Wednesday, September 16, 2009

போர் முடிந்து 4 மாதங்கள் கடந்தபோதும் கருத்து இணக்கத்திற்கான நடவடிக்கைகள் இல்லை: சிறிலங்காவின் துன்பப்படும் தமிழர்கள் அமைப்பு அதிருப்தி

[புதன்கிழமை, 16 செப்ரெம்பர் 2009] இலங்கையில் மோதல்கள் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஓடிவிட்டபோதும் நாட்டில் இனங்கள் இடையே கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 'சிறிலங்காவின் துன்பப்படும் தமிழர்கள்' அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது. "போர் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டபோதும், இனங்களுக்கு இடையில் கருத்து இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எவையும் இதுவரை தொடங்கப்படவில்லை என்பது கடும் அதிருப்தியளிக்கிறது. அதேசமயம், போரில் தொடர்புபடாத பல லட்சம் தமிழ் மக்கள் நீண்டகாலமாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதும் பலர் சட்டத்திற்குப் புறம்பாக அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போவது, அத்தகைய முயற்சிகளுக்கு சாதகமான பலனைத் தராது என்பதுடன் அதன் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும்" என அந்த அமைப்பு கூறியுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 'சிறிலங்காவின் துன்பப்படும் தமிழர்கள்' அமைப்பு வெளியிடும் ஐந்தாவது அறிக்கை இது. வன்னியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பெரும் துன்பங்களைச் சந்தித்தனர் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அமைப்பு, எதிர்வரும் பருவ மழை காலம் பெரும் மனித அவலத்தை அங்கு உண்டுபண்ணப் போகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது. முகாமில் உள்ளவர்கள் பெரும் எடுப்பில் தொடர்ச்சியாகக் காணாமல் போவது மற்றும் பல்வேறு வழிகளில் வெளியேற்றப்படுவது என்பன அங்கு பெரும் அரசியல் பிரச்சினையாக மேற்கிளப்பி வருகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய, இனங்களுக்கு இடையிலான கருத்து இணக்க நடவடிக்கைகளைக்கூடப் பாதிக்கும் எனவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.