தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறிலங்கா தோற்கடித்ததால் முழு உலகமுமே பெருமளவில் பயனடைந்துள்ளது என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
"தனியாளாக நின்று எமது படையினர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் உலக சமூகம் பெருமளவில் பயனடைந்துள்ளது. சிறிலங்காப் படையினர் ஆற்றிய இந்தச் செயலுக்காக அவர்கள் பாராட்டப்பட வேண்டும். அவர்கள் திட்டப்படக்கூடாது. தோற்கடிக்கப்படவே முடியாத இயக்கம் என எல்லோரும் நினைத்திருந்த ஒரு அமைப்பை அவர்கள் வெற்றி கொண்டுள்ளார்கள்" என்றார் மகிந்த.
தென் மாகாண சபைத் தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. மாத்தறையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு மகிந்த உரையாற்றினார். அப்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
சிறிலங்காப் படையினர் தொழில்முறையில் மிகச் சிறந்தவர்கள் என்பதையும் ஒழுக்கத்தில் மேலானவர்கள் என்பதையும் போரின் போது நிரூபித்துள்ளனர். புலிகளிடம் இருந்து 3 லட்சம் மக்கள் தப்பி வந்தபோது அவர்களில் காயமடைந்தவர்களையும் முதியவர்களையும் தங்கள் கைகளில் தாங்கிச் சென்று படையினர் எப்படிக் கவனித்து கொண்டார்கள் என்பதை முழு உலகமுமே பார்த்தது.
தீவிரவாதத்திற்கு எதிரான போரை முன்னெடுத்த அதே சமயத்தில் அபிவிருத்தித் திட்டங்களை எமது அரசு புறக்கணித்துவிடவில்லை. 4 மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான நீளமுள்ள முதன்மைச் சாலைகள், குறுக்குச் சாலைகள், மாகாண சாலைகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. தெற்கிற்கான அதிவிரைவு சாலையை அமைக்கும் பணிகள் விரைவிலேயே முடியப்போகின்றன.
கொழும்பு - கண்டி அதிவிரைவு சாலை, கொழும்பு - கட்டுநாயக்க அதிவிரைவு சாலை மற்றும் கொழும்பு நகரைச் சுற்றிய வெளிப்புறமான சாலை என்பவற்றை அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
இவற்றைவிட இந்த அரசிடம் இருந்து எதிர்க்கட்சியினரும் உலகும் வேறு எதனை எதிர்பார்க்கின்றன என கேள்வி எழுப்பினார் மகிந்த ராஜபக்ச.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.