Thursday, October 15, 2009

பிரபாகரன் மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு தள்ளிவைப்பு: இறப்பு சான்றிதழ் கிடைத்தவுடன் 17 ஆண்டு விசாரணை முடிவுக்கு வரும்

[வியாழக்கிழமை, 15 ஒக்ரோபர் 2009]

ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை செசன்சு நீதிமன்றம் அடுத்த மாதம் நவம்பருக்கு தள்ளி வைத்துள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் ராஜீவ்காந்தி, படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அத்துடன் பொட்டு அம்மான், அகிலா, நளினி, முருகன் உட்பட பலர் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.

சி.பி.ஐ. பொலிஸார் வசம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தடா நீதிமன்றம் அமைக்கப்பட்டு, இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் சிக்கவில்லை. எனவே,கைது செய்யப்பட்ட நளினி, முருகன் உட்பட சிலர் மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தனியாக பிரிக்கப்பட்டது

கடைசி வரை இந்த வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் பிடிபடவில்லை.

எனவே, அவர்கள் மீதான வழக்கு 1992ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனியாக பிரிக்கப்பட்டது. பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு தனியாகவும், அகிலா மீதான வழக்கு தனியாகவும் பிரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இலங்கையில் அகிலா மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடம் இருந்து சி.பி.ஐ. பொலிஸார் பெற்றனர். முதலாம் கூடுதல் செசன்சு நீதிமன்றில் அதை ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து 2003 ம் ஆண்டில் அகிலா மீதான வழக்கு கைவிடப்பட்டது.

17 ஆண்டுகளாக

பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு மட்டும் தொடர்ந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் அண்மையில் பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் நவம்பர் 25ஆம் திகதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். இந்த வகையில் 17 ஆண்டுகளாக வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

முடிவுக்கு வரும்

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற போரில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து பொட்டு அம்மானும் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, இவர்களின் இறப்பு சான்றிதழைக் கேட்டு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. வற்புறுத்தி வருகிறது. இறப்பு சான்றிதழை இலங்கை அரசு கொடுத்தால், அதை நீதிமன்றில் சி.பி.ஐ. தாக்கல் செய்த பிறகே, பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு வரும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.