[புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2009,]
தமிழீழ விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாகத் தோற்கடித்து விட்டபோதும் அதன் வெளிநாட்டு வலையமைப்பு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கின்றது எனக் கருதும் சிறிலங்கா அரசு, அதனை அழித்தொழிப்பதற்கான இராஜரீக ரீதியான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
நிதி திரட்டல் மற்றும் கொழும்புக்கு எதிரான போராட்டங்கள் வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்களால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சிறிலங்கா அரசுக்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றது. இவற்றுக்குப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களே செயற்படுகின்றன என கொழும்பு நம்புகின்றது.
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலரும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனருமான செல்வராசா பத்மநாதனின் கைதுடன் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டுவிடும் என சிறிலங்கா அரசு எதிர்பார்த்தது. ஆனால், வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களின் நடவடிக்கைகள் இன்னும் செயல்திறனுடன் இருக்கின்றன. எனவே புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களைத் தகர்த்துவிடுவதற்கு அரசு பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றது எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரிகள் அனைவரும் முழு வீச்சில் செயற்படுமாறு கோராப்பட்டுள்ளனர். நன்கு கட்டமைக்கப்பட்ட 12 அமைப்புக்கள் ஊடாக உலகில் உள்ள 44 நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு பலமான நிலையில் இருப்பதாக, பயங்கரவாதம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சானக ஜெயசேகர தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளைக் கவனித்து வரும் ஐயா அண்ணா என்பவரின் செய்மதி தொலைபேசி உரையாடல்கள் பலவற்றை அண்மைக் காலங்களில் சிறிலங்கா உளவுத்துறையினர் ஒட்டுக்கேட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
மேற்குலக நாடுகளில் நிதி சேகரிப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை ஐயா அண்ணா குழுவே கட்டுப்படுத்தி வருவதாக சிறிலங்கா அதிகாரிகள் கூறுகின்றனர். அண்மையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உறங்கு நிலையில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு ஐயா அண்ணா பேசினார் என புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறினர். போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகுமாறு அவர்களை ஐயா அண்ணா கேட்டுக்கொண்டார் எனவும் கூறப்படுகின்றது. தாக்குதல்களுக்கு இப்போது திரும்பிச் செல்வது குறித்து அவர் எச்சரிக்கையாக இருக்கின்றார் என்றும் மீள ஒருங்கிணையும் தொடக்க நிலையில் புலனாய்வுத்துறையினரிடம் பிடிபடுவதை தவிர்க்க அவர் விரும்புகிறார் எனவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் நிதி சேகரிப்பை மீண்டும் தொடங்குமாறு அங்குள்ள புலி உறுப்பினர்களிடம் ஐயா அண்ணா கேட்டுள்ளார் எனவும் அரச புலனாய்வுத்துறையினர் கூறினர். இந்நிலையில், புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை உடைத்தெறியும் நோக்குடன் சிறிலங்கா அரசு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் முதற்கட்டத்தை சோதனை செய்து பார்க்கும் வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த சட்டவாளரும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழுவின் இணைப்பாளருமான விசுவநாதன் உருத்திரகுமாரனை நாடு கடத்துமாறு அமெரிக்காவிடம் அதிகாரபூர்வமான கோரிக்கையை விடுப்பதற்கு சிறிலங்கா அரச திட்டமிட்டு வருகின்றது.
அதேசமயம், விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தின் முக்கிய மையமாக விளங்குவதாகத் தெரிவிக்கப்படும் எரித்திரியாவில் தனது தூதரகத்தைத் திறப்பதற்கும் கொழும்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த நாட்டுக்கான முதலாவது தூதுவராக தரைப்படை புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விரைவில் நியமிக்கப்பட உள்ளார் எனச் செய்திகள் கூறுகின்றன. அது தவிர விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகம் உள்ள நாடுகளில் தமது நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் கொழும்பு தீவிரமாக முயன்று வருகின்றது.
Wednesday, September 16, 2009
புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பைத் தகர்க்கும் முயற்சியில் சிறிலங்கா
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.