Saturday, September 19, 2009

சொந்த இடங்களில் மக்கள் குடியமர்ந்தாலே கிழக்கில் மீள்குடியேற்றம் முழுமையுறும் : முன்னாள் எம்.பி.


[சனிக்கிழமை, 19 செப்ரெம்பர் 2009,]

மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்கள் தமது சொந்த கிராமங்களில் மீளக் குடியேறும் போது தான் கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றம் என்பது முழுமையடையும்" என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா கூறினார்.

மூதூர் இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம் மட்டக்களப்பு கொக்குவில் இடைத்தங்கல் முகாமில் ஏற்பாடு செய்த 'உதவியவர்களுக்கு நன்றி' நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றிய போது,

"கிழக்கு மாகாணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த மக்களுக்கு சகலரும் விரும்பியவாறு நிவாரண உதவிகளை வழங்கக் கூடியதாக இருந்தது.

முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் சுதந்திரமாக நடமாடக்கூடியதாக இருந்தது. ஆனால் வன்னியில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாமல் முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றார்கள். உங்களுடன் ஒப்பிடும் போது அவர்களை விட நீங்கள் மேலான நிலையிலேயே இருக்கின்றீர்கள்.

மூதூர் பிரதேசத்திலிருந்து 2006ஆம் ஆண்டு இடம் பெயர்ந்தவர்களில் அநேகமானோர் தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற்றப்பட்டு விட்டார்கள்.

ஆனால் சம்பூர், கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குடும்பங்கள் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக சொந்த இடங்களில் மீளக் குடியமர முடியாதவர்களாக உள்ளனர்.அவர்களும் தமதுசொந்த கிராமங்களில் மீளக் குடியேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்" என்றும் குறிப்பிட்டார்.

சங்கத் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - திருமலை ஆயர் பேரருட்திரு. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, எகெட் நிறுவன பணிப்பாளர் அருட்தந்தை சில்வெஸ்டர் ஸ்ரீதரன், புனர்வாழ்வுத் திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். ஷெரீப் உட்படப் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.