள் வெளியிட்டதன் பின்னர் என்னுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என்று கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதம அதிகாரிஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு வெளியேறிய ஜெனரல் சரத் பொன்சேகாவை வழிமறித்த ஊடகவியலாளர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்று அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் சரத் பொன்சேகா, எனது வாழ்நாளில் இதுவரை எந்தவொரு விடயத்திலும் நான் தோல்வி கண்டதேயில்லை என்றும் கூறினார்.
இது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு மேலும் கூறியதாவது:
ஜனாதிபதித் தேர்தலை எதிர்ப்பார்த்திருந்த நாட்டின் பிரதான கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமது பிரதான வேட்பாளர்கள் தொடர்பிலான கட்சிகளின் நிலைப்பாடுகளை இந்த நாட்களில் வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் அவர்களுடைய நிலைப்பாடகள் தொடர்பில் அறிவித்ததன் பின்னர் நான் என்னுடைய நிலைப்பாடு தொடர்பில் அறிவிப்பேன். அதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகின்றன.
நான் இதுவரையில் எந்தவொரு விடயத்திலும் தோல்வி கண்டதேயில்லை. என்னுடைய எதிர்கால தீர்மானம் குறித்து நான் இன்னமும் அறிவிக்கவில்லை. அதனை அறிவிக்க எனக்கு இன்னும் ஓரிரு தினங்கள் தேவைப்படுகின்றன. அதுவரையில் காத்திருக்குமாறு உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
எது எவ்வாறெனினும் பொதுமக்களின் தேவைகளை முன்னெடுப்பதற்கு என்னுடைய ஒத்துழைப்பினை அயராது வழங்குவேன். பொதுமக்கள் என்னிடம் எதையாவது எதிர்ப்பார்ப்பார்களாயின் அதனால் அவர்களுக்கு நன்மை கிடைக்குமாயின் அதற்காக என்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி உரிய தீர்மானத்தினை வெகு விரைவில் எடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.