நவம்பர் 27 மாவீரர் தினம்! வருடம் தவறாமல் விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் மட்டும் விமரிசையாக கொண்டாடும் இந்த தினத்தை, இம்முறை உலகெங்கும் கொண்டாடத் தயாராகியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். வரலாற்றில் புதிய பதிவாக அமையப் போகிற இந்த வருட மாவீரர் தினம் எத்தகைய திட்டங்களை ஈழ விடிவுக்காக விதைக்கப் போகிறது என கடந்த சில வாரங்களாகவே எதிர்பார்ப்பு பரவிக் கிடந்தது!
‘தலைவர்’ தோன்ற மாட்டார்!
நான்காம் கட்ட ஈழப் போரில் புலிகள் பெரிதாக வீழ்ச்சியடைந்து, ‘பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்’ என்று இன்னும்கூட ஒரு தரப்பினர் சொல்லிவரும் நிலையில்தான் மாவீரர் தினம் வருகிறது. பிரபாகரன், பொட்டு அம்மான், யோகி என்று மாவீரர் தின உரையை நிகழ்த்தப் போகும் புலித் தலைவர் பற்றிய யூகப் பட்டியலையும் ஆளுக்கொன்றாக பலர் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களோ இதனை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் அவர்களில் சிலரிடத்தில் பேசினோம்.
”ஒவ்வொரு வருடமும் தாயகத்தில் மட்டுமே நடக்கும் மாவீரர் தின நிகழ்வுகள் இந்த வருடம் உலகம் முழுவதும் பல்வேறு தேசங்களிலும் கொண்டாடப்படுவதே புலிகளின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றிதான். இதற்கு காரணமே, மீண்டும் வலுவான ஆயுதப் போராட்டம் தலையெடுக்கும் என்று புலிகள் அறிவிக்காமல் இருப்பதுதான். தற்போதைய சூழலிலும் அப்படியொரு தோற்றத்தையே தொடர நினைக்கிறார்கள் புலிகள். அதனால் தற்போதும் உயிரோடிருக்கும் புலிகளின் முக்கியத் தளபதிகள் யாரானாலும், அவர்கள் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றே கருதவேண்டியுள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எதிர்ப்படும் விளைவுகள் எப்படியிருக்கும் என முன் கூட்டியே கணித்த பிரபாகரன், சமர்க்கள ஆய்வு மைய இயக்குநராக இருந்த யோகியை அப்போதே ஓர் ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார். எதிர்காலத்தில் தான் வெளிப்பட முடியாத ஒரு பின்னடைவு உண்டானாலும்கூட, இயக்கத்தின் எதிர்காலக் கொள்கைகளை சூழலுக்குத் தகுந்தவாறு வெளிப்படுத்தும் அதிகாரத்தை யோகிக்கு மட்டுமே தலைவர் வழங்கியிருந்தார். யோகி தன்னை வெளிப்படுத்தினாலும், வெளிப்படுத்தாவிட்டாலும் மாவீரர் தினத்தில் வெளியாகப் போகும் கொள்கைகள் என்னவோ யோகி வகுத்தவையாகத்தான் இருக்கும்.
அதேசமயம், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக போரின் கடைசிக் கட்டத்தில் எடுக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள தமிழர்கள் மத்தியில் இந்தப் படமும், இதையட்டிய ஊகத் தகவல்களும் ஒரு புதிய உற்சாகத்தை விதைத்து எதிர்பார்ப்பைக் கூட்டின என்பதையும் மறுக்க முடியாது!” என்கிறார்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை!
மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ‘பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்’ என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமாக வலம் வருகிறதாம். ”இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள். அப்போது, அந்த ஊடறுப்புத் தாக்குதலில் கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவத்தினாலும்கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்தத் தாக்குதலின் ஊடாகத்தான் பிரபாகரன் தப்பித்ததாகச் சொல்கிறது அந்த சி.டி.
”இக்கட்டான சமயத்தில் களத்தைவிட்டு வெளியேறுவதில் பிரபாகரனுக்கு உடன்பாடே கிடையாது. ஆனாலும், அவரது மகனான சார்ள்ஸ் அன்டனிதான் பிரபாகரனின் பிடிவாதத்தைத் தளர்த்தினார். ‘உங்களிடத்தில் நான் நின்று, களத்தை வழி நடத்துகிறேன். நீங்கள் வெளியேறுங்கள்!’ என சார்ள்ஸ் சொன்ன பிறகுதான் பிரபாகரன் வெளியேறினார்” என்று கூறும் குறுந்தகடு ‘விநியோகஸ்தர்’கள், மேற்கொண்டு தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாறு கூறி வருகிறார்கள் -
”போர்க்களத்தில் பிரபாகரனுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது சிங்கள இனத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்தான். அவரை சிங்களப் புலி என்றுதான் பிரபாகரன் அழைப்பாராம். அந்த மருத்துவர் மற்றும் பொட்டு அம்மான், சூசை ஆகியோருடன் ஆபிரிக்க கண்டத்துக்கு அருகிலுள்ள ஒரு தீவுக்குச் செல்ல முடிவெடுத்தாராம் பிரபாகரன். அந்த சமயத்தில் பிரபாகரனின் மெய்க்காவல் படைப்பிரிவான இம்ரான் படைப்பிரிவைச் சேர்ந்த சுமார் 600 கரும்புலி வீரர்கள் பிரபாகரனை சூழ்ந்திருந்தார்களாம். பெரிய அளவில் வெடி பொருட்களை உடம்பில் கட்டிக்கொண்டு படுவேகமாக பைக்கில் சென்று சிங்களத் துருப்புகளின் மீது விழுந்து மிகப்பெரிய தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்களாம். கிட்டத்தட்ட 280 கரும்புலி வீரர்கள் மரணமடைய… இராணுவத்தை நிலைகுலைய வைத்து, பூநகரி நீரேரி வழியாகத் தப்பித்தாராம் பிரபாகரன்.
இருந்தாலும், இராணுவம் சுட்டதில் ஒரு குண்டு பிரபாகரனின் வயிற்றுப் பகுதியில் தாக்க, அவருக்கான சிகிச்சையை உடனடியாக வழங்கினாராம் மருத்துவர் சிங்களப்புலி. பிறகு அந்தக் காயத்துடனேயே நீர்மூழ்கி கப்பல் வழியாக குறிப்பிட்ட தீவுக்குச் சென்று விட்டார்களாம் மூவரும். சிங்களப் புலி டாக்டரின் குடும்பமும் தற்போது தமிழகத்தின் ஒரு நகரத்தில்தான் வசிக்கிறதாம்” என்று கூறுகிறார்கள் இவர்கள்.
இம்ரான் படைப்பிரிவில் இருந்து போரிட்டு, காயம்பட்டுத் தப்பிய ஒரு புலியின் வாக்குமூலம் என்று ஒரு காட்சியையும் அந்த சி.டி-யில் இணைத்திருக்கிறார்களாம். ”பிரபாகரன் குறிப்பிட்ட அந்த தீவுக்குப் போன சமயம், பிரபாகரனின் இரண்டாவது தங்கை வினோதினி வசிக்கும் கனடா வீட்டில்தான் மதிவதனியும், துவாரகாவும், பாலச்சந்திரனும் இருந்தார்கள். ஆனால், சர்வதேசப் புலனாய்வு அமைப்புகளின் தொடர்ந்த கண்காணிப்பினால், பின்பு அவர்கள் கனடாவிலிருந்து அயர்லாந்து சென்றுவிட்டனர். பிறகு அங்கிருந்தும் கிளம்பி, தற்போது பிரபாகரனுடன் வந்து சேர்ந்து, குறிப்பிட்ட அந்தத் தீவிலேயே இருந்து வருகிறார்கள். நேரமும் காலமும் கனிந்து வரும்போது பிரபாகரன் தன்னை அங்கிருந்து வெளிப்படுத்துவார்” என முடிகிறதாம் அந்த இரகசிய சர்க்குலேஷன் சி.டி!
இந்தியாவின் துணையோடு இலங்கையில் போர்!
‘விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்’ என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் ‘இலங்கையில் மீண்டும் போர் மூளும் – அதுவும் இந்தியாவின் துணையோடு’ என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் புலிகள் தரப்பில்.
‘போர் முடிவுக்கு முன்பும் பின்புமான காலகட்டத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவு முற்றிலுமாக மாறிவிட்டது. ஆயுதத் தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை போரின்போது இலங்கைக்கு வழங்கியது இந்தியா. இதற்கு பிரதிபலனாக நான்கு விஷயங்களை இலங்கையிடம் கோரியிருந்தது. அந்தமான் தீவுகளுக்கு அருகில் சில நாட்டிக்கல் மைல் தொலைவில் தொடங்கி இலங்கையின் முல்லைத்தீவு வரை நீளும் கடற்பகுதிக்கு அடியில் எண்ணற்ற படிமங்களும் ஏராளமான கடல் வளங்களும் குவிந்து கிடக்கின்றன. இந்த கடற்பகுதியை கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க வேண்டும்; போரில் சீர் குலைந்திருக்கும் வட பகுதியை முழுவதுமாக கட்டமைக்கும் கான்டிராக்ட் பணிகளை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கை ரயில்வே துறையை இயக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டும்; இலங்கையில் எட்டு இடங்களில் துறைமுகம் உள்ளிட்ட சில வேலைகளைச் செய்வதற்கு இந்தியாவை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் அந்த நான்கு கோரிக்கைகள்.
போர் முடியும்வரை இதற்கு தலையாட்டி வந்த சிங்கள அரசு, இப்போது சீனாவின் குரலுக்குத் தலையாட்டும் பொம்மையாகிவிட்டது. கடல் நீர் எல்லை ஆதாரச் சட்டத்தைக் காரணம் காட்டி, அந்தமான் டு முல்லை தீவு கடல் பகுதியைக் கையாளும் உரிமையை இந்தியாவுக்கு வழங்க மறுக்கும் ராஜபக்ஷே, மற்ற மூன்று கோரிக்கை களையும்கூட மறுத்து விட்டார். இதனால், இலங்கையுடனான உறவில் இந்தியாவுக்கு விரிசல் விழுந்திருக்கிறது. அதேசமயம், சீனாவுடனான உறவை இலங்கை வலுப் படுத்தத் தொடங்கியிருப்பதையும் எரிச்சலுடன் பார்க்கிறது.
அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப் பணி நடத்தும் பொறுப்பும் சீனாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தி துறையின் அபிவிருத்திருக்கு 891 மில்லியன் டொலர்களையும், நெடுஞ்சாலை மற்றும் எண்ணெய் அகழ்வு பணிகளுக்கு 350 மில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு கடனாக வழங்கியிருக்கிறது சீனா. அதோடு, வடபகுதியில் மொத்தம் 1.25 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா, மொத்தமாக இலங்கைக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்கியிருக்கிறது. இலங்கை உலகம் முழுவதும் வாங்கியிருக்கும் கடனுக்கு நிகரான தொகையை சீனா தனிப்பட்ட முறையில் கடனாக வழங்கியிருக்கிறது. இதற்குப் பிரதியுபகாரமாக சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான ‘றோ’ மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.
வெடிக்கும் பொன்சேகா!
அதிபர் தேர்தலுக்குத் தயாராகிவரும் பொன்சேகா, சமீபத்தில், கொழும்பிலுள்ள ஒரு பத்திரிகைக்கு இப்படி பேட்டியளித்திருக்கிறார். ”எனது பாதுகாப்பு படையை 25 ஆட்களாகக் குறைத்தபோது, நான் எதிர்த்தேன். பின்பு 60 பேராக அதிகரித்தபோதும் பாதுகாப்பில்லை என தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்பு படையினரை ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்கள் யாரையும் இது வரை நான் பார்த்ததுகூட கிடையாது. அவர்கள் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என சந்தேகிக்கிறேன்!” என பொன்சேகா கொந்தளிக்க, அவசரகதியாக அதனை மறுத்திருக்கிறது சிங்கள அரசு. ‘நாட்டுக்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்த என்னை, அரசு இப்படியெல்லாம் அவமானப்படுத்தலாமா?’ என பொன்சேகா எழுப்பியிருக்கும் கேள்வி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபத்தைக் கிளப்பியிருக்கிறதாம்.
இதற்கிடையில் பொன்சேகாவே சில ஆட்களைவிட்டுத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு அரசாங்கத்தின் மீது பழி போடலாம் என்பதால், அவரது பாதுகாப்பை திடீரென உயர்த்தியிருக்கிறார்களாம். இந்நிலையில், தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக, கொழும்பு ரோயல் கல்லூரி அருகில் ஒரு தேர்தல் அலுவலகத்தை திறக்கவிருக்கிறாராம் பொன்சேகா. பொதுவேட்பாளர் பற்றி வாய்திறக்காமல் இருந்து வந்த முக்கியக் கட்சியான ஜே.வி.பி-யும் தற்போது பொன்சேகாவை பொதுவேட்பாளராக களமிறக்கத் தயார் என வெளிப்படையாக அறிவித்திருக்கிறது!
இந்தியாவுக்கு மூன்று புறம் ஏற்கெனவே சீனாவால் பலமான ஆபத்து உள்ளது. வடபகுதியில் இருக்கும் சீனா… மேற்கில் பாகிஸ்தானில் மூன்று இராணுவத் தளங்களையும், கிழக்கில் பங்களாதேஷில் இரண்டு இராணுவத் தளங்களையும் ஏற்கெனவே நிறுவியிருக்கிறது. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாத ஒரே பகுதியாக இருந்து வந்த தெற்கிலும் தற்போது இலங்கையின் ஆதரவினால் கச்சத்தீவில் இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறது.
மொத்தத்தில் இலங்கையில் தற்போது வரப்போகும் தேர்தலில் ராஜபக்ஷே, பொன்சேகா என யார் ஜெயித்தாலும் சரி… இந்தியாவுக்கு அது ஒருவகையில் தோல்வியாகவே முடியும் நிலை! இதெல்லாம், புலி ஆதரவாளர்களால் ஏற்கெனவே தீர்க்கதரிசனத்தோடு சுட்டிக் காட்டப்பட்ட எச்சரிக்கைகள்தான். இப்போது சூடு கண்ட நிலையில், தன் பார்வையை மாற்றிக் கொள்ளத் தொடங்கியுள்ளது இந்திய அரசு” என்று கூறும் புலி தரப்பினர்,
”இதையெல்லாம் ஊன்றி கவனிக்கிறார்கள் எஞ்சியுள்ள புலித் தலைவர்கள். இலங்கையில் மீண்டும் ஓர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முனையும். அதற்கு தோதாக புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து, ஆயுதம் மற்றும் யுத்த தந்திர உதவிகளையும் இந்திய அரசு செய்வதற்கு முன்வரும் என்று எதிர்பார்க்கிறோம். கிட்டத்தட்ட, இலங்கையின் வரலாற்றுச் சக்கரம் ஆரம்பத்திலிருந்து சுழலும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு!” என்கிறார்கள்.
‘யுத்தத்தை யார் புலிகள் தரப்பில் நடத்துவார்கள்?’ என்ற கேள்விக்கும் இவர்களிடம் பதிலுண்டு!
”சில மாதங்களுக்கு முன்பு, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிய சமயம் புலிகளின் இராணுவத் துறை, புலனாய்வுத் துறை, அரசியல் துறை பொறுப்பாளர்களை அழைத்தார் பிரபாகரன். அப்போது ‘இராணுவத் துறை இறுதி வரை களத்தில் நின்று போரிட வேண்டும்; போரின் நிறைவில் அரசியல் துறையினர் உலக நாடுகளுக்கு நமது கொள்கைகளையும், சிங்களப்படையின் போர்க்குற்றங்களையும் விளக்க வேண்டும்; அதற்காக புலனாய்வுத் துறையினர் மட்டும் முழுவதுமாகத் தப்பிவிட வேண்டும்’ என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை.
அதன்படி, பொட்டு அம்மானில் தொடங்கி கதிர்காமத்தம்பி அறிவழகன், பாலசிங்கம், இராஜரத்தினம், அண்டு வேல்மன், இளங்கப்பிள்ளை, வீரசிங்கம், ரஞ்சித் பெர்ணாண்டோ, டேவிட் பூபாலபிள்ளை, லூகாஸ் பாலசிங்கம், நடராசா மதிதரன், ஜேம்ஸ் கருணாகரன், சதியன் குமரன், பாலச்சந்திரன், ஜெகன்மோகன் உள்ளிட்ட புலனாய்வுப்பிரிவின் முக்கியத் தளபதிகள் 57 பேர் உலக நாடுகள் முழுவதிலும் சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சமயம் பார்த்து வெளியில் வருவார்கள்” என்பதே இவர்கள் தரும் நம்பிக்கையான விளக்கம்!
- ஜூனியர் விகடன்
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.