Tuesday, October 06, 2009

இரகசியப் பேச்சுக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடப் போவதாக அச்சுறுத்தியதால்தான் தயா மாஸ்டர் விடுதலை: ரணில்

[செவ்வாய்க்கிழமை, 06 ஒக்ரோபர் 2009]

சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரகசியப் பேச்சுக்கள் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அச்சுறுத்தியதையடுத்தே அந்த அமைப்பைச் சேர்ந்த தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தென் மாகாணத்தில் உள்ள தெல்தெனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததுடன், அரச தலைவரின் செயலாளருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வன்னியில் இடம்பெற்ற பேச்சுக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறும் அரசை கேட்டுக்கொண்டிருக்கின்றார்.

தயா மாஸ்டர் இவ்வாறு அச்சுறுத்தியதையடுத்தே முன்னாள் சட்டமா அதிபர் இந்த இருவரும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை எனத் தெரிவித்து அவர்களைப் பிணையில் விடுவித்திருக்கின்றார் எனவும் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, 2005 ஆம் ஆண்டு அரச தலைவருக்கான தேர்தலை எதிர்கொண்ட வேளையில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இரகசியப் பேச்சுக்களின் விபரங்களை அரசு வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக யாராலும் நிறுத்த முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, 2002 ஆம் ஆண்டில் தான் பிரதமராக இருந்த காலத்தில் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டதாகவும், அதனாலேயே இந்த நீதிமன்றத்தின் முன்பாக சிறிலங்காவை நிறுத்த முடியாத நிலையில் அனைத்துலக சமூகம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

"எனது இந்த தீர்க்க தரிசனமான நடவடிக்கையின் காரணமாகவே எமது வீரம் நிறைந்த படையினரைப் பாதுகாக்கக் கூடியதாக இருந்துள்ளது" எனவும் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, "ஆனால், அமெரிக்கா தனது குடிமக்களை போர்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்த முடியும்" எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் கிடைத்துள்ள படைத்துறை வெற்றிகளுக்கு தாமே காரணம் என அதன் முழுமையான நலன்களையும் பெற்றுக்கொள்வதற்கு அரச தரப்பு அரசியல்வாதிகள் முயன்று வருகின்றார்கள் எனவும் குற்றம் சாட்டிய ரணில் விக்கிரமசிங்க, "பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போரில் தமது உயிர்களை அர்ப்பணித்த கிராமப் பகுதிகளைச் சேர்ந்த வீரம் மிக்க இளைஞர்களைப் புறக்கணித்துவிடுகின்றது" எனவும் குறிப்பிட்டார்.

அரசியல் அதிகார ஆசை காரணமாக சில அரசியல் கட்சிகளை அழித்துவிடும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர், "ஆனால், எமது கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினாலும் கூட எமது கட்சி சிறிலங்காவின் அரசியலில் தொடர்ந்தும் தீவிரமான ஒரு பங்களிப்பை வழங்கும்" எனவும் குறிப்பிட்டார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.